TNPSC Thervupettagam

நீதித் துறைக்கு நன்றி சண்டீகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

February 23 , 2024 185 days 99 0
  • உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பால் இந்திய ஜனநாயகம் தடம் புரண்டு விடாமல் காப்பாற்றி இருக்கிறது. தேர்தல்களில் முறைகேடுகள் நுழைந்துவிடாமல் தடுக்கும் நீதித் துறையின் முனைப்புகளை எத்துணை பாராட்டினாலும் தகும்.
  • ஒன்றியப் பிரதேசமான சண்டீகர் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளும், விதிமுறை மீறல்களும் தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்து இருக்கிறது. அத்துடன் நின்றுவிடவில்லை. "ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று தங்களது தீர்ப்பில் வெளிப்படையாகவே கண்டித்திருக்கிறார்கள்.
  • தேர்தலில் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். வாக்குச் சீட்டைத் திருத்தி அவற்றைச் செல்லாததாக்கிய தேர்தல் அதிகாரிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
  • 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டீகர் மாநகராட்சி மன்றத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13, காங்கிரஸுக்கு 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு 14 உறுப்பினர்களும், அகாலிதளத்துக்கு ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள். சண்டீகர் மக்களவை உறுப்பினருக்கும் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. நியமன உறுப்பினருக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
  • "இந்தியா' கூட்டணியின் சார்பில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் குல்தீப் குமாரை மேயர் வேட்பாளராக நிறுத்தின. 20 வாக்குகள் இருப்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவிதப் பிரச்னையும் இருந்திருக்க நியாயமில்லை. ஆனால், 16 வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது.
  • தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட நியமன உறுப்பினர் அனில் மாசிஹ், ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்ற 8 வாக்குகள் செல்லாது என்று நிராகரித்து, 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். வாக்குச் சீட்டுகளில் அனில் மாசிஹ் திருத்தங்கள் செய்யும் காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியபோது, மேயர் தேர்தலில் நடைபெற்றிருக்கும் முறைகேடு பரவலான விவாதப் பொருளானது.
  • பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தை அணுகியபோதே, இப்போது உச்சநீதிமன்றம் எடுத்தது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியும். உயர்நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கை எடுத்துக் கொள்ளாமல் மூன்று வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது.
  • வழக்கை அனுமதிக்கும்போதே, தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் கண்டிக்கத் தவறவில்லை. வழக்கை உடனே விசாரித்து முடிவு தெரிவிக்காமல் மூன்று வார காலத்துக்குத் தள்ளிப்போட்ட உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியது. பிரச்னை நீதிமன்றத்தின் கவனத்தை எட்டி விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, மேயராக அறிவிக்கப்பட்டிருந்த பாஜகவைச் சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
  • மறு தேர்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வாக்குச் சீட்டுகளை நேரில் பரிசோதனை செய்திருக்கும் நிலையில் அதற்கான தேவை எழவில்லை என்கிறது தீர்ப்பு.
  • "மாநகராட்சி விதிமுறைகள் செல்லாதவை என்று நிராகரிக்க நிபந்தனைகளை வகுத்திருக்கிறது. அந்த நிபந்தனைகள் எதையும் இந்தத் தேர்தலில் மீறவில்லை என்பதால் மறு தேர்தலுக்கான தேவை இல்லை. தேர்தல் அதிகாரியின் செயல்பாட்டில்தான் தவறே தவிர, வாக்குச் சீட்டில் பிரச்னை எதுவும் இல்லை' என்று தெளிவுபடுத்தி, நடைபெற்ற தேர்தலில் 20 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளரை மேயராக அறிவித்திருக்கிறது.
  • அரசியல் சாசனப் பிரிவு 142, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உதவியிருக்கிறது. அந்த சாசனப் பிரிவின்படி, உச்சநீதிமன்றத்துக்கு அசாதாரண அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவியல், குடிமையியல் சட்டங்களில் வழிமுறைகள் இல்லாமல் இருந்தால், நியாயத்தை நிலைநாட்டத் தன்னிச்சையாக முடிவு செய்யும் அதிகாரத்தை அரசியல் சாசனப் பிரிவு 142 உச்சநீதிமன்றத்துக்கு வழங்குகிறது.
  • சண்டீகர் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிவை அறிவித்திருக்கிறது. தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனில் மாசிஹ் மீது கிரிமினல் நடவடிக்கை தொடரவும் உத்தரவிட்டிருக்கிறது.
  • உலகின் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கும் இந்தியாவில் தொடர்ந்து முறையாகவும் அதிக அளவில் தவறுகள் நேராமலும் தேர்தல்கள் நடந்து வருகின்றன. அதற்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்தான் காரணம். சண்டீகர் மாநகராட்சித் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் வரம்பில் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.
  • தேர்தல் ஆணையமும், நீதித் துறையும்தான் இந்தியாவின் ஜனநாயகம் தடம் புரண்டு விடாமல் காப்பாற்றுகின்றன. அந்த அளவில் ஆறுதல்!

நன்றி: தினமணி (23 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories