TNPSC Thervupettagam

நீதிக்கான காத்திருப்புக்கு எப்போது முடிவு?

January 12 , 2025 3 days 100 0

நீதிக்கான காத்திருப்புக்கு எப்போது முடிவு?

  • சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக அரசுப் பொறுப்பில் இருக்கிற அதிகாரியும் அரசியல் செல்வாக்கு உடைய ஒருவரும் இணைந்து செயல்பட்டிருப்பது எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள தடைகளைப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
  • சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி 2023 ஆகஸ்ட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் 14 வயதுச் சிறுவனைக் கைது செய்தது காவல்துறை. ஆனால், 30 வயது சதீஷ் என்பவர்தான் முதன்மைக் குற்றவாளி எனவும் இந்த வழக்குத் தொடர்பாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காணொளி வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கைத் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுப் பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஏழு பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

நீதியை மறுக்கும் ‘அதிகாரம்’:

  • இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சொல்லப்படும் சதீஷைக் காப்பாற்ற அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர் உதவியதோடு, சிறுமிக்கு நீதி கிடைப்பதையும் தடுத்திருக்கிறார் என்பதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்தது. சுதாகரையும் அவருக்கு ஆதரவாக இருந்த காவல் ஆய்வாளரையும் கைது செய்தது. இது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு சுதாகரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து அதிமுக நீக்கியிருக்கிறது. காவல் ஆய்வாளர் ராஜியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • அதிகார பலமும் அரசியல் செல்வாக்கும் இருந்தால் சட்டத்தைத் தங்கள் வசதிக்கு ஏற்ப வளைக்கலாம் என்பதற்கான சிறு உதாரணம் இது. வட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறவரும் காவல் ஆய்வாளரும் நினைத்தாலே உண்மையை மறைத்துக் குற்றவாளியை எளிதாகத் தப்பிக்க வைக்க முடிகிறபோது, உயர் பதவிகளில் இருக்கிறவர்களின் அதிகாரக் கரங்கள் எந்த அளவுக்குச் சட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் என்பது குறித்துச் சொல்லவே தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஞானசேகரனின் அரசியல் பின்புலமும் சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதுச் சிறுமியைக் கொன்றதாக 2024இல் கைதுசெய்யப்பட்ட முகமது நிஷாத் உள்ளிட்ட அவரது உறவினர்களின் பொருளாதாரச் செல்வாக்கும்கூட ஆய்வுக்குரியவை.

தண்டனைகளால் தவறுகள் குறைகின்றனவா?:

  • அண்ணாநகர் வழக்கு குறித்துத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் வழக்கு திசைதிருப்பப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவைப் பாராட்டியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 14 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதோடு 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனை முதல் அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
  • ஏற்கெனவே கடுமையான தண்டனைகள் நடைமுறையில் இருந்தும்கூடச் செல்வாக்குப் படைத்தவர்கள், பெண்கள் - சிறுமியருக்கு எதிரான தொடர் குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம், வழக்குகள் கையாளப்படுவதில் கடைப்பிடிக்கப்படும் அசட்டையும் நீதி கிடைப்பதில் ஏற்படுகிற காலதாமதமும் குற்றவாளிகளுக்குப் பெரும் துணிவைத் தருகின்றன. ஆண்டுக்கணக்கில் போராடித்தான் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே நீதி பெற முடியும் என்கிறபோது எத்தனை பேர் அந்தப் போராட்டத்துக்குத் தயாராக இருப்பார்கள்?

தேங்கும் வழக்குகள்:

  • பெண்கள் - சிறுமியருக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற பாலியல் குற்றங்களில் பெரும்பாலானவை வெளியே தெரிவதில்லை. அண்ணாநகர் சிறுமியின் பெற்றோரைப் போல ஒவ்வொருவரும் காணொளி வெளியிட்டு நீதிக்காகக் கையேந்திக் கரைய வேண்டுமா என்கிற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக, 18 வயதுக்கு உள்பட்ட சிறுமியர் தொடர்பான போக்சோ வழக்குகளில் பெண்ணுக்கு அவப்பெயர் நேர்ந்துவிடும், கண்ணியம் கெட்டுவிடும், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பது உள்ளிட்ட காரணங்களால் குடும்பத்தினரே குற்றங்களை மறைத்துவிடுகிற துயரச் சம்பவங்களும் இங்கே நிகழ்கின்றன. இப்படியொரு பின்னணியில் இருந்துதான் நாம் வழக்குகளையும் நீதியை வழங்குவதில் எளியவர்கள் நடத்தப்படும் விதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.
  • பெண்கள் - சிறுமியருக்கு எதிரான பாலியல் வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் போக்சோ நீதிமன்றங்களும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 2021 அக்டோபர் நிலவரப்படி இந்த நீதிமன்றங்களில் 1,81,689 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டு போக்சோ நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் போக்சோ நீதிமன்றங்கள் இல்லை; பாதிக்கப்படும் சிறுமியர் பக்கத்து மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களுக்குச் செல்லும் அவலநிலையே நீடிக்கிறது.
  • பெண்களுக்கு நீதி வழங்குவதில் உள்ள போதாமையைத்தான் இவை உணர்த்துகின்றன. பெண்கள் - சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழாத வண்ணம் பாதுகாப்பதோடு குற்றங்கள் நிகழ்ந்தால் அவற்றுக்கு உடனுக்குடன் பாரபட்சமற்ற நீதி வழங்கப்படும்போதுதான் அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories