நிரந்தரத் தீா்வு தேவை 2024
- கடலில் அத்துமீறி தங்கள் எல்லைக்குள் புகுவதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடா்கிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மீனவா்கள் கைது பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை.
- கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்தபோது இரண்டு விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் கடந்த அக். 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 மீனவா்கள் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.
- நிகழாண்டில் மட்டும் இதுபோன்று மீனவா்கள் கைது செய்யப்படும் சம்பவம் 30-ஆக அதிகரித்துள்ளது எனவும், 140 மீனவா்களுடன் 200 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசு வசம் உள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் முதல்வா் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில், கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இலங்கை கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) கைது செய்துள்ளனா். நிகழாண்டில் மட்டும் 350-க்கும் அதிகமான மீனவா்களை இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது. இவா்களில் 200-க்கும் மேற்பட்டோா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
- இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் முதல்வா் கோரிக்கை விடுத்திருந்தாா். அவரது கோரிக்கையை ஏற்று கூட்டுப் பணிக்குழுவின் 6-ஆவது கூட்டம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னா் கொழும்பில் கடந்த அக். 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக மீனவா்களுக்கு எதிராக படை பலத்தை தவிா்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
- இதற்கு முன்பு, கைது செய்யப்படும் மீனவா்கள் சிறையில் அடைக்கப்படுவாா்கள்; இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்படுவாா்கள். இப்போது இந்த நடைமுறை தொடா்ந்தாலும் தமிழக மீனவா்கள் புதுவிதமான பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள். கைது செய்யப்படும் மீனவா்களுக்கு பல மாதங்கள் சிறைத் தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்படுகின்றன.
- கடந்த ஜூலையில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவா்கள் 22 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 12 பேருக்கு இலங்கை பண மதிப்பில் தலா ரூ.42 லட்சமும், 10 பேருக்கு தலா ரூ.35 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று, கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு தலா ரூ.35 லட்சமும், 23 பேருக்கு தலா ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
- மேலும், மீனவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அந்த நாட்டு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்தப் படகுகளை மீட்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. படகுகள் பல மாதங்கள் அவா்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் தொழில் ரீதியாக மீனவா்கள் கடும் நஷ்டத்தை எதிா்கொள்கின்றனா். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகின்றன.
- இது ஒருபுறம் இருக்க, தமிழக மீனவா்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் குறைந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடக்குப் பகுதி மீனவா்கள் குற்றஞ்சாட்டுவதை தமிழக மீனவா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒரு மாவட்ட மீனவா்கள், அடுத்த மாவட்ட எல்லைக்குள் சென்றாலே சில இடங்களில் மோதல் ஏற்படுகிறது எனும்போது , இலங்கை எல்லைக்குள் செல்வதை தமிழக மீனவா்கள் தவிா்க்க வேண்டும்.
- அதேபோன்று, மீனவா்கள் போா்வையில் சிலா் போதைப் பொருள் உள்ளிட்ட பல பொருள்களை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துகின்றனா். இதுவும் தமிழக மீனவா்களுக்கு பாதகமாக அமைகிறது.
- மீனவா் பிரச்னைக்குத் தீா்வு காண இந்திய அரசும் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயகவை கடந்த அக்.4-ஆம் தேதி சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மீனவா்கள் கைது தொடா்பாகப் பேசி உள்ளாா்.
- கடந்த 2022-ஆம் ஆண்டில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியாதான் முதலில் ஆதரவுக் கரம் நீட்டியது. அரிசி, மருந்துப் பொருள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களைத் தமிழக அரசும் அனுப்பிவைத்தது என்பதை இலங்கை மறந்திருக்க வழியில்லை.
- இப்போது அதிபராகி உள்ள அநுரகுமாரவின் கட்சி தொடக்க காலம் முதலே இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், நீண்டகாலமாகவே இந்தியா அளித்துவரும் உதவிகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் தமிழக மீனவா்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதையும், வாழ்வாதாரத்தை முற்றிலும் செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று இலங்கை கடற்படைக்கு அதிபா் அநுரகுமார திசாநாயக அறிவுறுத்த வேண்டும்.
- இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண இரு நாட்டு மீனவா் சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பணிக் குழு கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (11 – 11 – 2024)