TNPSC Thervupettagam

நீதிபதிகளும் அரசியலும் - ‘கூலிங் பீரியட்’ கொண்டு வரலாமே?

November 26 , 2024 51 days 126 0
  • ஓய்வுபெற்ற நீதிபதிகள் உடனே அரசியலுக்கு வருவது மற்றும் முக்கிய பதவிகளை வகிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற டி.ஒய்.சந்திரசூட் பேசியுள்ளார். ‘‘நீதிபதிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் உடனடியாக ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது, அவர்கள் பணியில் இருக்கும்போது அரசியல் தலையீடு இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். நீதிபதிகள் அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டு பணியாற்ற வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. நீதிபதி பதவியில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இந்திய குடிமகனுக்கான அனைத்து உரிமையும் உண்டு’’ என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
  • ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து பின்னர் ஆளுநர், எம்பி., போன்ற பதவிகளைப் பெற்ற நீதிபதிகளை மனதில் வைத்து அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். நீதிபதிகளாக இருந்துவிட்டு அரசியல் பதவிகளுக்கு வருபவர்கள் மீதான விமர்சனம் நாட்டில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
  • குறிப்பாக, மகாராஷ்டிரா தேர்தல் முடிவில், சிவசேனா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தாவல் குறித்த வழக்கில் தாமதமான தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஒரு காரணம் என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சந்திரசூட்டின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் தெரிவித்துள்ளதுபோல், இந்தியக் குடிமகன் ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை அவர் நீதிபதியாக இருந்தார் என்பதற்காக மறுத்துவிட முடியாது.
  • அதேநேரம், அரசியல் பதவி பெறுவதற்காக, தனது பணிக்காலத்தில் பாரபட்சமாக நடந்திருப்பாரோ என்ற சந்தேக நிழல் அவர் மீது விழுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதும் நியாயமானதே. நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டபோதே, இத்தகைய முணுமுணுப்பு ஒருதரப்பினரிடம் இருந்து எழுந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியக் குடிமகனுக்கு உள்ள உரிமை ஒருபுறம், நடுநிலையாக தனது பணியை ஆற்றியவர் என்ற நம்பகத்தன்மை மறுபுறம் ஆகிய இரண்டுக்கும் இடையே நீதிபதி பொறுப்பில் இருப்பவர்கள் தவிப்பதன் எதிரொலியே நீதிபதி சந்திரசூட்டின் கருத்தாகும். வேறு எந்த துறையில் இருந்து ஓய்வுபெறுபவர்களுக்கும் இத்தகைய சிக்கல் இல்லை. சட்டப்பூர்வமாக பார்த்தால், நீதிபதி பொறுப்பு வகித்தவர்கள் அரசியல் பதவி வகிக்க எந்த தடையும் இல்லை. ஆனால், தார்மீக அடிப்படையில் பார்த்தால், ஒரு விமர்சனம் அவர்கள் மீது வைக்கப்படுவதில் உள்ள நியாயம் புரிகிறது.
  • இப்பிரச்சினையை சமாளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது என்பது போன்ற ‘கூலிங் பீரியட்’ என்று சொல்லப்படும் கால இடைவெளியை அனைத்து தரப்பும் பரிந்துரைத்து அதற்குரிய விதிமுறைகளை வகுத்தால், இதுபோன்ற சிக்கலுக்கு தீர்வு காண முடியும். நீதிபதிகளும் உடனடி பதவியை எதிர்பார்த்து ஆதாயம் கருதி எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை என்ற நல்லெண்ணமும் அவர்கள் மீது ஏற்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories