TNPSC Thervupettagam

நீதிமான்கள் கவனிக்க...

August 21 , 2019 1981 days 1795 0
  • கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி என்கிற செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. நல்ல வேளையாக, அந்த நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றவில்லை என்பதில் அற்ப சந்தோஷம்.
  • நேர்மையற்ற முறையில் செயல்பட்ட குற்றச்சாட்டில் அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி வழங்கியுள்ளார் என்று ஆரம்பித்த அந்தச் செய்தியில், உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் அதை மீறி மாணவர் சேர்க்கை நடத்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளித்த நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது முதல் நிலை விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது;
  • எனவே, அவர் பதவி விலகச் சொல்லி அறிவுறுத்தப்பட்டார்; அவர் மறுக்கவே அவர் தனது நீதிமன்றப் பணிகளைத் தொடரத் தடை விதிக்கப்பட்டது. சிபிஐ விசாரணையிலும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவே நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
நீதித் துறை
  • இந்திய நீதித் துறை வரலாற்றில் முதல் முறையாக ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதி என்பது உண்மையின் வெளிப்பாடு; உண்மை என்பது  கடவுளாகக் காணப்படுகிறது. மனு நீதி, சுக்ர நீதி, விதுர நீதி, திருக்குறள் உள்ளிட்ட எண்ணற்ற நூல்கள்  நீதியின் நடுநிலையைப் பறைசாற்றுகின்றன.
    புறாவுக்குப் பாதுகாப்பளித்து தன்னைப் பருந்துக்கு இரையாக்கத் துணிந்த சிபி சக்கரவர்த்தியும், தேர்க் காலில் மகனை மரணிக்க முனைந்த மனுநீதிச் சோழனும் நீதியின் உச்சம். ஆங்கிலேயர்கள் வரும் வரை நம் நாட்டில் நீதி என்பது அரசனின் ஒரு வாழ்வியல் பண்பாக இருந்தது.
  • தான் வாங்கிய நிலத்தில் உழும்போது கிடைத்த புதையலை தன்னுடையது இல்லை என்று நிலத்தை வாங்கியவர் சொல்ல, கிடைத்த புதையல், தான் விற்ற நிலத்தில் கிடைத்ததால் தனக்குச் சொந்தமில்லை என்று என விற்றவர் கூறி வாழ்ந்த நாடு இது. 
    தான் பிறப்பதற்கு முன்னே தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காட்டுக்குப் போன ராமனின் கதை இங்கே இதிகாசமாகக் கொண்டாடப்படுகிறது. மரியாதை ராமன் கதைகளும், தெனாலி ராமன் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும், பஞ்சதந்திரக் கதைகளும் வெறும் பொழுதுபோக்கு வாசிப்புக் கதைகள் அல்ல; ஆழ்ந்த நீதியின் தத்துவங்கள் அடங்கியவை.
மன்னன்
  • இறைவனின் பிரதிநிதியாக மன்னன் பார்க்கப்பட்ட காலங்களில் அவனே நீதிதேவனின் பிரதிநிதியாகப் பார்க்கப்பட்டான். தனது நீதி தவறாகி விட்டது என்று தெரிந்தவுடன் யானோ அரசன் யானே கள்வன் என பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் உயிர்விட்டது பெரிதல்ல; அந்தக் கணமே கணவனுடன் உயிர்விட்ட கோப்பெருந்தேவி வாழ்ந்த மண் இது. 
    இன்றைக்கு நாம் அறியும் நீதித் துறைக்கு ஆங்கிலேயர்கள் கால்கோளிட்டனர்.
  • முதன்முதலில் சென்னை, கொல்கத்தா, மும்பையில் அதாலத் நீதிமன்றங்களை ஆங்கிலேயர்கள் நிறுவினர். வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில்தான் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் திவானி அதாலத் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
  • 1862-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சென்னையில் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. இதற்கு 26.06.1862-இல் விக்டோரியா மகாராணி வழங்கிய சாசனம்தான் அடிப்படை. கடந்த 24.07.2004-இல்  மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்டது. 
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 1988-இல் 18-ஆக இருந்தது. பின்னர் 30-ஆக உயர்த்தப்பட்டது. இதை தற்போது 33-ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் அண்மையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது 58-ஆக இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஒரு கருத்துரு உள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கை உயருகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
நீதித்துறை – லஞ்சம்
  • இந்திய நீதித் துறையில் 30 சதவீதம் லஞ்சம் என்ற உண்மையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் அண்மையில் உரக்கச் சொன்னார். முறை தவறி நடக்கும் நீதிபதிகளின் பிரச்னை நீறுபூத்த  நெருப்பாக நீண்டநாள்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியல் சட்டப்படியான பாதுகாப்பு உள்ளது. கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளைப் பாதுகாக்க நீதிபதிகள் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பாதுகாக்கிறது. பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் ஒருவருடைய பதவி நிரந்தரம் செய்யப்படுகிறது.
  • இதுவரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு மட்டும்தான் அதனுடைய 150-ஆம் ஆண்டுகால வரலாற்றில் பதவி உறுதி செய்யப்படவில்லை. சென்னையில் இருந்து உச்சநீதிமன்றம் வரை சென்ற நீதிபதி ஒருவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து தேவையான வாக்குரைகள் இல்லாததால் தப்பினார். கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஒருவர் பதவி விலக மறுத்து நாடாளுமன்ற விசாரணை வரை வந்து பதவியை ராஜிநாமா செய்தார். 
  • உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத சென்னை நீதிபதி கர்ணன் சிறை சென்றது 156 ஆண்டுகால இந்திய நீதித் துறை வரலாற்றின் கரும்புள்ளி. லஞ்சப் புகாரில் சிக்கும் நீதிபதிகளை இடமாற்றம் செய்தால் மட்டும் பிரச்னை தீருமா? ஒரு பெண் நீதிபதிக்கு அனுப்பப்பட்ட லஞ்சம், சண்டிகரில் அதே பெயருடைய மற்றொரு நீதிபதிக்குத் தவறாகச் செல்ல அவர் போலீஸை அழைக்க நாடே சிரித்தது.
  • உண்மையா, பொய்யா என்பது அல்ல பிரச்னை; உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்படும்போது உச்சநீதிமன்றம் அமைத்த விசாகா கமிட்டி, நீதிபதிகளையும் வழக்குரைஞர்களையும் தவிர அனைவரையும் விசாரிப்பது ஒரு நகை முரண்.
  • நீதித் துறையின் வெளிப்படைத்தன்மை குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதிகள் நியமனம் குறித்தும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதி நிர்வாகம் குறித்தும் பல்வேறு தருணங்களில் பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. 2018 ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் நான்கு மூத்த நீதிபதிகள் மரபை மீறி பத்திரிகையாளர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து நீதித் துறையில் புரையோடிப்  போயிருக்கும் பிரச்னைகள் மக்கள் மன்றத்துக்கு வந்தன.
    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் வருங்காலத் தலைமை நீதிபதிகள் நீதிபதி எஸ்.வி.ரமணா, நீதிபதி சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி தீபக் குப்தா அடங்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வு, கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த முடிவு, நீதித் துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
தேர்தல்
  • தேர்தலில் நிற்பவர்கள் தங்களது குற்றப் பின்னணியையும் சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தும் நீதித் துறை, நீதித் துறையின் சுதந்திரம் என்கிற பெயரில் நீதிபதிகளின் நியமனங்கள் குறித்தும் அவர்களது சொத்து விவரங்கள் குறித்தும் முழுமையான வெளிப்படைத்தன்மைக்கு அனுமதிக்காமல் இருப்பது நகை முரண். அதிக அளவு வெளிப்படைத்தன்மை நீதித் துறையின் சுதந்திரமான செயல்பாட்டை பாதிக்கும் என்கிற அவர்களது வாதம் ஏற்புடையதல்ல.
  • சமகால இந்திய வரலாற்றில் நீதித் துறை ஆற்றிய பங்கு அளப்பரியது. அதற்காக, நீதித் துறையும் தவறுகளைப் பார்த்து கண்மூடிக் கொள்ளத்தான் வேண்டுமா? சம நீதி, சமத்துவம் என அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 14, 16, 21-இல் உயர், உச்சநீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் எண்ணில் அடங்காது.  லஞ்சத் தடை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி தண்டிப்பவர்களே, அந்தத் தவறைச் செய்தால் யாருக்குத் தலைகுனிவு? சட்டம் தெரியாது என சாமானியர்கள் தப்பிக்க முடியாது எனத் தண்டிக்கும் நீதிபதிகளே தவறு செய்தால் அது என்ன நியாயம்?
  • கீழமை நீதிமன்றப் பணியாளர் பதவிகள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் காலதாமதமாவது ஒருபுறம் இருக்க, வழங்கப்பட்ட தீர்ப்பை அடித்து உடனே கொடுக்கத் தேவையான தட்டெழுத்தர்கள்கூட இல்லை என்றால், இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா? 
    நான் தமிழகத்தின் எட்டாவது சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவர் உ. சுப்பிரமணியத்தின் வழிகாட்டுதலின் பெயரில் எஸ்டிமேட் கமிட்டி உறுப்பினரானேன். அன்றைய காலகட்டத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் தரமில்லாத, தகுதியல்லாத போட்டாகாப்பி மெஷின்கள் வாங்கி லட்சக்கணக்கில் பணம் வீணடிக்கப்பட்டது. அன்றைய தேதியில் நீதிமன்றங்களில் பழைமையான தட்டச்சு
  • இயந்திரங்கள் அடிப்பதற்கு நபர் இல்லாமலும், வெற்றி பெற்ற வழக்குகளுக்கு நகல் பெற முடியாமலும் காலதாமதம் ஏற்பட்டபோது கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த (தீர்ப்பின் செயல்பாடு அல்ல) நான் சொன்ன ஆலோசனைகளை அந்தக் குழு ஏற்றது. 
தவறுகள்
  • நீதித் துறையில் ஏற்படும் தவறுகளுக்கு நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள் எனத் தொடர் காரணங்கள் சொன்னாலும் இதில் நீதிபதிகளின் பங்கும் அளப்பரியது.
    நீதிமன்றங்களும் அதன் அச்சாணியான நீதிபதிகளும் இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அங்கங்கள்; அதிகாரிகள், அரசு, அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பணி நீதிபதிகளிடம் உள்ளது. எந்தத் துறை தவறினாலும், நேர்மையைத் தொலைத்தாலும் அதைக் காத்து மீட்டெடுக்கும் பொறுப்பு நீதித் துறைக்கு உள்ளது. ஒரு நாட்டை போர்வீரர்களால் மட்டும் காப்பாற்றிவிட முடியாது. நீதிபதிகளும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • நீதித்துறை அழிந்தால் அது தேசத்தின் மரணமாக முடியும். பைபிள் சொல்வதைக் கேளுங்கள்: நீ ஒருவரைப் பார்த்து குற்றஞ்சாட்டி விரல் நீட்டினால் உன்னைப் பார்த்து மூன்று விரல்கள் உள்ளன. நீதிமான்கள் கவனிக்க...

நன்றி: தினமணி(21-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories