TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கை என்ன சொல்கிறது?

August 16 , 2021 1172 days 924 0
  • நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு, திங்கட்கிழமையன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் நிதி நிலையைத் தெளிவாக விளக்கும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
  • தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமை, வரும் நிதியாண்டில் சுமார் ரூ.6 லட்சம் கோடியை நெருங்கும் என்பது இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
  • அதைத் தவிர, தமிழ்நாடு மின்வாரியமும் போக்குவரத்துக் கழகங்களும் வாங்கிய கடன்களின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி. இந்த இரண்டு பொது நிறுவனங்களின் இன்றைய நிலைக்கு மிக முக்கியக் காரணம், அவற்றின் செயல் செலவினங்கள், செயல் வருவாயைவிட அதிகமாக இருப்பதுதான்.
  • தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை, இதர செலவினங்களுக்கு ஏற்றவாறு மின்சாரம், பேருந்துக் கட்டணங்கள் பல ஆண்டுகளாக மாற்றப்படாததும் முக்கியக் காரணிகளாகும்.
  • அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயும், வரியில்லா வருவாயும், ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய வரிப் பங்கும், ஜிஎஸ்டி இழப்பீடும் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகின்றன.
  • இதனால், மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளன. நிதிப் பற்றாக்குறை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது.
  • இதைச் சரிசெய்யும் விதமாகச் சில விஷயங்களில் பெரும் மாற்றம் கொண்டுவர வேண்டியிருக்கும் என்பதையும், கூடுதலாக, தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
  • இதைத் தவிர, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும் செலவினங்களையும் ஈடுகட்டுவதற்கான புதிய அரசின் செயல்திட்டங்கள் என்ன என்ற கவனிப்பும் தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான ஆவலைத் தூண்டியிருந்தன.
  • அந்த வகையில், மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் பல முக்கியத் திட்டங்களும், தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட சில நலத் திட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

என்ன சொல்கிறது இந்த அறிக்கை?

  • எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில், பெட்ரோல் மீதான மாநில வரியைக் குறைத்ததன் மூலம், அதன் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.
  • அதனால், அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு எனவும், குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைப் பயனாளர்கள் குறித்த ஒழுங்கான தரவுகள் திரட்டப்பட்ட பின் செயல்படுத்தப் படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் சில திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லாதது அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்ற உண்மையை வெளிக்காட்டுகிறது.
  • மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருமான விகிதம் 2006-07-ல் 8.48%ஆக இருந்தது 2020-21-ல் 5.46%ஆகக் குறைந்துள்ளதை வெள்ளை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது, அதே சமயம், மொத்த உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை விகிதம் 2020-21-ல் 3.16%ஆக இருப்பது வருவாய் செலவினங்கள் ஏற்கெனவே குறைவாக இருப்பதையும் மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையும் தெளிவாக்குகிறது.
  • அதே சமயம், வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகளில் சில சீர்திருத்தச் சிக்கல்களும் தடைகளும் உள்ளன. குறிப்பாக, பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், எந்த ஒரு வரிவிதிப்பும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
  • அதனோடு மாநில வருவாய்க்கு மிக முக்கியக் காரணிகளான மின்சாரம், போக்குவரத்து, மோட்டார் வாகனம், மது விற்பனை, பெட்ரோல், டீசல் விற்பனை ஆகியவற்றில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. உறுதியான ஓர் அரசு அதைச் சீர் செய்வதற்குச் சில ஆண்டுகள் ஆகலாம்.
  • கரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ரூ.16,500 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், நிதிப் பற்றாக்குறையானது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 4.33%ஆக இருக்கும் என்றும், இது 2023-24-ல் 3%-க்கும் கீழ் குறைக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • செலவினங்களைப் பொறுத்தவரை சில மாற்றங்களுடன் வருவாய்ச் செலவு 0.3% அதிகரித்துள்ளது, இருந்தாலும், ஊதியச் செலவினங்களை 8.66% குறைத்ததன் மூலம் புதிய அரசு வேலைகளுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.
  • மூலதனச் செலவு சுமார் ரூ.1,000 கோடி அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கல்வி, தொழில், உள்கட்டமைப்புக்கு உதவும் சில புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • வெள்ளை அறிக்கை கோடிட்டுக் காட்டிய சில முக்கியமான விஷயங்களை மேம்படுத்த இந்தத் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை வழிவகை செய்கிறதா என்று பார்ப்போம்.
  • முதலாவதாக, எந்த அரசும் அதிகப்படியான கடனைச் சமாளிக்க, அதன் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடனுக்கான வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
  • அதன் அடிப்படையில், தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இரட்டை இலக்க விகிதத்தில் வளர்ச்சி பெற வேண்டும். கடந்த 15 வருடங்களாகத் தமிழ்நாட்டின் நிலையான விலையின் அடிப்படையிலான மொத்த உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 7.5%-தான்.
  • இந்நிலையில், இரட்டை இலக்க விகிதத்தில் வளர்வதற்கான எந்தச் சிறப்புத் திட்டமும் இந்த அறிக்கையில் இல்லை.
  • இரண்டாவதாக, அரசு உதவி, மானியம் போன்றவை சரியான இலக்குகளைச் சென்றடைய எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த தரவுத்தளம் அரசிடம் இருக்க வேண்டும்.
  • இந்த அறிக்கையில் எல்லாப் பொதுச் சேவைகளையும் கணினிமயமாக்குதல் மூலம் வெளிப்படையான அரசாகத் தாங்கள் செயல்படுவோம் என்று சொல்லப்பட்டுள்ளது; ஆனால், முழுமையான தரவுத்தளம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவுமில்லை.
  • மூன்றாவதாக, மாநிலப் பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறனையும் பலவீனங்களையும் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதைச் சரிசெய்யத் தேவையான வழிமுறைகளைப் பட்டியலிட்டு, அவற்றை உடனே செயல்படுத்த வேண்டும்.
  • கனிம வளங்கள் எந்த அளவுக்குச் சுரண்டப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, அதை ஒழுங்குபடுத்துவதற்கும் அதன் மூலம் வருவாயைப் பெருக்குவதற்கும் தெளிவான திட்டம் வேண்டும். இவற்றுக்கான அறிவிப்புகளும் இந்த அறிக்கையில் இல்லை.
  • இந்த அறிக்கை வரும் ஆறு மாதங்களுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மட்டுமே. பெரிய செயல்திட்டங்களுக்கான அறிவிப்புகளை அரசு அடுத்த நிதிநிலை அறிக்கைக்கு ஒத்திப் போட்டுள்ளது என நம்புவோம்.

நன்றி: தினமணி  (16 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories