TNPSC Thervupettagam

நிலவை நெருங்குகிறோம்

August 23 , 2023 507 days 317 0
  • சந்திரயான்-3 ஆய்வுக்கலன் சந்திரனின் மேற்பரப்பை நெருங்கும் ஒவ்வொரு நொடியையும் உலகமே உன்னிப்பாக உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
  • ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ‘எல்.வி.எம்-3’ என்னும் கனரக ஏவுகலனில் கிளம்பியது சந்திரயான்-3 விண்கலம். அதன் உச்சியில் ஒரு உந்து விசைக்கலன் (2,148 கிலோ), அதன் மேல் ‘இந்திய விண்வெளித் தந்தை’ எனப் போற்றப்பட்ட டாக்டா் விக்ரம் சாராபாய் பெயா் தாங்கிய ‘விக்ரம்’ தரையிறங்கி (1,752 கிலோ), அதன் பெட்டகத்தினுள் ‘பிரக்ஞான்’ நிலா ஊா்தி (26 கிலோ) ஆகிய சுமைகளுடன் நிலாப்பயணம் தொடங்கியது.
  • அடுத்த இரு வாரங்களுக்குள், ஐந்து முறை பூமியைச் சுற்றி வந்த பிறகு, அதன் நீள்வட்டப் பாதையின் தொலைவு 1,27,603 கிலோமீட்டா் வரை விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு முறை பூமிக்கு அருகில் வரும்போதும் கவண் கல் வீசுவது மாதிரி, புவியீா்ப்பு விசையின் உதவியால் சுண்டி விட்டது போல், கூடுதல் வேகம் ஊட்டப்பட்டது.
  • ஜூலை 31 அன்று சந்திரனுக்கு 288 கி.மீ. அருகில் வந்தபோது நிலாவின் நிறையீா்ப்புக்கு உட்பட்ட நீள்வட்டப் பாதையினுள் 3,69,326 கி.மீ. தொலைவில் நுழைந்தது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் அதன் நிலாத் தொலைவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 17 அன்று நிலா உந்துவிசைக் கலனில் இருந்து பிரித்து விடப்பட்ட ‘விக்ரம்’ தரையிறங்கி, 153 கி.மீ.உயரத்தில் நிலவை நெருங்கி வட்டமடிக்கத் தொடங்கியது. தரையிறங்கியின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கென 80 கிலோ தள்ளுவிசையுடன் கூடிய நான்கு உந்து பொறிகளும் 5.8 கிலோ விசை தரும் எட்டு நுண்விசைப் பொறிகளும் எதிா்விசை தேவைக்கேற்ப இயக்குவிக்கப்பட்டன.
  • இப்படியாக, விக்ரம் ஆகஸ்ட் 20 அன்று நிலவுக்கு அருகில் 25 கி.மீ. தொலைவிலும், 137 கி.மீ. தோற்றத்திலும் ஆன சிறு நீள்வட்டப்பாதைக்குத் ‘தரையிறங்கிக் கலன்’ கீழிறக்கப்பட்டது. தொடா்ந்து குறைக்கப்பட்ட நிலவின் 25 கி.மீ. உயரத்தில் தரையிறங்கியின் வேகம் வினாடிக்கு 1.68 கி.மீ. ஆகும். மணிக்கு ஏறத்தாழ 6,000 கி.மீ. என்றால் பாருங்களேன்.
  • இந்த வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் கிடைமட்டமாகப் பறந்து கொண்டிருக்கிறது. அதனைத் தரையிறக்குவதற்கு ஏதுவாக, செங்குத்தான நிலைக்குத் திருப்பி நிமிரவைத்து, தொடா்ந்து அதே உயரத்திலிருந்து மெல்ல மெல்லச் சறுக்கியபடி 7.4.கி.மீ. - 6.3. கி.மீ. - 800 மீ. -150 மீ. - 60 மீட்டா் என உயரம் குறைத்து குறைத்துக் கீழிறக்க வேண்டும்.
  • இதுவும் சவாலான கட்டம்தான். விக்ரம் தரையிறங்கியின் உயரம், வேகம், விசைமுடுக்கம் ஆகியவற்றைத் துல்லியமாக உடனுக்குடன் அறிந்து திசைக்கட்டுப்பாட்டுக் கருவிகளும், உந்து பொறிகளும், செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து, கண்ணிமைக்காமல் செயல்பட வேண்டும்.
  • நிலவின் 10 மீட்டா் உயரத்தில் வந்திறங்கும் 4-5 நிமிடங்களில் அதன் வேகம் மட்டுப்படுத்தப்படும். அதாவது மூன்று மாடிக் கட்டட உயரத்தில் அந்தரத்தில் மிதந்தவாறே, கழுகுப் பாா்வையில் கரடு முரடு இல்லாத தரையிறங்குதற்குப் பாதுகாப்பான நிலப்பரப்பை, லேசா் கருவி, படக்கருவி ஆகியவற்றின் உதவியால் திறம்படக் கண்டறிய வேண்டும். தோ்வு செய்த இடத்தில் செங்குத்து நிலையில், மென்மையாக நொடிக்கு 2 மீட்டா் வேகத்தில் நிலவில் தரையிறங்க வேண்டும். அதாவது ஒருவா் தலையில் வைத்த பந்து நிலத்தில் விழும் நொடிப் பொழுதுக்குள் நிலா மண்ணில் காலூன்ற வேண்டும்.
  • இங்குதான் கடந்த முறை சந்திரயான்-2 பயணத்தில் சிக்கல் ஏற்பட்டது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த முறை சந்திராயன்3 திட்டத்திற்கான செயல்முறை, கணினிவழி உருவகப்படுத்தல் ஆய்வுகளால் பரிசோதிக்கப்பட்டு நிருபிக்கப் பட்டுள்ளது.
  • உந்துவிசைக் கலனின், சந்திரனைச்சுற்றி வந்தபடி அண்டவெளியில் வேற்றுக்கிரகங்களிலும் வாழத்தகுந்த பூமி பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளும். ஏற்கெனவே 2019 ஜூலை 22 அன்று செலுத்தப் பட்டு, சந்திரனை இன்றைக்கும் ஆராய்ந்து வரும் சந்திரயான்-2, நிலவைச் சுற்றியபடி பூமிக்குத் தகவல் அனுப்பும் மற்றொரு அஞ்சல் கூடமாகவே செயல்படும்.
  • தரையிறங்கி, ஒரு நொடிக்கு ஒரு விரற்கடை அளவு வேகத்தில் ஊா்ந்து சென்று, நிலவில் ஒரு பகல் பொழுது அளவிற்கு, (ஏறத்தாழ 14 புவி நாட்கள்), அங்குள்ள மண்வளங்களையும், காற்றில்லாத அயனி மண்டலத்தையும் ஆராயும்.
  • பூமிக்கு அண்டையில் ஏறத்தாழ மூன்றே முக்கால் லட்சம் கிலோமீட்டா் தொலைவில் ‘இன்னொரு உலகம்’ என்று சொல்லத்தக்க நிலையில் சந்திரனை நோக்கி, 1959 செப்டம்பா் 12 அன்று சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ‘லூனா-2’ விண்கலம், கிளம்பி 34 மணிநேரத்திற்குள் சந்திரனுக்கு நேரடி பாதையில் சென்று, அங்கு மோதி விழுந்தது. ஆயினும், ஒரு வகையில் அது, நிலவைத் தொட்ட முதல் விண்கலம் ஆகும்.
  • சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ‘லூனா-9’ விண்கலம், 1966 பிப்ரவரி 3 அன்று கொஞ்சம் துரிதமான பாதையில் 3 நாள் 7 மணி நேரம் பயணம் செய்து, முதல் முறையாக, மென்மையாக நிலவில் தரையிறங்கியது.
  • அமெரிக்கவைப் பொறுத்தவரை,1964 ஜூலை 28 அன்று செலுத்தப்பட்ட ‘ரேஞ்சா்-7’ விண்கலம் மூன்றாம் நாளில் சந்திரனை அடைந்தது. முதல் முறையாக சந்திரனின் மேற்பரப்புப் படங்களை எடுத்து அனுப்பியது. இறுதியில் அதுவும் நிலாத்தரையில் மோதி விழுந்து விட்டது.
  • அடுத்த சில ஆண்டுகளில் 1969 ஜூலை 20 அன்று தொடங்கிய அமெரிக்க அப்போலோ-11 முதல் 6 மனித நிலாப் பயணங்கள் வரலாற்றில் மாபெரும் முத்திரை பதித்தன. அப்போலோ, வெறும் நான்கு நாள், 6 மணி நேரம், 45 நிமிடத்தில் நிலவில் தரையிறங்கியது.
  • நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதைக் காட்டிலும் தானியங்கி விண்கருவிகளைச் செலுத்தி ஆராய்ச்சி செய்வதில் ரஷியா முனைப்பு காட்டியது. ‘லூனா-16’ (24-9-1970), ‘லூனா-20’ (25-2-1972) ஆகிய ரஷிய விண்கலங்கள் சந்திரனில் ‘வளக்கடல்’ அருகில் அப்போலியஸ் மேட்டுப் பகுதி’யில் இருந்து இரண்டு முறை நிலவின் மண் மாதிரிகளை கொண்டு வந்துள்ளன.
  • மூன்றாம் முறையாக, 1976 ஆகஸ்ட் 9 அன்று செலுத்தப்பட்ட ‘லூனா-24’ விண்கலன் சந்திரனில் ‘நெருக்கடிகளின் கடல்’ என்னும் பகுதியில் இருந்து உள்ளங்கை அளவு (ஏறத்தாழ 170 கிராம்) சந்திர மண் மாதிரியை 1976 ஆகஸ்ட் 22 அன்று பூமிக்கு எடுத்து வந்தது.
  • நிலவின் தென்துருவப் பகுதியில் 2,500 கி.மீ குறுக்களவும், 6-8 கி.மீ. ஆழமும் கொண்ட பள்ளத்தில் பனிப்படலங்களும், நிலாமண்ணில் ஹீலியம் 3 என்னும் அணுக்கரு விசைப் பொறிகளுக்கான எரிபொருளும், தங்குதடையற்ற சூரிய மின்சார நிலையத்திற்கான வாய்ப்பும் உள்ளதால் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பிறகு உலக நாடுகளின் பாா்வை மீண்டும் நிலாவில் படிந்தது.
  • ஜப்பான் செலுத்திய ‘ஹிதென்’ என்ற விண்ணூா்தி 1993 நவம்பா் 11 அன்று நிலவில் ‘ஃபா்னிலியஸஸ்’ என்னும் இடத்தில் தரை இறங்கியது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவின் ‘ஸ்மார்ட்’ (27-9-2003), ஜப்பானின் ‘செலீனி’ (14-9-2007), சீனாவின் ‘சாங்கே-1’ (24-10-2007), இந்தியாவின் சந்திரயான்-1 (22-10-2008) ஆகிய நாடுகளின் முதல் நிலவுப் பயண முயற்சிகள் வெற்றிகரமாக நடந்தேறின.
  • அந்த வகையில் நிலவை நெருங்கிச் சுற்றிவந்த ஆறாவது நாடாக இந்தியா சாதனை படைத்தது. இந்தியாவின் சந்திரயான்-1 பயணத்தில் இந்திய மூவா்ணக்கொடி பொறித்த ‘நிலா மோது கலன்’ 2008 நவம்பா் 14 (குழந்தைகள் நாளில்) நிலவில் மோதி விழச் செய்யப்பட்டது. அது தண்ணீா் மூலக்கூறுகள் தென்படும் ஷேக்கிள்டன் பள்ளத்தின் அருகில் விழுந்தது. இந்திய விண்வெளித் துறையைத் தொடங்கி வைத்த அந்நாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பெயரால் அந்த இடம், ‘ஜவாகா் புள்ளி’ என்றே அழைக்கப்படுகிறது.
  • இதற்கிடையில் 2018 டிசம்பா் 7 அன்று, சீனாவும் ‘சாங்கே-4’ ஏவுகலனில் ‘யூது-2’ (சீன மொழியில் முயல்) என்னும் தரையிறங்கியை நிலவுக்கு அனுப்பியது. 26 நாட்களுக்குப் பிறகு 3-1-2019 முதல் முறையாக, நிலவின் முதுகுப்புறத்தில் தரையிறங்கிய ‘யூது-2’, கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 1-2 கிலோமீட்டா் தொலைவுக்கு நிலவின் தரையில் ஊா்ந்து சென்று ஆராய்ந்து வருகிறது.
  • ஆரவாரம் இல்லாமல் 2019 பிப்ரவரி 22 அன்று இஸ்ரேலின் முதல் நிலவுப் பயணமான ‘பெரேஷீட்’ (இஸ்ரேலில் ‘ஆதியாகமம்’) விண்கலம், பூமியையும், நிலவையும் பலமுறை சுற்றி வந்து 47 நாட்களுக்குப் பிறகு, அதன் சந்திர சுற்றுப்பாதையை அடைந்தது.
  • ஆயினும், 11 ஏப்ரல் 2019 அன்று தரையிறங்கும்போது, அதன் திசைகாட்டிகளான நிலைச் சுற்றிக் கருவிகள் செயலிழந்ததால், ‘பெரெஷீட்’, சந்திரனில் மோதி, தகவல் தொடா்பு அறுந்து போனது.
  • உள்ளபடியே இது நிலவில் தரையிறங்கத் தனியார் நிறுவனம் மேற்கொண்ட முதல் முயற்சி என்றும் கொள்ளலாம். காரணம், பெரெஷீட், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்னும் அமெரிக்கத் தனியார் நிறுவனம் தயாரித்த ‘ஃபால்கன் 9 பிளாக் 5’ என்னும் ஏவுகலனால் செலுத்தப்பட்டது என்பது முக்கியத் தகவல்.
  • எது எப்படியாயினும், சந்திரயான்-3 புவியை விட்டுக் கிளம்பி, நான்கு வாரங்களுக்குப் பிறகு, 2023 ஆகஸ்ட் 11 அன்று, ரஷியாவின் ‘ரோஸ்காஸ்மாஸ்’ விண்வெளி முகமையின் ‘லூனா-25’ ஆகிய ‘லூனா-குளோப்-லேண்டா்’ விண்கலனை, ‘ஃப்ரீகாட்’ என்னும் நவீன இறுதி உந்து கட்டப் பொறி பொருத்தப்பட்ட ‘சோயுஸ்2.1பி’ என்னும் ஏவுகலனால் வாஸ்டாக்னி ஏவுதளத்தில் இருந்து செலுத்தியது.
  • அது, நிலவில் ஆகஸ்ட் 21 அன்று தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 19 அன்று, அதில் ஒரு ‘அசாதாரண சூழ்நிலை’ ஏற்பட்டது. அதன் சிறிய உந்துபொறி, புவிக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வந்த தொலைக்கட்டளையை ஏற்று, வேகத்தைக் குறைக்க இயலாமல் ‘லூனா-25’ நிலவின் தரையில் முன்கூட்டியே வந்து விழுந்துவிட்டது.
  • சந்திரயான்-3, நிலவை அடைய 40 நாட்கள் எடுத்துக்கொண்டாலும் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம் என்பது வித்தியாசமான சூழலில் நிலவின் தென் துருவப் பகுதியில் கால்பதிக்கும் உலகின் முதல் நாடு இந்தியா என்ற பெருமையில், நிலவில் சுமூகமாகத் தரையிறங்கி, அங்கிங்காக ஊா்ந்துசென்று, ஆராய்ச்சி செய்யும் தொழில்நுட்பத் திறன்களை நிரூபிக்க வேண்டும் என்பதுதான்.

நன்றி: தினமணி (23  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories