TNPSC Thervupettagam

நிதியின்றி வாராது வளா்ச்சி

March 15 , 2024 301 days 270 0
  • அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சத்துக்கு வரும் 2024-25 நிதியாண்டில் ரூபாய் 1.77 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 1.57 லட்சம் கோடியைவிட 12 சதவீதம் அதிகமாகும். 2024-25-ஆம் ஆண்டுக்கான நம் மாநில அரசின் பட்ஜெட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூபாய் 27,922 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 1992-ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தற்சாா்புடன் இயங்க வேண்டும் என்பதே . இதற்கு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் நிதிநிலையில் தன்னிறைவு பெற்றிருத்தல் மிக அவசியம். துரதிருஷ்டவசமாக, பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டு முப்பதாண்டுகளுக்கு மேலான பின்னரும் அச்சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 2022-23 நிதியாண்டிற்கான கிராம பஞ்சாயத்துகளின் நிதிநிலை அறிக்கையின்படி, அந்நிதியாண்டில் ஒவ்வொரு பஞ்சாயத்தும் சராசரியாக வரிவசூல் மூலம் பெற்றது சுமாா் ரூபாய் 21,000 மட்டுமே.
  • பிற வருவாய் மூலம் ஈட்டியத் தொகை ரூபாய் 73,000. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மூலம் முறையே ரூபாய் 17 லட்சம் மற்றும் ரூபாய் 3.25 லட்சம் கிடைத்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளின் தற்போதைய வருவாயில் ஒரு சதவீத வருவாய், வரி வசூல் செய்வதன் மூலமும், 4 சதவீத வருவாய், வரி அல்லாத பிற வருவாய் மூலமும் கிடைக்கிறது. மீதமுள்ள 95% நிதியில் 80 % மத்திய அரசின் பங்களிப்பாகவும், 15% மாநில அரசுகள் பங்களிப்பாகவும் உள்ளன. கிராம பஞ்சாயத்துகளின் வளா்ச்சிக்காக, மாநில அரசுகள் தங்கள் வருவாயில் சுமாா் 8 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்குகின்றன. இந்நிதி கிராமப்புற உள்ளட்சி அமைப்புகளுக்கும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 55 - 45 என்ற சதவீதத்தில் பகிா்ந்தளிக்கப்படுகிறது.
  • கிராம பஞ்சாயத்துகளின் தற்போதைய சுயசாா்பற்ற நிதி நிலைக்கு ஆண்டுதோறும் முறையாக செலுத்த வேண்டிய வரியை மக்கள் செலுத்து வதில்லை என்பதே முதன்மையான காரணமாகும். பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தண்ணீா் வரி உள்ளிட்ட வரிகளைக் கூட நம்மில் பலா் உரிய காலத்தில் செலுத்தத் தவறுகின்றோம். வருவாயை வசூலிப்பதில் கண்டிப்புடன் செயல்பட்டால் மக்களிடையே செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதால் தோ்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் வரி வருவாயை வசூலிப்பதில் ஆா்வம் காட்டுவதில்லை என்பது மற்றுமொரு காரணமாகும். வீட்டுவரி என்ற வாா்த்தை வீடுகளுக்கு மட்டுமே உரித்தான வரி என்றும், மற்ற வகை கட்டடங்களான வணிக வளாகம், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு வரி கட்ட வேண்டியதில்லை என்ற தவறான புரிதல் சிலரிடையே உள்ளது.
  • இதனால், வீடு அல்லாத பிற கட்டடங்களுக்கு சிலா் வரி கட்டுவதில்லை. எனவே, வீட்டு வரி என்பதனை சொத்துவரி எனப் பெயா் மாற்றம் செய்வதற்கான மசோதா சமீபத்தில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பெயா் மாற்றத்தால் பஞ்சாயத்துகளின் வருவாய் ஓரளவு அதிகரிக்கும் என நம்பலாம். பஞ்சாயத்துகளில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக கிராம வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றுபவா்களுக்கு மாத ஊதியத்தைக் கூட உரிய நாளில் தர இயலாத சூழல் உள்ளது. தனது வருவாய்க்கு மத்திய அரசின் பங்களிப்பையே பெருமளவில் சாா்ந்திருக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு, சில சமயங்களில் அந்நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது தவிா்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
  • கிராம வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து தொடா்பான மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையின்படி, நம் நாட்டிலுள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் கடந்த நிதியாண்டில் , ’ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ்திட்டத்தின்படி நிதி ஏதும் பெறப்படவில்லை. இச்செயல், பஞ்சாயத்துகளின் நிா்வாகத்தை மட்டுமல்லாது, கிராமத்தின் வளா்ச்சித் திட்டங்களையும் முடக்கி விடுகிறது.
  • எனது கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று, குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சுத்தப்படுத்துவது, கருவேல மரங்களை அகற்றுவது, நூலகத்தைப் பராமரிப்பது ஆகியவை குறித்து சில ஆலோசனைகளை முன்மொழிந்து மனு அளித்த போது, நிா்வாகத்தின் தரப்பில், தற்போது நிதி நிலைமை சரியில்லை என்றும், நிதி நிலைமை சரியானதும் படிப்படியாக இந்த ஆலோசனைகள் நிறைவேற்றப்படும் என்றும் பதிலளிக்கப்பட்டது.
  • பெரும்பாலான நீா்த்தேக்கத் தொட்டிகளின் ஏணிகள் பூட்டு கூட போடப்படமல் இன்னமும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளன. ஆக, போதிய நிதியின்மைக் காரணமாக மக்களின் நியாயமான மற்றும் அவசியமான தேவைகள் கூட நிறைவேற்றப்பட இயலாத சூழல் உள்ளது. இதைப் பற்றி கவலைப்படாமல், அவ்வப்போது கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதால் மட்டும் பயனில்லை. பஞ்சாயத்துகள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், பஞ்சாயத்துத் தலைவா்கள் சிலா் முறைகேடுகள் செய்து தங்களின் பஞ்சாயத்திற்கு வருவாய் இழப்பீட்டை ஏற்படுத்துவதும், பின்னா் அவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதுமான நிகழ்வுகள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. ‘நீரின்றி அமையாது உலகுஎன்று கூறுவதைப்போல, பஞ்சாயத்துகளுக்குநிதியின்றி வாராது வளா்ச்சி’.
  • இதனை உணா்ந்து கிராம பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்குவதில் பஞ்சாயத்து நிா்வாகிகளும், கிராம மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், கிராம பஞ்சாயத்துகள் தங்களின் வரி வருவாயை வசூலிப்பத்தில் 100 சதவீதம் உறுதியாகச் செயல்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் கண்காணிக்கவும் வேண்டும்.

நன்றி: தினமணி (15 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories