- இந்தியத் தொழில் நிறுவனங்கள் நீண்ட காலமாகக் கோரிவந்த நிறுவன வரிவிகிதத் குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததும் பங்குச் சந்தை உச்சம் தொட்டுவிட்டது; இந்தியத் தொழில் துறையினர் இந்நடவடிக்கையை மிகவும் வரவேற்றுள்ளனர். அது மட்டுமல்ல;
- கடந்த ஜூலையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அறிவித்த, சந்தைக்கு அதிருப்தி அளித்த சில நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு என்று எல்லாம் சரிந்துவரும் வேளையில் அவற்றை மீட்சி பெறச் செய்ய அடுத்தடுத்து எடுத்துவரும் நடவடிக்கைகளில் இது மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
வரி செலுத்துதல்
- வரி செலுத்துவதில் எந்தவித விதிவிலக்கு சலுகையும் பெறாத தொழில் நிறுவனங்கள் செலுத்திவந்த வரி 30%-லிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனங்கள் மீதான உண்மை வரி 34.94%-லிருந்து 25.17% ஆகக் குறைந்துள்ளது. அக்டோபர் 1-க்குப் பிறகு பதிவுசெய்துகொண்டு 2023 மார்ச் 31-க்குப் பிறகு உற்பத்தியைத் தொடங்கவிருக்கும் புதிய நிறுவனங்கள் மீதான வரி இப்போதுள்ள 25%-லிருந்து 15% ஆகிறது. இந்த வரிக் குறைப்புகள் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- தொழில் துறையில் குறைந்துவரும் முதலீட்டைப் பெருக்கும் நோக்கில் வரி குறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சீன-அமெரிக்க காப்பு வரி விதிப்புப் போரால் திகைப்படைந்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்கி வருவதற்கும் இது நிச்சயம் கைகொடுக்கும்.
அரசின் நடவடிக்கைகள்
- அரசு எடுத்துள்ள நிறுவன வரிக் குறைப்பால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாயில் ரூ.1,45,000 கோடி துண்டு விழும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஜிஎஸ்டி வரி வருவாய், அரசு எதிர்பார்த்ததைப் போல மாதத்துக்குச் சராசரியாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டவில்லை. ஜிஎஸ்டி உட்பட எல்லாவிதமான வரிகள் மூலமும் ரூ.16.49 லட்சம் கோடி கிடைக்கும் என்று 2019-20 பட்ஜெட் கூறியது.
- ஆனால், உண்மையில் வரி வருவாய் ரூ.13.16 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. இப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி விடுவித்துள்ள உபரி நிதி ரூ.1.75 லட்சம் கோடி கைகொடுக்கும். அதனால் வருவாய்ப் பற்றாக்குறை இப்படியே இருக்கட்டும் என்று அனுமதித்துவிட முடியாது.
- அரசின் செலவுக்கு ஏற்ப வருவாயைப் பெருக்கினால்தான் இந்திய நிதி நிலைமை மீது சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மை தொடரும். இப்போதுள்ள நிலையில் எந்த வரியையும் உயர்த்த முடியாது. நிறுவனங்கள் மீதான வரியைக் குறைத்திருப்பது நடுத்தரக் காலத்துக்கு நல்ல பலனை அளிக்கும்.
- ஆனால், குறுகிய காலத் தேவைகளுக்கு வருவாயைப் பெருக்கியாக வேண்டும். வரிக் குறைப்பு அறிவிப்பால் அரசின் பிரச்சினைகள் தீர்ந்துவிடவில்லை. மாறாக, செலவுக்கு ஏற்ப வருவாயைப் பெருக்கி சமப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (24-09-2019)