TNPSC Thervupettagam

நீதிபதிகள் நியமனம் கால தாமதம் களையப்பட வேண்டும்

October 4 , 2023 289 days 208 0
  • நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருப்பது கவலைக்குரியது.
  • நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் செய்யும் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், சுதான்ஷு தூலியா அமர்வு, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக நவம்பர் 2022இலிருந்து வழங்கப்பட்ட 70 பரிந்துரைகள் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
  • கடுமையான கலவரச் சூழல் நிலவும் மணிப்பூர் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்துக்குத் தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பரிந்துரையும் அவற்றில் ஒன்று. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி இது தொடர்பாக அரசின் விளக்கத்தைத் தர ஒரு வார காலம் அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்தவரை உயர் நீதிமன்ற கொலீஜியம் அனுப்பும் பரிந்துரைகளை மத்திய அரசு அடிப்படைப் பரிசோதனைகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்த 70 பரிந்துரைகளும் மத்திய அரசிடமே உள்ளன. பரிந்துரைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆட்சேபணை இருப்பதாகவும் தெரிவிக்கப்படவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  • இதற்கு முன்பு, கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சிலர், மத்திய பாஜக அரசை விமர்சித்தது உள்ளிட்ட அரசியல் காரணங்களுக்காக, அவர்களை நீதிபதிகளாக நியமிப்பதை மத்திய அரசு நிறுத்திவைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
  • ஆனால், இந்த 70 பரிந்துரைகள் தொடர்பான கால தாமதத்துக்கு அப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்போகும் விளக்கத்தில் இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படலாம். அவை நியாயமான நடைமுறைக் காரணங்களாகக்கூட இருக்கலாம்.
  • இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 1,140; ஆனால், தற்போது 774 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதேநேரம், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 60,72,729. இவற்றில் கிட்டத்தட்ட 75% வழக்குகள் ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ளவை.
  • மத்திய நீதித் துறை, தேசிய நீதிசார் தரவுத்தளம் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட இந்தத் தரவுகள், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பற்றாக்குறையால் நீதி வழங்கலில் நிலவும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தப் போதுமானவை.
  • மேலும், நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த சிலர், நீண்ட கால தாமதம் காரணமாகக் கடந்த சில மாதங்களில் தாமாகவே பின்வாங்கிவிட்டதாக நீதிபதி கெளல் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனால், தரமான நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தின் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படுவதாக அவர் தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.
  • ஆகவே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தன்னிடம் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் மீது மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காரணமின்றி நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்படும் விளக்கம் இதற்கான தொடக்கமாக அமையட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories