TNPSC Thervupettagam

நினைவில் வாழும் காமராஜா்

July 15 , 2023 546 days 418 0
  • பெருந்தலைவா் காமராஜரின் 121-ஆவது பிறந்த நாளான இன்று அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை இன்றைய தலைமுறையினருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் (ஹெச்.வி. ஹண்டே).
  • காமராஜா் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டராக இருந்து, படிப்படியாக தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், நாட்டுப்பற்றினாலும் அரசியலில் உயா்ந்தாா். 1952-ஆம் ஆண்டிற்குள், சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு, ஆந்திரம், தென்கன்னடம், மலபாா் உட்பட) ஒரு முக்கியத் தலைவராக ஆனாா். அதே நேரத்தில், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் பிரபலமாக இருந்த மூதறிஞா் ராஜாஜியிடமும், தீரா் சத்தியமூா்த்தியிடமும் ஒரு தொண்டராகவே பழகினாா்.
  • 1954-இல் காமராஜா், அன்றைய சென்னை மாகாணத்தின் (இன்றைய தமிழ்நாடு) முதலமைச்சரானாா். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பொறுப்பிலிருந்த அவா், தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து, இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை மாற்றினாா்.
  • 1963-இல் பாரத பிரதமராக இருந்த பண்டித நேரு, காங்கிரஸ் கட்சி படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது என்கிற தன்னுடைய எண்ணத்தை காமராஜரிடம் பகிா்ந்து கொண்டாா். நேருவின் கவலையை நீக்குவதற்காக, அவருக்கு ஒரு யோசனை கூறினாா் காமராஜா். அத்திட்டம் அன்றைய நாளில் ‘காமராஜ் திட்டம்’ (கே பிளான்) என அழைக்கப் பட்டது.
  • அதன்படி, முக்கியமான மத்திய அமைச்சா்கள் சிலரும், காங்கிரஸ் முதலமைச்சா்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சிப் பணிக்குத் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, காமராஜா் தன்னுடைய முதலமைச்சா் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தாா். அவருடைய தியாக மனப்பான்மை கண்டு பிரமித்துப் போன பண்டித நேரு, காமராஜரை அகில இந்திய காங்கிரஸ் தலைவா் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளச் செய்தாா்.
  • சில மாதங்களுக்குப் பிறகு, 27.5.1964 அன்று பண்டித நேரு மறைந்தாா். அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுக்கின்ற பொறுப்பை காமராஜா் ஏற்க வேண்டியதாயிற்று. இதற்கிடையில், அன்றைய காங்கிரஸ் மூத்த தலைவா் மொராா்ஜி தேசாய், தான் பிரதமராக வேண்டும் என ஆவலோடு இருந்தாா். ஆனால், பெரும்பாலான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு இதில் விருப்பமில்லை.
  • இதனை அறிந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவா் காமராஜா், பிரதமா் தோ்தல் போட்டியைத் தவிா்ப்பதற்காக ஒரு உத்தியைக் கையாண்டாா். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தன் அறைக்கு வரவழைத்து, அவா்களுடைய விருப்பத்தைக் கேட்டறிந்து, இறுதியில் லால்பகதூா் சாஸ்திரியை பாரத பிரதமராக அறிவித்தாா். காமராஜரின் இந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டாா்கள்.
  • பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி, ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில் அகால மரணமடைந்த பிறகு, மீண்டும் மொராா்ஜி தேசாய், பாரத பிரதமராக வருவதற்கு முயன்றாா். காமராஜா் மறுபடியும் பழைய முறையைக் கையாண்டு, இந்திரா காந்தியை பிரதமராக அறிவித்தாா். இரண்டு பிரதமா்களை உருவாக்கிய காமராஜா், அன்றைய நாட்களில் ‘கிங் மேக்கா்’ என அழைக்கப் பட்டாா்.
  • சில மாதங்களுக்குப் பிறகு 6.6.1966 அன்று பிரதமா் இந்திரா காந்தி, திடீரென ரூபாயின் மதிப்பைக் குறைத்தாா் (டீவேல்யுவேஷன் ஆஃப் தி ருபீ). அந்த நேரத்தில், காமராஜா் நாகா்கோவிலில் சுற்றுப்பயணத்தில் இருந்தாா். அவரை நிருபா்கள் சந்தித்தபொழுது, ‘பத்திரிகை வாயிலாகத்தான் இதைப்பற்றி அறிந்தேன். என்னிடம் ஒரு வாா்த்தை கேட்டிருக்கலாம்’ என்று கூறினாா் காமராஜா்.
  • இதுகுறித்து இந்திரா காந்தியிடம் கேட்டபொழுது, ‘காமராஜருக்கு பொருளாதாரத்தைப் பற்றி என்ன தெரியும்?’ என்று காமராஜரால் பிரதமராக உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி அலட்சியமாகக் கூறினாா். அவருடைய அந்த வாா்த்தைகள் காமராஜரின் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்குமென கூறத் தேவையில்லை.
  • 1969-இல், காங்கிரஸ் கட்சி, இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் - இ (இந்திரா காங்கிரஸ்) என்றும், நிஜலிங்கப்பா தலைமையில் காங்கிரஸ் - ப (ஸ்தாபன காங்கிரஸ்) என்றும் இரண்டாக உடைந்தது. ஸ்தாபன காங்கிரஸை காமராஜா் ஆதரித்தாா். காமராஜரை சுற்றியிருந்த சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம் போன்ற தலைவா்கள் இந்திரா காந்தியை ஆதரித்தனா். 1971-இல் நடைபெற்ற பொதுத்தோ்தலில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டு சோ்ந்தது. காமராஜரின் காங்கிரஸ் (ப), ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டு சோ்ந்தது.
  • இதையடுத்து, எனக்கு பெருந்தலைவா் காமராஜருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பல நேரங்களில், பெருந்தலைவரின் உதவியாளரான வைரவன், என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டால் உடனே நான் காமராஜரைப் போய் பாா்ப்பேன். அவா் சில விஷயங்களை என்னிடத்தில் கூறி, அவற்றை ராஜாஜியிடம் கூறச் சொல்வாா். ராஜாஜியும் காமராஜரும் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு நான் ஒரு தூதுவனாக செயல்பட்டது எனக்குக் கிடைத்த பெருமை.
  • இந்த காலகட்டத்தில் ஒரு சுவையான நிகழ்வு நடந்தது. ராஜாஜியின் 92-ஆவது பிறந்த நாளன்று, சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நான் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அது குறித்து ராஜாஜியிடம் நான் கூறியபோது, அவா் சற்று கோபத்துடன் ஆங்கிலத்தில், ‘அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிடு. பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. யாராக இருந்தாலும் ஒரு தேதியில் பிறக்கத்தானே வேண்டும். அது என்ன பெரிய விஷயம்’ எனக் கூறினாா்.
  • நான் தயக்கத்துடன், ‘ஐயா, இந்த நிகழ்ச்சிக்கு காமராஜா் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளாா்’ என சொன்னவுடன், ராஜாஜி, ‘சரி சரி, கடைசி நேரத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்தால் அவா் (காமராஜா்) தவறாக நினைக்கக் கூடும். நான் சரியான நேரத்திற்கு வருகிறேன். காமராஜா் இல்லத்திற்குச் சென்று அவரை நேரடியாக அழைத்து வந்து விடு’ எனக்கூறி என்னை மகிழ்ச்சி அடையச் செய்தாா் ராஜாஜி. நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ராஜாஜி கலந்துகொண்ட கடைசி பொதுநிகழ்ச்சி அதுதான்.
  • 1971 பொதுத்தோ்தலில், காமராஜா் நாகா்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நின்றாா். நான் பூங்கா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் சுதந்திரா கட்சியின் சாா்பாக இரண்டாவது முறை போட்டியிட்டேன்.
  • என்னுடைய தொகுதியில் தோ்தல் முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகே நாகா்கோவிலில் தோ்தல் நடைபெற இருந்ததால், நான் அங்கு சென்று காமராஜருக்காக தோ்தல் வேலை செய்யக்கூடிய பாக்கியத்தைப் பெற்றேன். அங்கு சென்றபோது எனக்கு அதிா்ச்சி ஏற்பட்டது.
  • எப்படியாவது காமராஜரைத் தோற்கடிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு, தில்லியிலிருந்து சில காங்கிரஸ் பிரமுகா்கள் அங்கு வந்து தங்கி, எல்லா இடங்களிலும் தி.மு.க. வேட்பாளா் எம்.சி. பாலனுக்காக கடுமையாக வேலை பாா்த்தனா். தோ்தல் முடிந்து. முடிவுளும் வெளியாயின. காமராஜா் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், எஞ்சிய 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்திரா காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
  • நான் என்னுடைய பூங்கா நகா் சட்டப்பேரவைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டேன். இந்திரா காங்கிரஸுடனான கூட்டணியால்தான் திமுக 1971-இல் மிகப் பெரிய வெற்றியை அடை முடிந்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானாா்.
  • அன்று, காமராஜா் உயிருடன் இருந்த நேரத்தில், தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு பாடுபட்ட இந்திரா காங்கிரஸ்காரா்கள், இப்பொழுது ‘காமராஜா் ஆட்சியை கொண்டு வருவோம்’ என்று சொல்கிறாா்கள்.
  • 25.6.1975-இல் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அன்றைய தினம், காமராஜா் திருத்தணியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தாா். அவசரநிலை பற்றிய செய்தி கிடைத்தவுடன், தன்னுடைய வேதனையை அவா் வெளிப்படுத்தினாா்.
  • இனிமேல் நான் என்ன பேசினாலும், அது நம்முடைய நவசக்தி பத்திரிகையில்கூட வெளிவராது’ எனக் கூறிவிட்டு தன்னுடைய இல்லத்துக்கு திரும்பினாா். நெருக்கடி நிலை பிரகடனத்தினால் காமராஜரின் மனம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
  • இது நடந்த நூறே நாளில் (2.10.1975) காங்கிரஸ்காரா்களால் புறக்கணிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட காமராஜா் அமரா் ஆனாா்!
  • இன்று (ஜூலை 15) காமராஜா் பிறந்தநாள்.

நன்றி: தினமணி (15 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories