TNPSC Thervupettagam

நிபா எச்சரிக்கை தேவை

September 14 , 2023 354 days 227 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து ஒருவழியாக மீண்டெழுந்துவிட்டோம் என்று நாம் நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில், நம்மை அச்சுறுத்தக் கிளம்பியிருக்கிறது "நிபா' தீநுண்மி. அயல்வீடு பற்றி எரியும்போது நாம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்க முடியாது. அண்டை மாநிலமான கேரளத்தில் இரண்டு உயிர்களை வங்கதேச வகை நிபா தீநுண்மி பலிகொண்டிருக்கிறது என்பதால், அதிவேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
  • 2018-இல் முதல் முதலாக உயிர்கொல்லி நிபா தீநுண்மி கேரள மாநிலத்தில் தலைதூக்கியது. சுகாதாரத் துறையின் முன்களப் பணியாளர்கள் உள்பட 17 பேர் அப்போது பரவிய நிபா விஷக் காய்ச்சலில் உயிரிழந்தனர். 2019-இலும், 2021-இலும் மீண்டும்
  • அங்கொன்றும் இங்கொன்றுமாக நிபா விஷக் காய்ச்சலின் அறிகுறிகளும் பாதிப்புகளும் காணப்பட்டன என்றாலும், முன்னனுபவம் காரணமாக கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை அதை உடனடியாக தடுத்து நிறுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
  • கேரளத்தில் நிபா பாதிப்பு 2019-இல் ஏற்பட்டது முதலே, தமிழகத்தின் சுகாதாரத் துறை அந்த மாநிலத்தையொட்டிய எல்லைப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இப்போதும்கூட ஆபத்தை வருமுன் காக்க, எல்லா நடவடிக்கைகளும் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
  • இந்த முறை கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல் அடையாளத்துடன் வந்த நோயாளியை ஆரம்பகட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள், நிபா குறித்து சந்தேகப்படவில்லை. அதனால், 12 நாள்கள் கட்டுப்படுத்தப்படாமல் அந்த நோயாளியின் உடலில் நிபா தீநுண்மி அதிவேகமாக வளர்ந்துவிட்டது. அவரது உயிரையும் குடித்தது. அதே அடையாளத்துடன் இரண்டாவது நோயாளியும் உயிரிழந்தபோதுதான், மருத்துவர்கள் நிபா தீநுண்மி குறித்த ஐயப்பாட்டை எழுப்ப முற்பட்டனர்.
  • உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவர்களும் செயல்படத் தொடங்கியது பாராட்டுக்குரியது. கேரள மாநில சுகாதாரத் துறையும் தாமதமில்லாமல் சிறப்பு நடவடிக்கை ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் கண்காணிப்பை கடுமையாக்கியிருக்கிறது.
  • விலங்குகளிலிருந்து உருவாகும் நோய்களிலிருந்து மனித இனம் தன்னை காத்துக்கொள்வது இனிமேல் கடினம் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச அறிவியல் இதழான "நேச்சர்', தனது 2021 அறிக்கையில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்த்தொற்று மையங்களில் (ஹாட் ஸ்பாட்) ஒன்றாக இந்தியாவின் மலைப் பிரதேசங்களை குறிப்பிட்டிருக்கிறது. அதில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மூன்றுமே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
  • வனப்பகுதிகளும் மனிதர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றையொன்று நெருங்கும்போது, அதாவது மனிதர்கள் விலங்குகள் குடியிருக்கும் காடுகளை அழித்து குடியேறும்போது, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்த்தொற்றுகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. "நேச்சர்' இதழ் இதை குறிப்பிட்டுச் சொல்கிறது.
  • மனிதர்களின் குடியேற்றத்தாலும், ஆக்கிரமிப்பாலும் வனப்பகுதி குறையும்போது காடுகளில் வாழும் வனவிலங்குகளும், பறவை பூச்சிகளும் வேறுவழியில்லாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வனப்பரப்பு குறைவதனால் பழம் தின்னும் வெüவால் உள்ளிட்ட தீநுண்மிகளைப் பரப்பும் விலங்குகள், மனிதர்கள் வாழும் பகுதியில் அடைக்கலம் தேடுவது இயல்பு.
  • குரங்குக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் தொடங்கிய தீநுண்மி நோய்த்தொற்றுகள் எல்லாமே விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள். காடுகள் அழிக்கப்படுவதால்தான் ஒன்றன் பின் ஒன்றாக இதுபோன்ற நோய்த் தொற்றுகள் மனிதர்களை தாக்குகின்றன. இவற்றுக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்பும், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் மருத்துவத் துறையால் மேற் கொள்ளப் பட்டாலொழிய, அவற்றிலிருந்து நாம் தப்ப முடியாது.
  • எந்தவொரு காய்ச்சலையும் இனிமேல் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால், ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதி கிராமங்களில் இருந்து பெருநகரங்கள் வரை அனைவருக்கும் உடனடியாகக் கிடைக்க வழிவகை செய்தாக வேண்டும். யாராவது ஒருவருக்கு ஏற்படும் விலங்குகள் மூலம் பரவும் ஏதாவது ஒரு விஷக் காய்ச்சல், கவனிக்கப்படாமல் விடப்பட்டால் அது காற்றைவிட வேகமாக பல்லாயிரம் பேருக்கு பரவக்கூடும் என்கிற ஆபத்தை நாம் உணர வேண்டும்.
  • 2018-இல் நிபா தீநுண்மிப் பரவலைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் "இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் வைராலஜி' என்கிற மருத்துவப் பிரிவு அறிவிக்கப்பட்டது. இன்னும்கூட அது முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. தீநுண்மி தொற்றுக்கான மாதிரிகள் புணேயிலுள்ள "நேஷனல் வைராலஜி இன்ஸ்டிடியூட்'-இல் சோதனை செய்யப்பட்டு அறிக்கை பெறும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். திருவனந்தபுரத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் "இன்ஸ்டிடியூட் ஆஃப் அட் வான்ஸ்ட் வைராலஜி' அமைக்கப்பட வேண்டும்.
  • கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிபா தீநுண்மி தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றாலும், எச்சரிக்கை மனநிலை அவசியம். கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றின்போது நாம் மேற்கொண்ட முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வழக்கமாகவே மாற்றிக்கொள்வது நல்லது.

நன்றி: தினமணி (14 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories