TNPSC Thervupettagam

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் கூடாது

December 13 , 2019 1861 days 1460 0
  • உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாகப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு ஆறு மாதங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு வரவேற்கப்பட வேண்டியது.

நீதிபதிகளின் எண்ணிக்கை

  • உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளில் 38% காலியாக இருக்கிறது. ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் காலியாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 213 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அவை அரசின் பரிசீலனையில் இருக்கின்றன என்று டிசம்பர் 10 அன்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • உச்ச நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் அடங்கிய தெரிவுக் குழுவால் (கொலிஜியம்) பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் பிரதமரின் அலுவலகத்திலும், குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமன நடைமுறையின் ஒவ்வொரு நிலைக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை விதித்துள்ளது.

பணி

  • நீதிபதி பணியிடம் காலியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அதை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆறு வார காலத்துக்குள் குறிப்பிட்ட மாநில அரசு, தனது பரிந்துரைப் பட்டியலை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதையடுத்த நான்கு வாரத்துக்குள் சுருக்க அறிக்கை தெரிவுக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெரிவுக்குழு நீதிபதிகளுக்கான பெயர்களைப் பரிசீலித்தவுடன், சட்ட அமைச்சகம் மூன்று வாரங்களுக்குள் தனது பரிந்துரையைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அதன் பிறகான நடைமுறைகளுக்கு எந்தக் கால வரையறையும் செய்யப்படவில்லை.
  • நீதித் துறையின் உயர் பதவிகளுக்கான நியமனத்தையும் பணியிட மாறுதல்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத் தெரிவுக்குழுவின் வசமே உள்ளது.

உச்சநீதிமன்றம் – மத்திய அரசு

  • அதைக் கைமாற்றி, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கு 2015-ல் நடந்த முயற்சிகளே மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
  • அப்போது தொடங்கி, நீதிபதிகள் நியமனத்தில் கால தாமதம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. நீதிபதிகளைப் பரிந்துரைத்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெயர்கள் ஆட்சேபணையுடன் திருப்பி அனுப்பப்பட்டதைக் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் குறை கூறியிருந்தது. தெரிவுக்குழுவால் மீண்டும் பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டால் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதைத் தவிர்த்து அரசுக்கு வேறு வழியில்லை.
  • அரசின் அங்கங்களான நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையே இத்தகைய பிணக்குகள் எழுவது தவிர்க்க இயலாததுதான். ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அரசு ஏற்படுத்தும் காலதாமதமானது, விரைந்து நீதியளிக்கும் நடைமுறையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும். அது அரசுக்கு அவப்பெயரைத்தான் அளிக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories