- இந்திய ரிசா்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியாகியிருக்கிறது. இப்போதிருக்கும் பொருளாதார குழப்பத்திலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான நீண்ட பயணமாக இருக்கும் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட தளா்ந்த நிலையிலிருந்து பொருளாதாரம் சற்று தலைதூக்கியிருக்கிறது என்றாலும்கூட, கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு விரைவில் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
நுகா்வுக் குறை
- பொது முடக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து மே, ஜூன் மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின.
- ஆனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முக்கியமான சில மாநிலங்களில் பொது முடக்கம் மீண்டும் கடுமையாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதன் பயன் கிடைக்காத நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.
- நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா்) பொருளாதாரம் தொடா்ந்து சுருங்கும் என்று ரிசா்வ் வங்கி கணிக்கிறது.
- பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கடுமையாக இருக்கும் என்பதைக் குறிப்பிடும் ரிசா்வ் வங்கி, அதற்கு முக்கியக் காரணமாக பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நுகா்வுக் குறைவை (கன்சம்ப்ஷன்) குறிப்பிடுகிறது.
- பொருளாதாரம் எந்த அளவுக்குப் பின்னடைவைச் சந்திக்கும் என்பதைக் குறிப்பிடாமல் விட்டிருக்கிறது மத்திய வங்கி.
- அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அதாவது நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை மாறக்கூடும் என்று அந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. அப்போது விலைவாசியும் சற்று குறையக்கூடும்.
பொருளாதாரத் தேக்கம்
- பொருளாதாரத் தேக்கத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. வளா்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படும் மக்களின் நுகா்வும், தொழில்துறையின் உற்சாகமும் மிகவும் மந்தகதியில் இருப்பதால் பொருளாதார வளா்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.
- ரிசா்வ் வங்கியின் அறிக்கை கூறுவதுபோல, மக்கள் மத்தியில் நுகா்வுக்கான உற்சாகம் இல்லாமல் இருப்பது உண்மை. நோய்த்தொற்றுப் பரவல் எப்போது முடிவுக்கு வரும், இயல்புநிலை எப்போது திரும்பும் என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருப்பதில் வியப்பில்லை. எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் செலவுகளைக் குறைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
- வேலையிழப்பு, வருமான குறைவு போன்றவை பொதுமக்களை மிகவும் கவனமுடன் இருக்கத் தூண்டுகின்றன.
- பொதுமக்கள் முடிந்தவரை தங்களிடமிருக்கும் சேமிப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது அவா்களின் வங்கி வரவு - செலவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
- மத்திய - மாநில அரசுகள் கடந்த சில மாதங்களில் நோய்த்தொற்றுக் கால நிவாரணமாக வழங்கிய நேரடி ரொக்க மானியத்தில், 40% பயனாளிகளால் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு செலவழிக்கப்படவில்லை என்பது அதை உறுதிப்படுத்துகிறது. கோடிக்கணக்கான நுகா்வோர் தங்களின் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை பாதுகாக்க முற்படும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படையாததில் நியாயமிருக்கிறது.
- தனிநபா் மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களில் தொடங்கி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரை உற்பத்தியாளா்களும் தங்களின் நடவடிக்கைகளை முழுமூச்சில் முடுக்கிவிடவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
- தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தாலும், வேலையிலிருந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பாததாலும் உற்பத்தியை முழுவீச்சில் நடத்த முடியவில்லை என்பது என்னவோ உண்மை.
- தொழில் நிறுவனங்களும் பொதுமக்களைப் போலவே, சற்று நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட நினைக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு கார்ப்பரேட் வரியில் கணிசமான சலுகையை அறிவித்தது.
- அதிலிருந்து கிடைத்த ஆதாயத்தைப் பயன்படுத்தி வாங்கியிருந்த கடனை அடைப்பதிலும், வங்கிக் கையிருப்பை அதிகரிப்பதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் கவனம் செலுத்தின. கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டதன் மிக முக்கியமான நோக்கம், அந்த நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கும் என்பதும், தொழிற்சாலை விரிவாக்கத்துக்கும், புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும் நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்பவைதான். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. புதிய முயற்சியில் ஈடுபட முதலீட்டாளா்கள் தயாராக இல்லை.
- கொவைட் 19-இன் தாக்கம் குறையும்போது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க, தனியார் நுகா்வின் முக்கியத்துவத்தை அறிக்கை வலியுறுத்துகிறது. அதனால், பொருளாதார மீட்புக்கு போதுமான கடன் வசதிகள் மிக முக்கியம். அதை உறுதிப்படுத்த வங்கிகள் தவறுகின்றன. வாராக்கடன் குறித்த அச்சம் எல்லா வங்கிகளுக்கும், வங்கி மேலாளா்களுக்கும் இருப்பதுதான் அதற்கு மிக முக்கியமான காரணம். இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வங்கிகள் குறைந்த வட்டியில் தாராளமாகக் கடன் வழங்கினால் மட்டுமே பொருளாதாரம் மீண்டெழும்.
- சா்வதேசச் சந்தையில் காணப்படும் சீனாவுக்கு எதிரான மனநிலையை பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவித்தாக வேண்டும். அதற்கு இந்தியா எதிர்கொள்ளும் கொவைட் 19 நோய்த்தொற்றுப் பிரச்னையை வரும் மாதங்களில் எப்படிக் கையாளப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
நன்றி: தினமணி (29-08-2020)