- “என்னைத் தண்டியுங்கள். நான் கவலைப் படவில்லை. வரலாறு என்னை விடுதலை செய்யும்!” - என முடிவுற்ற ஃபிடெல் காஸ்ட்ரோவின் எழுச்சியுரை இன்று எழுபதாண்டுகளை நிறைவு செய்கிறது. 1953 ஜூலை 26 அன்று ஃபிடெல் காஸ்ட்ரோவின் தலைமையில் மான்கடா ராணுவ முகாமின்மீது தாக்குதல் தொடுத்த இந்த இளைஞர்கள் படை, பின்னாளில் ‘ஜூலை 26 இயக்கம்’ என்று வரலாற்றில் பதிவானது. திட்டமிடலில் நிகழ்ந்த சில தவறுகளால், அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. ஆனால், அந்தத் தோல்வியுடன் புரட்சியின் வரலாறு முடிந்துவிடவில்லை!
தாக்குதலின் பின்னணி
- 1952 ஜூன் 1 அன்று கூபாவின் (Cuba) அதிபர் தேர்தல் நடைபெறவிருந்தது. முன்பாக, மார்ச் 1 அன்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இத்தேர்தலில் போட்டியிட்ட மூவரில், ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா மூன்றாவது இடத்தில் இருந்தது தெரியவந்தது. பத்து நாள்களுக்குப் பிறகு, அதிகாலை 2.43 மணிக்குக் கூபாவின் மிகப்பெரும் ராணுவத் தளமான கொலம்பியா முகாமுக்குள் நுழைந்த பாடிஸ்டா, ராணுவத்தைத் தன் பக்கம் வைத்துக்கொண்டு, அதிரடியாகத் தன் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டார்.
- சில வாரங்களுக்குப் பிறகு, 25 வயதே ஆன ஒரு வழக்கறிஞர் ஹவானாவின் அவசர விஷயங்களுக்கான நீதிமன்றத்தின் முன்வந்து, பாடிஸ்டாவும் அவரது கூட்டாளிகளும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட ஆறு விதிகளை மீறியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். “கூபாவில் நீதிமன்றம் இருக்கிறதென்றால், இந்த விதிமீறல்களுக்காக பாடிஸ்டா தண்டிக்கப்பட வேண்டும்” என்று வாதிட்டார்.
- இரண்டாவது முறையாகச் சதிசெய்து ஆட்சியைப் பிடித்த ஒரு ராணுவ மோசடிக்காரனை எதிர்த்து, தன்னந்தனியாக இப்படிச் சவால் விட்டது யார்? ஃபிடெல் காஸ்ட்ரோ எனும் இளம் வழக்கறிஞர்தான். சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்த அவர், நாட்டின் சட்டத்தை அமலாக்குங்கள் என்றுதான் நீதிமன்றத்தின் படியேறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தது.
புரட்சிப் படை
- புரட்சி மட்டுமே ஒரே வழி என்று ஃபிடெல் முடிவுசெய்தது அதன் பின்னர்தான். தோல்வியடையவே வாய்ப்பு அதிகமுள்ள இந்த முயற்சியில், கொடூரமான சித்ரவதை, மரணம் ஆகியவற்றையும் எதிர்கொள்ளத் தயாரானவர்களை மட்டுமே அணிதிரட்டி, ஆயுதப் பயிற்சி அளித்து, தேவையான ஆயுதங்களையும் திரட்டினார். இதற்கு ஓராண்டுக் காலம் ஆயிற்று. இந்தப் படையில், 26 வயதான ஃபிடெல், 22 வயதான அவரது தம்பி ராவ்ல் காஸ்ட்ரோ உள்ளிட்ட, 200 ஆண்களும் 2 பெண்களும் இருந்தனர்.
- தாக்குதல் தோல்வியுற்ற பிறகு, போராளிகள் சிலர் அங்கேயே கொல்லப்பட்டனர். மற்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சிறையிலேயே கொல்லப்பட்டனர். இதற்கிடையில், தப்பிச்சென்ற ஃபிடெல், ராவ்ல் உள்ளிட்ட சிலர் சாண்டியாகோ மலைப்பகுதியில் ஒளிந்திருந்தனர்.
- அவர்களைத் துரத்திச் சென்ற ராணுவமும் காவல் துறையும் நரவேட்டை ஆடின. பலர் கொல்லப்பட்டனர். இதனால் மக்களிடையே நிலவிய பதற்றத்தைக் கண்ட அப்பகுதியின் ஆர்ச் பிஷப் பெரெஸ் செரண்டாஸ், கிளர்ச்சிக்காரர்கள் சரணடைய முன்வந்தால் அவர்களைக் கொல்லக் கூடாது; நீதிமன்றத்தில் வைத்தே அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ராணுவத் தளபதியிடம் முன்வைத்து, அதை ஒப்புக்கொள்ள வைத்தார்.
- மக்களிடம் பரவிய புரட்சி: எனினும், ஃபிடெலை எக்காரணம் கொண்டும் உயிரோடு விட்டுவிடக் கூடாது என்பதே ராணுவ உயர் அதிகாரிகளின் ரகசிய உத்தரவு. சியெர்ரா மாஸ்த்ரா மலையடிவாரத்துக்குச் சென்ற குழுவில் இருந்த லெஃப்டினென்ட் பெட்ரோ சரியா, பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே ஃபிடெலை நன்கறிந்தவர். ஆனால், கூட வந்த படையினருக்கு ஃபிடெலைத் தெரியாது. அவர் ஃபிடெலிடம், “உன் பெயரைச் சொல்லிவிடாதே; சுட்டுத் தள்ளிவிடு வார்கள்” என்று ரகசியமாகச் சொல்லிவிட்டார்.
- அதன்படியே, பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் அடையாளத்தை மாற்றிச் சரணடைந்தனர். இவ்வாறு தாக்குதல் முயற்சி தோல்வியுற்றபோதிலும், ஜூலை 26 இயக்கமும் ஃபிடெல் காஸ்ட்ரோவும் மக்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் இழுக்க முடிந்தது. பாடிஸ்டாவின் கொடுங்கோன்மைக்கு எதிரான உணர்வு மக்களிடையே மெதுவாகப் பரவத் தொடங்கியது.
வலுவாக வாதிட்ட காஸ்ட்ரோ
- நீதிமன்றம், பாடிஸ்டா வுக்கு எதிரான அடுத்த போராட்டக் களமாக மாறியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரின் நாஜி நீதிமன்றத்தைத் தன் வாதங்களால் புரட்டிப்போட்டு அதிரவைத்த ஜார்ஜ் டிமிட்ரோவைப் போலவே, ஃபிடெலும் இந்த நீதிமன்றத்தைத் தன் பிரச்சார மேடையாக மாற்றினார்.
- 1953 செப்டம்பர் 21 அன்று சாண்டியாகோ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட 122 பேரில் பலர், மான்கடா மீதான தாக்குதலுக்குத் தொடர்பே இல்லாதவர்கள். முதல் அமர்வில், “ஏன் ‘நியாயமான’ வழிகளில் உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை?” என்று நீதிபதிகள் வினவியபோது, முன்பு அவசர விஷயங்களுக்காகத் தான் வாதாடியபோதும், நீதிமன்றம் நியாயமாகவும் சட்டப் படியும் நடந்துகொள்ளவில்லை என நினைவூட்டினார் ஃபிடெல் காஸ்ட்ரோ.
- இரண்டாவது அமர்வில், வழக்கறிஞர் என்ற தகுதியில், தன் தரப்பு வழக்கறிஞர்களுடன் அமர அனுமதி கோரி, அதைப் பெற்ற ஃபிடெல் காஸ்ட்ரோ, பாடிஸ்டாவும் அவரது அதிகாரிகளும் வானொலி மூலம் கிளர்ச்சிக்காரர்கள் பற்றி நடத்திவரும் அவதூறுப் பிரச்சாரம்; கைப்பற்றப்பட்ட 70 கிளர்ச்சியாளர்களைச் சற்றும் கருணையின்றிப் படுகொலை செய்தது; சிறையில் நடந்த சித்ரவதைகள் பற்றி அம்பலப்படுத்தினார்.
- மூன்றாவது அமர்வின்போது அவர் இல்லை. “அவருக்கு உடல்நலமில்லை. முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது” என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு மருத்துவர்களை அனுப்பி, கைதியைச் சோதித்துவிட்டு, ‘விசாரணையில் பங்கெடுக்கும் நிலையில் அவர் இல்லை’ என்ற சான்றிதழையும் பெற்று அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
- இதையடுத்து, அவர் வர இயலாதபோதும், வழக்கு விசாரணை தொடரும் என்று தலைமை நீதிபதி அறிவித்தபோது, “அவருக்கு உடல்நலம் நன்றாகத்தான் இருக்கிறது!” என்று குரல் எழுந்தது. அந்தக் குரலுக்குரியவர் இரண்டு பெண் கிளர்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் மெல்பா ஹெர்னாண்டஸ். ஃபிடெல் தன் கைப்பட எழுதிய கடிதத்தை அவர் கொடுத்தார்.
- நீதிபதிகள் செப்டம்பர் 27 அன்று இரண்டு மருத்துவர்களை அனுப்பி, சிறையில் ஃபிடெலைச் சந்தித்து, சோதித்து, அவர் உடல்நலத்துடனேயே இருக்கிறார் என்று சான்றளித்தபோது, அவரை விசாரணைக்கு அழைத்துவர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், பாடிஸ்டாவின் கொடுங்கோலாட்சி அதைச் செய்யவில்லை.
- நீதிபதிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு, அக்டோபர் 16 அன்று நீதிபதிகளின் முன் ஃபிடெல் காஸ்ட்ரோ நிறுத்தப்பட்டார்; ஆனால் நீதிமன்றத்தில் அல்ல. அரசு மருத்துவமனை செவிலியர்களின் ஓய்வறைதான் விசாரணை மையமாக மாறியிருந்தது. கூபா மக்கள் ஃபிடெலின் குரலைக் கேட்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, மூன்று நீதிபதிகள், இரண்டு அரசு வழக்கறிஞர்கள், (எதையும் பிரசுரிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்) ஆறு பத்திரிகையாளர்கள், சுமார் 100 ராணுவ வீரர்கள் அந்த அறையில் சூழ்ந்திருக்க, ஃபிடெல் நீதிமன்றத்தை எதிர்கொண்டார்.
- எவ்விதக் குறிப்புகளும் இன்றி, ஐந்து மணி நேரம் கிளர்ச்சியின் நோக்கத்தை விரிவாக விளக்கினார். அவரது உரை, கருணை காட்டுமாறு அரசைக் கெஞ்சவில்லை; மாறாக, கொடுங்கோலாட்சியின் மீதான குற்றச்சாட்டுப் பட்டியலாகத்தான் இருந்தது. யாரோடும் பேச முடியாமல், தனிமைச் சிறையில் 76 நாள்கள் அடைக்கப்பட்டிருந்த இந்த நாள்களில், தன் 27வது வயதை நிறைவுசெய்திருந்த ஃபிடெல் அப்போது கூறிய, “வரலாறு என்னை விடுதலை செய்யும்!” என்கிற அந்த முத்தாய்ப்பான சொற்றொடர் இன்றளவும் வரலாற்றில் உண்மையென நிலைத்து நிற்கிறது.
- அக். 16: ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ உரை நிகழ்த்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு.
நன்றி: இந்து தமிழ் திசை (16 - 10 – 2023)