TNPSC Thervupettagam

நியூசிலாந்தின் நடை மரமும் கோரி மரமும்!

June 18 , 2024 207 days 157 0
  • நியூசிலாந்து நாட்டின் தேசிய மரமாக இந்த ஆண்டு ‘வடக்கு ராட்டா மரம்’ வகையைச் சேர்ந்த 100 அடிக்கும் மேலாக உயரம் கொண்ட மரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மரம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மரத்தின் அடிமரம் இரண்டாகப் பிளவுபட்டு மனிதர்களின் இரண்டு கால்கள்போல இருக்கின்றன. உயரமான ஒரு மனிதன் இரண்டு கால்களில் நின்றுகொண்டிருப்பதுபோலவே அம்மரம் தோற்றம் தருகிறது.
  • திறந்தவெளியில் நிற்கும் அம்மரத்தைத் தொலைவிலிருந்து நோக்கும்போது அது நடப்பது போலவே காணப்படுகிறது. அதன்பொருட்டே அதற்கு ‘நடை மரம்' (நடக்கும் மரம் - walking tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 100 அடிக்கும் மேலாக வளரும் மரம் என்பதோடு அது பூ பூக்கும் இனமும் ஆகும். சுமார் 1,000 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியது. அதன் வேர்களும், மனிதக்கைகளைப்போன்ற கிளைகளும் பார்ப்பதற்கு இஎன்டி போலவே தோற்றமளிக்கும். சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பூமியின் முதன்மையான பகுதி ‘நடு-பூமி’. அது ஆர்டா என்று அழைக்கப்பட்டது. அந்த நடு பூமியில் வனங்களைப் பாதுகாத்த மரம் போன்று தோற்றமளிக்கும் கற்பனை உயிரிகள் இஎன்டி என்று அழைக்கப்பட்டன.
  • ‘நடை மரம்’ ஒரு மிகப்பெரிய குதிரை மைதானத்தில் தனியாக நின்றுகொண்டிருக்கிறது. 105 அடி உயரம் கொண்ட அம்மரம், ஏழுமாடிக் கட்டடம் அளவிற்கு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அதன் உண்மையான வயது தெரியவில்லை. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தினரால் அக்காடு அழிக்கப்பட்டிருக்கிறது. அதில் தப்பிப் பிழைத்து வளர்ந்திருக்கிறது இந்த மரம் என்று அக்குடும்பத்தினர் கூறுகின்றனர்.
  • 'வடக்கு ராட்டா மரம்' எபிபைட்டிக்ஸ்(epiphytes) இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு விதத்தில் நம் ஊர்களில் பனைமரத்தில் முளைத்து வளரும் ஆல், அத்தி, அரசு மரங்கள் போன்றது.
  • ஏதேனும் ஒரு மரத்தின் புறப்பரப்பின்மீது முளைத்து வளர்கிறது. பிறகு விழுதுவிடுகிறது. கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருக்கும் அவ்விழுதுகள் இறுதியாகத் தரையைத் தொட்டு, பூமிக்குள் இறங்கிவிடும். பிறகு மரம் மேல்நோக்கி வளர ஆரம்பிக்கும். விழுதுகள் பூமிக்குள் இறங்கும் வரையிலும் காற்றிலும், மழை நீரிலும் வளர்கிறது. அந்தவகையில் இது ஒட்டுண்ணி மரம் அல்ல. எந்த மரத்தைச் சுற்றி இம்மரம் வளர்ந்ததோ அம்மரம் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோயிருக்கலாம். 'நடை மரம்' மிகப்பெரிதாக இருந்ததால் அல்லது மற்றொரு மரம் வீழ்ந்ததால் அடிமரம் இரண்டாகப்பிளவுபட்டிருக்கிறது. அதுதான் மனிதர்களின் இரண்டு கால்கள் போன்ற தோற்றத்தைத் தந்திருக்கிறது.

நியூசிலாந்து நாட்டின் பழமையான கோரி மரம்

  • நியூசிலாந்து நாட்டில் புவிக்காந்த வரலாற்றுடன் தொடர்புடைய பழமையான மற்றொரு மரமும் உள்ளது. அதுதான் கோரி மரம். பூமி ஒரு சட்டக்காந்தம்போல் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். புவிக்காந்த வடதுருவம் தெற்கிலும், புவிக்காந்தத் தென்துருவம் பூமியின் வடக்கிலும் உள்ளன என்பதையும் படித்திருப்போம்.
  • நாம் நினைப்பதுபோல், வடக்கிலும் தெற்கிலும் அமைந்திருக்கும் பூமியின் காந்தத்துருவங்கள் நிலையானவை அல்ல. மாறாக, புவிக்காந்தத் துருவங்கள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வடக்கிலிருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் திசைமாறிக்கொள்கின்றன. அப்படி, திசைமாறுவதற்கான காலம் 1000 ஆண்டுகள் என்னும் அளவிற்கும் மேலாக மிகநீண்ட காலகட்டமாக இருக்கிறது. பறவைகள், கடலில் வாழும் சால்மோன் மீன், கடல் ஆமை, திமிங்கலம் மற்றும் பட்டாம் பூச்சிகள், புவிக்காந்தப்புலத்தைப் பயன்படுத்தி திசையறிந்து இடம்பெயர்கின்றன. இந்த உயிரினங்கள் துருவமாற்ற காலத்தில் குழம்பிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • 42,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு துருவமாற்றம் 41,000 ஆண்டுகளில் முடிவடைந்திருக்கிறது. அதாவது, அம்மாற்றம் ஆரம்பித்து, முடிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது, ‘லேஷ்சாக் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பக்கவிளைவாக, பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் பேரழிவைச் சந்தித்திருக்கின்றன மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், அந்நிகழ்வு ஏற்படுத்தியிருகிறது. உலகில் இன்றும் காணப்படும் வயது மூத்த மரங்களில், நியூசிலாந்து நாட்டின் கோரி மரமும் ஒன்று. கோரி மரங்கள், ‘லேஷ்சாக் விளைவிற்கும் முந்தியவை என்று தெரியவந்துள்ளது. எனவே, 42,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ‘லேஷ்சாக் நிகழ்விற்கு, கோரி மரங்கள் சான்றாகும்.
  • நியூசிலாந்து நாட்டின் வடக்கில் அமைந்துள்ள 'கவா சதுப்பு நிலக்காடுகளில்', புதையுண்ட கோரி மர எச்சங்கள் , ‘லேஷ்சாக் நிகழ்வுக்கும் முந்தியவையாக உள்ளன. பரிணாம உயிரியலாளர் ஆலன் கூப்பரும் அவரது குழுவினரும், 42,000 ஆண்டுகளுக்கு முந்தைய அப்படிப்பட்ட நான்கு கோரி மரத் தடிகளின் குறுக்குவெட்டுப் பகுதிகளை, கரி-14 ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வுதான், முதன்முதலாக துருவமாற்றத்தை நேரடியாக சுற்றுச்சூழல் மாற்றங்களுடன் தொடர்புப்படுத்திப் பேசுகிறது. ஆய்வு முடிவுகள் 2021 பிப்ரவரி 19 ‘சையின்ஸ்’ இதழில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  • துருவமாற்ற நிகழ்வு காரணமாக, புவிக்காந்தப்புலம் வலுவிழந்தது. புறவெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் செறிவு கூடியது. அதன் காரணமாக, கோரி மரத்தில் கரி-14, அதிக அளவில் படிந்திருந்தது. வலுவிழந்தக் காந்தப்புலம், வளிமண்டலத்தில் என்ன விதமான மாற்றங்களை, காலம் சார்ந்து நிகழ்த்தும் என்பதை, கணினியைப் பயன்படுத்தி ஆலன் கூப்பர் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • துருவமாற்ற காலகட்டத்தில், அதிகப்படியாகப் பூமிக்கு வரும் மின்னூட்டம்பெற்ற துகள்கள், வளிமண்டலத்தில் அதிகளவில் ஹைட்ரஜனையும், நைட்ரஸ் ஆக்சைடையும் உருவாக்குவது தெரியவந்தது. இந்த வாயு மூலக்கூறுகள் ஓசோன் வாயுவை உட்கவரும் பண்புகொண்டவை. அதன் விளைவாக, ஓசோன் அடுக்கு வலுவிழந்து சூரியனிலிருந்து அதிக செறிவுள்ள புறஊதாக்கதிர்கள் பூமியை வந்தடைந்திருக்கின்றன. அதுமட்டுமன்று சூரியக்கதிர்களை உள்கவரும் பல்வேறு வளிமண்டல அடுக்குகளும் வலுவிழந்து, ஆற்றல்மிக்க சூரியக்கதிர்கள் பூமிக்கு நேரடியாக வந்து சேர்ந்திருக்கின்றன.

நன்றி: தினமணி (18 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories