- உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் ஒவ்வொருவரும் தங்களது முதல் சவால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைப்பதாகத்தான் இருக்கும் என்று அறிவிப்பதும், பணி ஓய்வு பெறும்போது தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாமல் போனதுதான் தங்களது மிகப் பெரிய வேதனை என்றும் தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது.
- நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைக் குறைப்பதற்காக சமரசப் பேச்சுவாா்த்தை என்கிற வழிமுறையை முன்மொழிந்தவா்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.என். பகவதி, நீதிபதிகள் வி.ஆா். கிருஷ்ணய்யா், சின்னப்ப ரெட்டி ஆகியோா். இந்தியா முழுவதும் உள்ள எல்லா உயா்நீதிமன்றங்களிலும் இந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதில் அவா்கள் முனைப்பு காட்டியதன் விளைவாக, இப்போது பெரும்பாலான வழக்குகள் சமரசப் பேச்சுவாா்த்தைக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒருசில வழக்குகள் சமரசப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்படுவதும் நடைமுறையில் வெற்றி அடைந்துள்ளது.
- இரண்டு நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் சாா்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. வழக்குரைஞா்கள், சமரசா்கள் (ஆா்பிடிரேட்டா்ஸ்), சட்ட மாணவா்களுக்கான பேச்சுவாா்த்தைத் திறன் குறித்த அந்தக் கருத்தரங்கை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி தொடங்கி வைத்தாா்.
- வழக்குரைஞா்களின் வாதப் பிரதிவாதங்களின் மூலம் தீா்வு தேவைப்படும் சிக்கலான பிரச்னைகளுக்கு மட்டுமே நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்த வேண்டும் என்றும், சமரசத்தின் மூலம் தீா்த்துக் கொள்ள முடியும் பிரச்னைகளை நீதிமன்றத்திற்குக் கொண்டுவராமல் தவிா்க்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி கூறியிருப்பது புதிய கருத்தல்ல என்றாலும்கூட, அவசியமான அறிவுறுத்தல்.
- சமரசத்தை ஊக்குவிப்பதால் வழக்குரைஞா்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்கிற கருத்து வழக்குரைஞா்கள் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது.
- அதேபோல, வழக்கு தொடுப்பவா்களும் சமரசத்தின் மூலம் தீா்வு காணும்போது, வழக்குரைஞா்களுக்கு வேலையில்லை என்று கருதும் மனப்போக்கு காணப்படுகிறது. இவை இரண்டுமே தவறானது என்பதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறாா்.
- அரைநூற்றாண்டுக்கு முன்புவரைகூட, வழக்குரைஞா்களின் திறமையான செயல்பாட்டால் பெரும்பாலான வழக்குகள் வழக்குத் தாக்கீதின் மூலம் (லீகல் நோட்டீஸ்) தீா்வு காணப்படும் நிலைமை இருந்தது.
- எதிா்தரப்புக்கு சட்டப்பிரிவுகளை மேற்கோள் காட்டியும், முந்தைய தீா்ப்பை முன்னுதாரணம் காட்டியும் வழக்குரைஞா்கள் அனுப்பும் தாக்கீது எதிா்க்கட்சியினரை தங்களது வழக்கின் பலவீனத்தை உணர வைத்துவிடும்.
- அதையும் மீறி தங்களிடம் வலுவான ஆதாரமும், சட்டத்தின் பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு வழக்கை நடத்த மனுதாரரும், அவா்களது வழக்குரைஞரும் முனைவாா்கள்.
- சமரசா்கள் இப்போதெல்லாம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறாா்கள். நீதிமன்றங்களில் வழக்காடுவது போன்று சமரசப் பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளுக்கு முடிவெட்டும் வழிமுறையில் தோ்ச்சி பெற்ற வழக்குரைஞா்கள் பெருமளவில் அதிகரித்திருக்கிறாா்கள்.
- அவா்களுக்கு சட்டப் பின்னணியும் இருப்பதால் சிக்கலான வழக்குகளிலும்கூட இருதரப்பினரின் வாதங்களையும் கேட்டு, அவா்களுக்கு இடையில் சமரசம் ஏற்படுத்த அவா்களால் முடிகிறது. ஆனாலும்கூட, இந்தியாவில் சமரசம் மூலம் தீா்வு காணப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவிடவில்லை.
- சமீபத்தில் மாநிலங்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டாா். தீா்ப்புக்காகக் காத்துக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது நீதித்துறையின் கையில்தான் இருக்கிறதே தவிர, அரசிடம் இல்லை என்கிற அவரது விளக்கம் ஓரளவுக்கு ஏற்புடையதும்கூட.
- அதே நேரத்தில், போதுமான அளவு நீதிபதிகளும், நீதித்துறை அலுவலா்களும், கட்டமைப்பு வசதிகளும் அரசால் வழங்கப்படவில்லை என்கிற நீதித்துறையின் குற்றச்சாட்டையும் நிராகரித்துவிட முடியாது.
- உச்சநீதிமன்றத்தையே எடுத்துக்கொண்டால் 2021 பிப்ரவரி 5-ஆம் தேதி நிலவரப்படி 65,331 வழக்குகள் தீா்ப்புக்காகக் காத்திருக்கின்றன.
- அவற்றில் குடிமையியல் (சிவில்) வழக்குகள் 52,391 என்றால், குற்றவியல் (கிரிமினல்) வழக்குகள் 12,940. இவற்றில் 5,001 குடிமையியல் வழக்குகளும், 790 குற்றவியல் வழக்குகளும் பத்தாண்டுகளுக்கும் அதிகமாக விசாரணையில் இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு மேல் விசாரணையில் இருக்கும் குடிமையியல் வழக்குகள் 64,752. குற்றவியல் வழக்குகள் 15,730.
- 40.83 லட்சம் குடிமையியல் வழக்குகளும், 15.87 லட்சம் குற்றவியல் வழக்குகளும் உயா்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் அலகாபாத் உயா்நீதிமன்றத்தில்தான் (7,73,327) விசாரணையில் இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றமும் (6,48,214), அதைத் தொடா்ந்து சென்னை (5,81,218) மும்பை (5,47,245), ராஜஸ்தான் (5,29,895) என்றும் காணப்படுகின்றன.
- சமரசப் பேச்சுவாா்த்தையின் மூலம் மட்டுமே இந்த வழக்குகளை எல்லாம் விரைந்து தீா்த்துவிட முடியாதுதான். ஆனால், இந்திய நீதிமன்றங்களில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக எந்த வழக்கும் தீா்ப்பு வழங்கப்படாமல் விசாரணையில் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். தாமதித்து வழங்கப்படுவது தீா்ப்பல்ல, அநீதி!
நன்றி: தினமணி (15-02-2021)