TNPSC Thervupettagam

நிலவேம்புக் கஷாயத்தின் பெயரால் டெங்கு தடுப்பு நடவடிக்கை

January 24 , 2020 1819 days 1355 0
  • டெங்குவுக்கு எதிராகச் சமீபத்தில் தடுப்பூசி கண்டறியப்பட்டிருப்பது உலகுக்குக் கிடைத்திருக்கும் நல்ல செய்தி. பெரியம்மையைப் போல டெங்குவையும் இந்த உலகிலிருந்து ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அந்தச் செய்தி கொடுக்கிறது.
  • இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், உலகின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன்’ வழி வெளியாகின.

டெங்கு

  • டெங்கு மிகுந்துள்ள நாடுகளில் 4 - 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. டெங்குவின் நான்கு வகை வைரஸ்களுக்கு எதிராகவும் பக்கவிளைவுகள் இல்லாமலும் டெங்குவுக்கு எதிராக 80% அளவுக்குப் பாதுகாப்பை வழங்குவதாகவும் இந்தத் தடுப்பூசி அமைந்திருக்கிறது. இது பயன்பாட்டுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு போன்ற அதேசமயம் தடுப்பூசிகளால் தடுத்திட முடியாத பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கொசு ஒழிப்பே முக்கியமான வழி.
  • டெங்கு குறிப்புகள்
  • அடிப்படையில், டெங்கு ஒரு வெப்ப மண்டல நோய். அது நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள நாடுகளில் அதிகமாகப் பரவுகிறது. சூடான தட்ப வெப்பமும் இடையிடையே மழையும் டெங்கு கொசுவான ஈடிஸ் எஜிப்டை பரவுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இந்த ஈடிஸ் கொசுக்கள், பொதுவாக தூய்மையான நீரில்தான் முட்டையிடும். அதன் முட்டையானது ஒரு வருடத்துக்குக்கூட உயிர்ப்புடன் இருந்து, அதன் மீது தண்ணீர் பட்டவுடன், பொரிந்து புழுவாக மாறிவிடும். பின், அந்தப் புழு வளர்ந்து கொசுக்களாக வளர்ச்சிதை மாற்றம் அடைந்துவிடும்.
  • நகரமயமாக்கல், நகர நிர்மாணத்தில் தவறான திட்டமிடல், துப்புரவின்மை ஆகியவை டெங்கு கொசு உற்பத்தியின் முக்கிய காரணங்களாக உள்ளன. ஈடிஸ் கொசுக்களால் நூறு மீட்டருக்குமேல் பறக்க இயலாது. எனவே, வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருந்தால், டெங்கு கொசுக்கள் நம்மை அணுகாமல் தவிர்க்கலாம். டெங்கு கொசு ஒழிப்பில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், ரசாயன பூச்சிக்கொல்லியைக் கொண்டு கொசுப் புழுக்களை அழித்தல், கொசு மருந்துப் புகை மூலம் வளர்ந்த கொசுக்களை அழித்தல் ஆகியவை முக்கியக் கூறுகள்.

பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு

  • இதையெல்லாம் செய்ய பெரிய பொது சுகாதாரக் கட்டமைப்பும் திறமை பெற்ற ஊழியர்களும் தேவை. ஆனால், டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சித் துறைக்கும் டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்தும் சுகாதாரத் துறைக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை.
  • நம்மூரில் கடந்த சில ஆண்டுகளில் டெங்கு பெரிய அளவில் பரவியதன் வழி வெளிப்படுத்தும் முக்கியமான செய்தி, பொது சுகாதாரத் துறையில் – முக்கியமாகக் கொசு ஒழிப்பில் – விழுந்துகொண்டிருக்கும் ஓட்டைதான். ‘கொசு கடிக்கும் வரை உள்ளாட்சித் துறையின் பொறுப்பு, கொசு கடித்த பின் சுகாதாரத் துறையின் பொறுப்பு’ என்று சொல்லும் அளவில்தான் இவர்களின் ஒத்துழைப்பு உள்ளது. இந்த இரண்டு துறைகளுக்கும் இடையே பரஸ்பர உரையாடலும் ஒத்துழைப்பும் இருந்தால்தான், கொசுக்களை ஒழிக்க முடியும்.
  • அரசியல் காரணங்களுக்காகவும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தாமல் இருக்கவும், டெங்கு நோய்த் தாக்குதல் எண்ணிக்கை குறைவாகவே வெளியிடப்படுவது பட்டவர்த்தனமானது. பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதில், நோய்த்தொற்று அறிவியல் ஆய்வுகள் மிக முக்கியமானவை. இதில் சிங்கப்பூர் முன்னோடியாக விளங்குகிறது. இந்தியாவைப் போலவே தட்பவெப்பம் நிலவுவதால், சிங்கப்பூரிலும் டெங்கு உள்ளது. ஆனால், அந்த நாடு பல மருத்துவ ஆராய்ச்சிகளாலும் மேம்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகளாலும், டெங்குவைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. உதாரணத்துக்கு, செயற்கைகோளைப் பயன்படுத்தி டெங்கு பாதிக்கபட்ட வீடுகள், தெருக்கள் மற்றும் டெங்கு கொசுக்களின் உற்பத்தியிடங்கள் போன்றவை வரைபடமாகத் தயாரிக்கப்படுகிறது. அதிலிருந்து டெங்கு கொசுக்களின் அடர்த்தி மற்றும் அதனை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன.

கஷாயம் சரியா?

  • தமிழ்நாட்டின் டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதைவிட மாற்று மருத்துவத்துக்கு வழிகாட்டுவது அரசுக்கு எளிதான வழியாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. டெங்கு மரண எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் ஒரு அரசின் மீது வரும் கோபத்தை, அரசாங்கம் விநியோகிக்கும் கஷாயம் கட்டுப்படுத்துவது இயல்புதானே!
  • தமிழ்நாட்டில் டெங்கு பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் நிலவேம்பு கஷாயம் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. ஒரு மருந்து – அது பாரம்பரிய மருந்தானாலும் சரி; நவீன மருந்தானாலும் சரி; அதன் மருத்துவத்தன்மை நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டியது முக்கியம். ஏனென்றால், அது மனித உயிர்களின் பாதுகாப்புத்தன்மையோடு சம்பந்தப்பட்டது.
  • இதுவரை நிலவேம்பின் விளைவுகள் மிக அடிப்படை ஆராய்ச்சிகளின் மூலமே அறியப்பட்டுள்ளன. முறையான மற்றும் கட்டுப்பாடான ஆராய்ச்சி முடிவுகளால் இன்னும் அவை நிறுவப்படவில்லை. சொல்லப்போனால், ஓர் ஆராய்ச்சியில், நிலவேம்பு முயல்களில் கருச்சிதைவை ஏற்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது. இதேபோல்தான் பப்பாளிச் சாறு மீதான நம்பிக்கையும். அதுவும் நிரூபிக்கப்படவில்லை. இதேபோல, இவையெல்லாம் எந்த அளவுக்கு எதிர்செயல்கள் மற்றும் பக்கவிளைவுகளை உண்டாக்காதவை என்றும் தெரியவில்லை. இதுபோன்று நிரூபணமற்ற கஷாயங்களை அரசே கொடுப்பது என்பது மக்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
  • எந்த ஒரு மருந்திலும் அதன் செயல்திறனைவிட அதன் பாதுகாப்புத்தன்மை மிகவும் முக்கியம். நவீன மருத்துவத்திலுள்ள ஒவ்வொரு மருந்தும் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் கட்டுப்பாடுகளுடன் வெளிவந்துள்ளன. நவீன மருந்துகளில் உள்ள பக்க விளைவுகள் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன. ஆரம்பத்தில் தெரியாதவை பிற்பாடு தெரியவரும்போது அந்த மருந்துகளே கைவிடப்படுகின்றன. ஆனால், மாற்று மருந்துகளிலும் இப்படி பக்க விளைவுகள் உண்டு என்பதை நாம் யோசிப்பதில்லை. சாமானிய மக்கள் அப்படி யோசிக்காமல் இருக்கலாம்; ஒரு அரசு அப்படி இருக்க முடியுமா?

நம்பிக்கையா, நிரூபணமா?

  • இது போன்ற மாற்று மருந்துகளை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு முக்கிய காரணம், அவர்களுக்குப் பாரம்பரியத்தின் மீதுள்ள பற்றும், அரசே இவற்றை அங்கீகரிக்கிறது என்ற எண்ணமும்தான். ஆனால், மருத்துவம் நம்பிக்கைகளின் மேல் கட்டமைக்கப்படுவதில்லை; நிரூபணங்களின் மீது கட்டமைக்கப்படுவதாகும்.
  • மேலும், ‘நிலவேம்புக் கஷாயம்’ ஒரு மருந்து என்று நாம் கொண்டோமேயானால், அதன் பயன்பாடு தொடர்பில் எந்த வழிமுறையும் இங்கு பின்பற்றப்படவில்லை. எந்த ஒரு மருந்துக்கும் அளவு உண்டு இல்லையா? ஒரு மருந்தை எப்படி கடைவீதியிலும், பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும் டீ – காபி விநியோகிப்பது மாதிரி அவரவர் கணக்குக்குத் தயாரித்து விநியோகிக்க முடியும்? இப்படியான அணுகுமுறையைச் சித்த மருத்துவர்களே ஏற்க மாட்டார்கள்.
  • நவீன மருத்துவம் மாற்று மருத்துவ முறைகளுக்கு எதிரானதல்ல. எப்போது அவை நிரூபிக்கப்படுமோ, உடனே நவீன மருத்துவம் அவற்றை உள்வாங்கிக்கொள்ளும். அதற்குப் பல உதாரணங்களும் உள்ளன. என்னுடைய நோக்கம் நிலவேம்புக் கஷாயம் அர்த்தமற்றது என்றாக்குவது அல்ல; அது மருந்து என்றால், அது நிரூபிக்கப்பட வேண்டும்;
  • அப்படி நிரூபிக்கப்பட்ட மருந்தானது முறையாகத் தயாரிக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்; மருந்தானது மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப அளவோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். எல்லாவற்றிலும் முக்கியம் டெங்கு போன்ற ஒரு நோயை எதிர்கொள்ள சாமானியர்கள் அது முறையான மருந்தாக இருக்கும்போது நிலவேம்புக் கஷாயம் நோக்கி நகரலாம்; அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியிலேயே கவனம் செலுத்த வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (24-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories