TNPSC Thervupettagam

நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் இந்தியக் குழந்தைகள் நிலை

October 23 , 2024 32 days 88 0

நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் இந்தியக் குழந்தைகள் நிலை

  • ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 2015 இல் ஐக்கிய நாடுகள் அவையால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) வரையறுக்கப்பட்டன. வறுமையையும் பசியையும் ஒழிப்பது, சுகாதாரத்தை மேம்படுத்துவது, கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட இதில் குறிப்பிடப்பட்டுள்ள 17 வழிகாட்டி இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 200 நாடுகள் இலக்குகளை எட்ட உறுதியேற்றன. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின்படி, குழந்தைகள் உடல்நலன் தொடர்பான இலக்கை எட்ட இந்தியா தவறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன்:

  • ‘பில்-மெலிண்டா கேட்ஸ் அமைப்பு’ வெளியிட்டுள்ள ‘கோல்கீப்பர்ஸ் 2024’ ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ள தரவுகளின்படி வளர்ச்சிக் குறைபாடு (stunting), ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் சவால்கள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தால் ஏற்கெனவே குழந்தைகளின் உடல்நலனில் அதிகப் பாதிப்புகள் ஏற்படுகிற நேரத்தில், எதிர்காலத்தில் நிலைமை மோசமாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் - பிறப்பதற்கு முன்பே உடல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதிக வெப்பநிலை, தீவிர வானிலை மாற்றங்கள், கனமழைப் பொழிவுகளால் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பங்களிக்கின்றன.

இந்தியாவின் நிலை:

  • உலக அளவில் ஏற்படும் குழந்தைகள் இறப்புகளில் 50% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படுபவை. இந்தியாவில் மட்டும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 50%க்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ச்சிக் குறைபாடு, குறிப்பிட்ட உயரத்துக்கேற்ற எடையின்மை (wasting), போதிய எடை இல்லாமை போன்றவை ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளை அதிகம் தாக்குகின்றன. 2023இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 38% ஆக இருந்த குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு பாதிப்பு, 2030 இல் 35% ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அளவில் இப்பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் என்பதுபோலத் தெரிந்தாலும், இது 15%க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதே நிலைத்த வளர்ச்சி இலக்கின் நோக்கம். உத்தரப் பிரதேசம் (46.46%), மகாராஷ்டிரம் (44.59%), மத்தியப் பிரதேசம் (41.61%) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளபோதும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. தேசிய அளவில் இப்பிரச்சினையைச் சமாளிக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,23,580 கோடியைச் செலவிட அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதயப் பாதிப்புகள் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதால், இப்பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
  • 2030இல், நிலைத்த வளர்ச்சி இலக்கை எட்டுவதில் இந்தியா தவறவிடக்கூடும் எனக் கருதப்படும் நிலையில், காசநோய் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவருவதும் கேள்விக்குறியாக உள்ளது. நிலைத்த வளர்ச்சி இலக்கின்படி, 2030இல் ஒவ்வொரு ஒரு லட்சம் பேரில் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கையை 20ஆகக் குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 2023இல் ஒவ்வொரு 1 லட்சம் பேரில் 216 பேரைத் தாக்கும் காசநோய் பாதிப்பு, 2030இல் 194 ஆக மட்டுமே குறைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும், இந்தியாவில் 26 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்; 3 லட்சம் பேர் இறக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடும், காசநோய் பாதிப்பு ஏற்படுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரைக் காசநோய் எளிதாகத் தாக்கக்கூடும், அப்படித் தாக்கினால் அதிலிருந்து மீண்டுவருவதும் எளிதல்ல. இந்தத் தரவுகள் இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைக்கான தீர்வைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

என்ன செய்யலாம்?

  • ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு வழிவகுக்கும் மூல காரணங்களான வறுமை, பொருளாதாரச் சமத்துவமின்மை, பாலினப் பாகுபாடு, காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும். இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகாண வேண்டும் என ‘கோல்கீப்பர்ஸ் 2024’ ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத விவசாய முறை, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளைத் தேர்வு செய்து கவனம் அளித்தல், நுண் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும் சூழலை உருவாக்குதல், குறிப்பாக, பெண் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்து நிறைந்த உணவை வழங்குதல், ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் போன்றவற்றுக்கான திட்டங்களை வகுத்துக் கவனம் செலுத்தினால், அடுத்த ஆறு ஆண்டுகளில் பெருமளவு பாதிப்புகளைக் குறைக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories