- மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகளில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் நிபுணர்களைக் கொண்டு சிறப்பான திட்டங்களை வடிவமைத்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதில் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகள் முதலீட்டாளர்களிடமிருந்து அதிக அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- அதன் விளைவாக அவர்களது போர்ட்போலியோ மதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இருப்பினும், லார்ஜ் கேப் திட்டங்கள் என்பதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் இன்னும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளன என்றால் அது மிகையில்லை. ஏனெனில், பணவீக்கம் போன்ற புறக் காரணிகளால் உண்டாகும் அழுத்தத்தையும், தாக்கத்தையும் குறைக்க உதவுவதில் லார்ஜ் கேப் பண்டுகளுக்கு இணையாக வேறு எதுவும் இல்லை எனும் முதலீட்டாளர்களிடம் காணப்படும் திண்ணமான எண்ணமே அதற்கு மிக முக்கிய காரணம்.
புவிசார் அரசியல் தாக்கம்:
- இந்தியா வலுவான பொருளாதார அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டிருந்த போதிலும் உலகளாவிய பணவீக்க சூழல், புவிசார் அரசியல் பதற்றம் போன்ற மிக முக்கிய புறக் காரணிகள் என்பது முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனை தவிர்க்க அல்லது குறைக்க விரும்பும் வழிமுறைகளில் ஒன்றுதான் லார்ஜ் கேப் பரஸ்பர நிதி திட்டங்களின் தேர்வு.
முதன்மை 100 நிறுவனங்கள்:
- லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்ட் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முன்னணி 100 நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இவை கணிசமான சந்தை மூலதனத்தை கொண்ட முதன்மையான நிறுவனங்களாகும். இந்நிறுவனங்களின் செயல்பாட்டு சாதனை என்பது பொதுவெளியில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும், வலுவான இருப்புநிலை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றால் இவை முன்னணி 100 நிறுவனங்களில் இடம்பிடித்துள்ளன.
- மிட் மற்றும் ஸ்மால் கேப் உடன் ஒப்பிடும்போது இந்த 100 நிறுவனங்களில் காணப்படும் ஏற்ற, இறக்கம் என்பது குறைவாகவே இருக்கும். இதனால், பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பண்டுகளில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இது, அவர்களின் முதலீட்டுக்கு மோசம் ஏற்படுவதை தடுத்து நியாயமான வளர்ச்சியை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் பண்ட்:
- அந்த வகையில், ஐசிஐசிஐ நிறுவனத்தின் புருடென்ஷியல் புளூசிப் பண்ட் என்பது மிகப்பெரிய நிலையான சாதனை செயல்திறன் உடையதாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. தர மேலாண்மை, நல்ல வளர்ச்சி திறன், உ.யர் நம்பிக்கை கொண்ட வகையில் இந்த புளூசிப் பண்டுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், இந்த லார்ஜ் கேப் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்குகின்றன.
- நடப்பாண்டு பிப்ரவரி 29 நிலவரப்படி இந்த புளூசிப் பண்டுகள் ஓராண்டு காலத்தில் 39.37 சதவீத வருவாயையும், மூன்று ஆண்டுகளில் 20.42 சதவீத வருவாயையும், ஐந்து ஆண்டுகளில் 18.74 சதவீத வருவாயையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன் விளைவாக, இந்த பண்ட் அதன் பெஞ்ச்மார்க் குறியீட்டை முறியடித்தது மட்டுமல்லாமல், சராசரிக்கு அதிகமான செயல்திறனையும் வழங்கியுள்ளது.
- நீண்ட கால அடிப்படையில் செல்வ வளத்தை கட்டமைக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இதுபோன்ற லார்ஜ் கேப் பண்டுகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 04 – 2024)