- நிதி ஆயோக்கின் 2023-24ஆம் ஆண்டுக்குரிய நிலைத்த வளர்ச்சி இலக்குகளுக்கான இந்தியக் குறியீடு (Sustainable Development Goals – India Index) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
- நிலைத்த வளர்ச்சி இலக்குகள்: பசி, வறுமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் குடிநீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஐக்கிய நாடுகள் அவை, 2030ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டிய 17 இலக்குகளை நிர்ணயித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த இலக்குகளை அடைவதற்கு இந்தியா உள்பட 200 நாடுகள் 2015 செப்டம்பரில் உறுதியேற்றன.
இந்தியக் குறியீடு:
- எஸ்டிஜி இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளின் செயல்பாட்டைக் கண்காணித்து மதிப்பிடுவதற்காக நிதி ஆயோக் அமைப்பு, 2018இல் எஸ்டிஜி இந்தியக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது. ஐ.நா.வின் இந்தியப் பிரிவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறியீடு, தேசிய அளவிலும் மாநில/ மத்திய ஆட்சிப் பகுதிகள் அளவிலும் எஸ்டிஜி இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் பயணத்தை மதிப்பிடுகிறது. எஸ்டிஜி இலக்குகள் சார்ந்த துறைகளில் அரசுத் திட்டங்கள், நடவடிக்கைகள், பிற வகைத் தலையீடுகளால் நிகழ்ந்த முன்னேற்றங்கள் கண்காணிக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.
- இந்த இலக்குகள் சார்ந்த துறைகளில் மாநில - மத்திய ஆட்சிப் பகுதி அரசுகளின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டை மதிப்பிடும் வகையில் இந்தக் குறியீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் எஸ்டிஜி இலக்குகளை அடைவதை உறுதிசெய்வது மட்டுமல்லாமல் மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கு இடையே நேர்மறையான போட்டி மனப்பான்மை, பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதும் ஆகும்.
இலக்குகளின் எண்ணிக்கை:
- இதுவரை நான்கு முறை இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. 2018-19இல் வெளியிடப்பட்ட முதல் குறியீட்டில் 13 இலக்குகள் (goals) மதிப்பிடப்பட்டன. 2019-20இல் வெளியிடப்பட்ட இரண்டாவது குறியீட்டில் 16 இலக்குகள் மதிப்பிடப்பட்டன. 2020-21இல் மூன்றாவது குறியீட்டில் 17 இலக்குகள் மதிப்பீட்டுக்கு உள்படுத்தப்பட்டன. மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காவது குறியீட்டில் 16 இலக்குகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு முறை:
- எஸ்டிஜி இலக்குகள் சார்ந்த ஒட்டுமொத்தச் செயல்பாடுகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் 0-100 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மதிப்பெண் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவு அந்த மாநிலம் / மத்திய ஆட்சிப் பகுதி குறிப்பிட்ட எஸ்டிஜி இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் அடையும் நிலைக்கு நெருக்கமாகச் சென்றுள்ளது என்று பொருள்.
- 0-49 மதிப்பெண்களைப் பெறும் மாநிலங்கள் / மத்திய ஆட்சிப் பகுதிகள் ‘லட்சியவாதி’ (Aspirant), 50-64 மதிப்பெண்களைப் பெறுபவை ‘செயல்படுகிறவை’ (Performer), 65-99 மதிப்பெண்களைப் பெறுபவை ‘முன்னணியில் இருப்பவை’ (Front-runner) என்று வகைப்படுத்தப்படுகின்றன. 100 மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால் ‘சாதனையாளர்’ (Achiever) என்று வகைப்படுத்தப்படும்.
உயரும் மதிப்பெண்கள்:
- 2018 இல் 57 புள்ளிகளாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2019-20இல் 60, 2020-21இல் 66 எனப் படிப்படியாக அதிகரித்து 2023-24இல் 71 புள்ளிகள் ஆகியுள்ளது. வறுமை ஒழிப்பு (எஸ்டிஜி இலக்கு 1), பொருளாதார வளர்ச்சி (எஸ்டிஜி இலக்கு 8), காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் (எஸ்டிஜி இலக்கு 13) ஆகியவற்றில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் அதிகரிப்பதற்குப் பங்களித்துள்ளன.
- மாநில அளவில் கேரளம், உத்தராகண்ட் ஆகிய இரண்டும் 79 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றன. முதலிடத்தை இரண்டு மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதால், தமிழ்நாடு 78 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்த ஆண்டு 65-99 மதிப்பெண்களுடன் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
- அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், ஒடிஷா உள்பட 10 மாநிலங்கள் / மத்திய ஆட்சிப் பகுதிகள் இந்த வகைமைக்குள் புதிதாக இணைந்துள்ளன. அனைத்து மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளின் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் 1 முதல் 8 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளன. அசாம், மணிப்பூர், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் மதிப்பெண்கள் எட்டுப் புள்ளிகள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டின் நிலை:
- 2019-20 குறியீட்டிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பெற்றுவிட்டது. தொடர்ந்து, அந்த இடத்தைத் தக்கவைத்துவருகிறது. 2018-19இல் 66 புள்ளிகளாக இருந்த தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2023-24இல் 78 ஆக அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் - நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு எஸ்டிஜி இலக்குகளில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துவருகிறது. 2023-24இல் ஒட்டுமொத்தப் பிரசவங்களில் மருத்துவமனைகளில் நிகழ்ந்தவற்றின் விகிதம் 97.18% ஆக அதிகரித்திருப்பது ஓர் உதாரணம்.
- எஸ்டிஜி இலக்குகளை அடைவதற்காக நான்கு கோடி மலிவு விலை வீடுகள் கட்டுவதற்கான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, 30 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கான ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு சீரான முறையில் நடைமுறைப்படுத்திவருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 07 – 2024)