TNPSC Thervupettagam

நிதிப் பற்றாக்குறை குறைப்பு: எளிதில் அடையக்கூடிய இலக்கா

February 8 , 2024 164 days 218 0
  • பிப்ரவரி 1 அன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 இல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) 5.1%ஆகக் குறைக்கப்படும்; 2025-26இல் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியின் 4.5%ஆகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
  • அவரது கணிப்புகள் ஆய்வாளர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஏனென்றால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதைவிடச் சற்றுக் கூடுதலாக (ஜிடிபியின் 5.3% அல்லது 5.4%) இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். 2023-24ஆம் ஆண்டுக்கான அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடு நிதிப் பற்றாக்குறைக் கணிப்பை ஜிடிபியின் 5.8%ஆகக் குறைத்திருந்தது.

நிதிப் பற்றாக்குறை என்றால் என்ன

  • அரசாங்கத்தின் செலவினங்களைவிட வருவாய் குறைவாக இருக்கும் சூழலே நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. அரசாங்கத்தின் செலவினங்கள் வருவாயைவிட அதிகமாகும் போதும் அரசாங்கம் கடன் வாங்கியோ சொத்துக்களை விற்றோ பற்றாக்குறையைச் சமாளித்தாக வேண்டும்.
  • எந்த ஒரு அரசாங்கத்துக்கும் வரிகள்தான் முக்கியமான நிதி ஆதாரம். 2024-25இல் அரசாங்கத்தின் வரி வருமானம் ரூ.26.02 லட்சம் கோடியாகவும் அதன் ஒட்டுமொத்த வருவாய் ரூ.30.8 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் ரூ.47.66 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • அரசாங்கத்தின் செலவினத்தைவிட வருவாய் அதிகமாக உள்ள நிலையானது, ‘நிதி உபரி’ (Fiscal surplus) என்று அறியப்படுகிறது. ஆனால், நிதி உபரியுடன் அரசாங்கங்கள் இயங்குவது மிகவும் அரிது. இன்றைய பல அரசாங்கங்கள் நிதி உபரியைப் பெறுவதைவிட நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.
  • நிதிப் பற்றாக்குறை என்பது வேறு, தேசத்துக்கு உள்ள கடன் என்பது வேறு. ஒரு தேசத்தின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடனளித்தோருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையே, அத்தேசத்தின் கடன் எனப்படுகிறது. வழக்கமாக, ஓர் அரசாங்கம் பல ஆண்டுகள் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையில் இயங்கி, பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகத் தொடர்ந்து கடன் வாங்குவதால்தான் தேசத்தின் கடன் மலைபோல் குவிகிறது.
  • பொதுவாக, நிதிப் பற்றாக்குறை நாட்டின் ஜிடிபியின் சதவீதமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு அரசாங்கம் எவ்வளவு எளிதாகக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும் என்பது தெரிந்துவிடும் என்று கருதப்படுகிறது. பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் அதிக நிதிப் பற்றாக்குறையுடன் இயங்க முடியும்.

நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் எப்படி ஈடுகட்டுகிறது

  • நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான நிதியைப் பெறுவதற்காக அரசாங்கம் முதன்மையாகக் கடன் பத்திரச் சந்தையிலிருந்து பணத்தைக் கடனாகப் பெறுகிறது. இந்தச் சந்தையில் கடனளிப்போர் அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கி அரசாங்கத்துக்குக் கடன் அளிக்கப் போட்டிபோடுவர்.
  • 2024-25இல் ரூ.14.13 லட்சம் கோடி மொத்தத் தொகையைச் சந்தையிலிருந்து அரசாங்கம் கடனாக வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023-24இன் கடன்தொகை இலக்கைவிடக் குறைவாக இருப்பதன் காரணம் 2024-24இல் ஜிஎஸ்டி வரி வசூலின் மூலம் அதிகத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதுதான். 2024-25க்கு அரசாங்கத்தின் கடன் இலக்கு ரூ.15.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று பொருளியலாளர்கள் எதிர்பார்த்தனர்.
  • இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கிகள் கடன் சந்தையில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அவை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை எப்போதும் நேரடியாகவாங்குவதில்லை. ஆனால், ஏற்கெனவே அரசாங்கத்திடமிருந்து கடன் பத்திரங்களை வாங்கிய தனியாரிடமிருந்து இரண்டாம் நிலைச் சந்தையில் அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கும்.
  • எனவே அரசாங்கம், கடன் பத்திரச் சந்தையில் கடன் வாங்குவது என்பது தனியாரிடமிருந்து கடன் வாங்குவது மட்டுமல்ல, மத்தியவங்கியிடமிருந்தும் கடன் வாங்குகிறது என்று புரிந்துகொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கிதிறந்தநிலைச் சந்தை செயல்பாடுகள்’ (open market operations) என்று அழைக்கப்படும் செயல்பாட்டின் மூலம், புதிதாகப் பணத்தை அச்சடித்து அரசு கடன் பத்திரங்களை வாங்குகிறது. இதனால் பணப் புழக்கமும் காலப்போக்கில் அதன் விளைவாகப் பரந்துபட்ட பொருளாதாரத்தில் விலைவாசியும் அதிகரிக்கின்றன.
  • அரசாங்கக் கடன் பத்திரங்கள் பொதுவாக ஆபத்தற்றவையாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் இருப்பதிலேயே மோசமான நிலை ஏற்பட்டால்கூட, மத்திய வங்கியின் மூலம் புதிதாகப் பணத்தை அச்சடித்துக் கடன்களை அரசாங்கம் அடைத்துவிடலாம். எனவே, சந்தையிலிருந்து கடன் பெறுவது அரசாங்கங்களுக்குக் கடினம் அல்ல.
  • எந்த வட்டி விகிதத்தில் அரசாங்கத்தால் கடன் பெற முடிகிறது என்பதுதான் பிரச்சினை. அரசாங்கத்தின் நிதி நிலை மோசமாகும்போது அரசாங்கக் கடன் பத்திரங்களுக்கான தேவை குறைந்துவிடும். இதனால் அரசாங்கம் அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற வேண்டியிருக்கும். இதனால் அரசாங்கத்தின் கடன் ஈட்டும் செலவுகள் அதிகரிக்கும்.
  • சந்தையிலிருந்து அரசாங்கம் கடன் பெற எவ்வளவு செலவாகிறது என்பதைத் தீர்மானிப்பதில் பணவியல் கொள்கை முக்கியப் பங்காற்றுகிறது. கரோனா பெருந்தொற்றுக்கு முன் பல நாடுகளில் மத்திய வங்கிகள் கடன் கொடுக்கும் விகிதம் கிட்டத்தட்ட பூஜ்யமாக இருந்தது.
  • ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு அந்த விகிதம் கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் அரசாங்கங்கள் கடன் பெறுவது அதிகச் செலவுபிடிக்கும் விஷயம் ஆகிவிட்டது. இந்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதில் முனைப்புக் காண்பிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நிதிப் பற்றாக்குறை ஏன் கவனத்துக்குரியது

  • முதன்மையாக அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறைக்கும் நாட்டின் பணவீக்கத்துக்கும் வலுவான நேரடித் தொடர்பு உள்ளது. ஒரு நாட்டின் அரசாங்கம் தொடர்ந்து அதிக நிதிப் பற்றாக்குறையுடன் இயங்குவது அதிக பணவீக்கத்துக்கு வழிவகுக்கும்.
  • ஏனென்றால், அரசாங்கம் மத்திய வங்கியின் மூலம் புதுப் பணத்தை அச்சடித்து நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். பெருந்தொற்றின்போது இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 9.17% என்னும் உயரத்தைத் தொட்டது. அதற்குப் பிறகு, குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு இப்போது 5.8%ஆகக் குறைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறை அரசின் நிதிசார் கட்டுக்கோப்பு குறித்து சந்தைக்குச் சமிக்ஞை செய்யும் கருவியாகவும் செயல்படுகிறது. நிதிப் பற்றாக்குறை அளவு குறைவாக இருப்பது அரசாங்கத்தின் கடன் பத்திரங்களுக்கான மதிப்பீடுகளை மேம்படுத்த உதவும். அரசாங்கம் கடனைக் குறைத்துக்கொண்டு வரி வருவாய் மூலம் செலவுகளைக் கவனித்துக்கொண்டால், கடனளிப்போருக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அரசாங்கம் கடன் பெறுவதற்கான செலவும் குறையும்.
  • நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பது ஒட்டுமொத்தப் பொதுக் கடனைக் (public debt) கையாள்வதற்கான அரசாங்கத்தின் திறனைப் பாதிக்கும். 2023 டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொதுக் கடன் இடைப்பட்ட கால அளவிலான இடர்களின் காரணமாக ஜிடிபியின் 100%ஐவிடக் கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்திருந்தது.
  • ஆனால், மத்திய அரசு இந்த மதிப்பீட்டை ஏற்க மறுத்தது. சர்வதேசக் கடன் பத்திரச் சந்தையின் மூலம் கடன் பெற அரசு முயன்றுவருவது கவனிக்கத்தக்கது. நிதிப் பற்றாக்குறை குறைவாக இருந்தால், அரசு தனது பத்திரங்களை வெளிநாடுகளில் எளிதாக விற்றுக் குறைந்த செலவில் கடன் பெற முடியும்.

அடுத்து என்ன

  • 2024-25ஆம் நிதியாண்டில் மூலதனச் செலவினங்களையும் பிற திட்டங்கள் மீதான செலவுகளையும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதோடு நிதிப் பற்றாக்குறையையும் 5.1%ஆகக் குறைக்கத் திட்டமிடுகிறது. எனவே, இந்தச் செலவுகளுக்கான வருவாயின் பெரும்பங்கினை வரி வசூலின் மூலமாகவே ஈட்ட முடியும்.
  • ஆனால், வரி விகிதங்களை உயர்த்துவதன் மூலமாக வரி வசூலை அதிகரித்து அதன் மூலம் நிதிநிலையை முதன்மையாகச் சமநிலைப்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். ஏனென்றால், வரிகள் பொருளாதாரச் செயல்பாட்டில் சுணக்கத்தை ஏற்படுத்துபவை. அதீத லட்சியமானதாகக் கருதப்படும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைய முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால், அதன் கணிப்புகள் தவறாக வாய்ப்புள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories