- 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம். உலகத் தரவரிசையில் 3ஆவது இடம். 20 வயதில் ‘டைம்’ உள்ளிட்ட உலகின் முக்கிய இதழ்களின் அங்கீகாரம். டென்னிஸ் வீராங்கனையாக மட்டுமன்றி அரசியலும் வரலாறும் தெரிந்த சமூக அக்கறைகொண்ட மனிதராகவும் தன்னை வெளிப்படுத்திவருகிறார் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காஃப்.
- விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கோகோவின் பெற்றோர்.ஒருநாள் செரீனா வில்லியம்ஸ்போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் கோகோவின் அப்பா கோரி. செரீனாவின் அற்புதமான ஆட்டத்தைக் கண்டு ‘GOAT’ என்று கத்தினார். “கோட் என்றால் என்ன?” என்று கேட்டார் 6 வயது கோகோ. “Greatest of all time” என்று சொன்னார் கோரி. “நானும் அவரைப் போலவே ஒருநாள் வருவேன்” என்று சொன்ன கோகோவை வாரி அணைத்துக்கொண்டார் கோரி.
விளையாட்டின் தொடக்கம்
- சொன்னதோடு அல்லாமல் உடனே டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக்கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார் கோகோ. மகளின் ஆர்வத்தைக் கண்ட கோரி, ஆரம்பத்தில் தானே பயிற்சியாளராக இருந்தார். ஆனால், கோகோவின் திறமையை உணர்ந்து, செரீனா வில்லியம்ஸின் பயிற்சியாளர் நடத்திய அகடமியில் சேர்த்துவிட்டார். ‘அதிக கிராண்ட்ஸ்லாம்களை நான் வெல்ல வேண்டும்’ என்று கோகோ சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் அந்தப் பயிற்சியாளர்.
- தன் வயதை ஒத்த குழந்தைகள் எல்லாம் பள்ளி, படிப்பு, நண்பர்கள், விளையாட்டு என்று இருந்தாலும் தான் வீட்டுப் படிப்பும் பயிற்சியுமாக இருந்ததில் கோகோவுக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. 12 வயதில் பிரான்ஸுக்கு விளையாடச் சென்றார் கோகோ. அங்கே குரேஷியாவைச் சேர்ந்த சிறுவர்கள் கோகோவைக் குரங்கு என்று அழைத்தனர். துயரத்தில் அன்று இரவு முழுவதும் கண்ணீரில் கழிந்தது. மறுநாள் காலை வழக்கமான, உற்சாகமான கோகோவாக விளையாட வந்தார். “அவர்கள் சொன்னவுடன் எனக்கு அழுகை வந்தது உண்மைதான். ஆனால், அவர்கள் என்னைப் போல் பலவிதமான மக்களுடன் வாழ்ந்ததில்லை. அதனால்தான் இப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டபோது நான் வருத்தத்தில் இருந்து வெளிவந்துவிட்டேன்” என்றார்.
சாதனை வெற்றி
- 14 வயதில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான தனிநபர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ. 15 வயதில் விம்பிள்டனில் நுழைந்தார். ஐந்து முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். உலகமே ஆச்சரியப்படும் விதத்தில் வீனஸை அந்தச் சுற்றில் வென்று, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார் கோகோ.
- “எல்லாரும் மிகப் பெரிய ஜாம்பவானை நான் வென்றுவிட்டேன் என்று மகிழ்கிறார்கள். ஆனால், வில்லியம்ஸ் சகோதரிகளைப் பார்த்துதான் நான் டென்னிஸுக்கே வந்தேன். அவருடன் போட்டியிட்டதோ வென்றதோ எனக்கு எப்படி மகிழ்ச்சியைக் கொடுக்கும்? ஏதேதோ அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பேச்சு வரவில்லை. ‘விளையாட்டில் நீங்கள் செய்த அவ்வளவு விஷயங்களுக்கும் நன்றி’ என்று சொல்லி கைகுலுக்கினேன்’’ என்கிறார் கோகோ.
- அமெரிக்காவில் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு, விம்பிள்டனில் முதல் சுற்றை வென்று முன்னேறிய இளம் பெண் என்கிற பெருமையைப் பெற்றார் கோகோ. இந்தச் சாதனைக்காக ஒபாமா தன் அலுவலகத்துக்கு, கோகோ குடும்பத்தினரை அழைத்து உரையாடினார்.
- அடுத்து வந்த ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதும் சில சுற்றுகளில் முன்னேறுவதுமாக கோகோவின் டென்னிஸ் வாழ்க்கை போய் க்கொண்டிருந்தது.
நீதிக்கு ஆதரவாகக் குரல்
- 2020ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்டபோது, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. 16 வயது கோகோவும் போராட்டத்தில் கலந்துகொண்டு, “அநியாயத்தைக் கண்டு நீங்கள் மெளனமாக இருந்தால், அடக்குமுறையாளர்களின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று பேசியதைக் கேட்டு அனைவருக்கும் ஆச்சரியம். “நியாயத்துக்காக யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம். அமெரிக்கர் மட்டுமே படித்த பள்ளியில் ஒரே ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராக என் பாட்டி படித்து, அவ்வளவு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு, இனப் பாகுபாட்டைக் களைய முனைந்தார். அவரின் பேத்தியாக இது என் கடமை. டென்னிஸே அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுதான். அதில் மற்றவர்கள் நுழைந்து, ஓரிடத்தைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் பாகுபாட்டை எதிர்த்துப் போராடிப் போராடிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்” என்றார் கோகோ.
- 2021ஆம் ஆண்டு நவோமி ஒசாகா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல் கோகோவுடையதுதான். 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ் எவர்ட், தான் கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விஷயத்தைச் சொன்னபோது மிகச் சில வீராங்கனைகளே அவரை அணுகினார்கள். அவர்களில் ஒருவர் கோகோ. “புகழும் செல்வமும் கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனையிடம் பணிவும் சுற்றியிருப்பவர்கள் குறித்த அக்கறையும் உலக நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வும் இருப்பதைப் பார்க்கும்போது நமக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறது. பெண்கள் விளையாட்டுக்குத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களில் ஒருவராகவோ ஒரே தலைவராகவோ கோகோ இருப்பார்” என்கிறார் கிறிஸ் எவர்ட். இதுமட்டுமன்றி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தன் குரலை ஓங்கி ஒலிக்கிறார் கோகோ.
- 2023. தோல்விகளுக்கான காரணத்தைக் கண்டறிந்தார் கோகோ. பெற்றோர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையும் மக்கள் தன் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பும் தனக்கு ஒரு பதற்றத்தை உருவாக்கிவிடுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, இனி தனக்காக மட்டுமே விளையாடுவது என்று முடிவெடுத்தார். போட்டிகளின் போது பெற்றோரைக் கண்ணுக்கு எதிரில் அமர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பல சுற்றுகளைக் கடந்து, இறுதியில் தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, சாதனை படைத்தார் கோகோ!
- “பெற்றோர், பயிற்சியாளர்கள், என்னை நம்பிய மக்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை இல்லாமல் நெருப்பில் தண்ணீரை ஊற்றுவதாக நினைத்துக்கொண்டு, காற்றைச் செலுத்தி இன்னும் பிரகாசமாக ஒளிரச் செய்தவர்களுக்கும் நன்றி. பரிசாகக் கிடைத்த 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் காரணமான பில்லி ஜீன் கிங்குக்கு நன்றி. அவர்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு டென்னிஸில் சம ஊதியத்தைப் பெற்றுக்கொடுத்தார்” என்று சொன்ன கோகோ, 15 வயதில் உலகத் தரவரிசைப் பட்டியலில் 453வது இடத்தில் இருந்து இன்று 3ஆவது இடத்துக்கு வந்திருக்கிறார்!
- சிறு வயதில் தானும் தனக்கு எதிராக விளையாடுபவரும் வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த கோகோ, இப்போதெல்லாம் வெற்றி, தோல்விக்காகப் பிரார்த்திப்பது இல்லை. களத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தன் நாட்டுக்குப் பெருமை தேடித் தருவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 05 – 2024)