TNPSC Thervupettagam

நீரிழிவு நோய்: முறையான சிகிச்சை அவசியம்

July 2 , 2023 568 days 501 0

  • ரத்த அழுத்த நோய்க்கு அடுத்தபடியாக, உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கும் தொற்றா நோயாக நீரிழிவு உள்ளது. முற்காலத்தில் ‘செல்வந்தர்களின் நோய்’ என்று அறியப்பட்ட இந்த நோய், இன்று எவரையும் விட்டுவைக்கவில்லை.
  • நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய். நாம் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச்சத்திலிருந்து (கார்போஹைட்ரேட்) சர்க்கரை கிடைக்கிறது. இந்தச் சர்க்கரையை உடலுக்குத் தேவையான ஆற்றலாக இன்சுலின் மாற்றுகிறது. நமது உடலில் இன்சுலினின் அளவோ செயல்திறனோ குறைந்தால், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்; அதாவது, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். இதை ஒரு நோய் என்பதைவிட ஒரு நிலை அல்லது குறைபாடு என்று சொல்வதே சரி.

பீட்டா செல்கள்

  • இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலினைச் சுரக்கின்றன. கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் நாம் பிறக்கும்போது 100 சதவீதம் இருக்கும்; நமது 40 வயதுக்குள் அல்லது நீரிழிவு நோயின் ஆரம்பக்கட்டத்தில் 40 சதவீத பீட்டா செல்கள் இறந்துவிடும். எஞ்சிய 60 சதவீத செல்களை மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் நாம் பாதுகாத்து வைத்திருப்பதே, நீரிழிவு நோயை எதிர்கொள்வதற்கான முக்கிய வழிமுறை.
  • 40 வயதுக்குப் பின்னர், 60 சதவீத பீட்டா செல்கள் மட்டுமே நமது உடலுக்குத் தேவை யான இன்சுலினைச் சுரப்பதால், நமது உடலில் இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதுவே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். இது தவிர, ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, அதிக உடல் எடை போன்ற காரணங்களால் ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’ (Insulin Resistance) அல்லது இன்சுலின் செயல்திறன் குறைவு ஏற்படுகிறது. இதனாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இதுவும் உள்ளது.

சர்க்கரையின் அளவு

  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிட்ட பிறகு பின்னர் 140க்குள் இருக்க வேண்டும்; வெறும் வயிற்றில் 110க்குள் இருக்க வேண்டும். ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு இதற்கு மேல் சென்றால், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம். இருப்பினும், சாப்பிட்டதற்குப் பிந்தைய சர்க்கரையின் அளவு ஒருவருக்கு 200க்கு மேல் சென்றால் அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே மருத்துவர்கள் சிகிச்சையளிக்கத் தொடங்குவார்கள். ஆண்களுக்குப் பிறப்புறுப்பில் வெடிப்பு அல்லது புண், திடீரென்று ஏற்படும் அதீத எடை குறைவு போன்ற நீரிழிவு நோய்க்கான முக்கியமான அறிகுறிகள் தென்பட்டால், அவர் களுக்கு உடனடியாகச் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.

குறையும் சர்க்கரையும் ஆபத்தே

  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது எப்படி ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது சர்க்கரையின் அளவு குறைவது.
  • ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60 மி.கிராம் ஆகக் குறைந்தால் மயக்கநிலையும் அதீத வியர்வையும் ஏற்படத் தொடங்கும்; 50 மி.கிராம் எனக் குறையும்போது வார்த்தைகள் குழறத் தொடங்கும்; 40 மி.கிராம் எனக் குறையும்போது குறட்டை சத்தம் மட்டுமே கேட்கும்; 25 மி.கிராம் எனக் குறையும்போது அவர்கள் சுயநினைவு இழந்து, வெறுமனே மூச்சு மட்டுமே விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களை உடனடியாக மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உடனடி மரணத்தை ஏற்படுத்தாது. ஆனால், குறைவான சர்க்கரை உடனடி மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதில் கூடுதல் கவனம் தேவை.

சிகிச்சையை நிறுத்தக் கூடாது

  • சிகிச்சை தொடங்கிய பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிட்டது என்று மாத்திரைகளை நிறுத்திவிடக் கூடாது. முதலில் வாரத்துக்கு ஒரு முறை சர்க்கரை நிலையைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; பின்னர் மாதத்துக்கு இரண்டு முறை பரிசோதனையும், பின்னர் மாதத்துக்கு ஒரு முறை பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
  • இந்தப் பரிசோதனைகளிலும் சர்க்கரையின் அளவு இயல்பாக இருந்தால், அது மன அழுத்தத்தினால் தூண்டப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும்; அல்லது அதிக அளவில் இனிப்பைக் கொண்டிருக்கும் உணவுப் பழக்கத்தினால் ஏற்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும். மாத்திரைகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், தினசரி உடற்பயிற்சி போன்ற காரணங்களினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் வந்திருக்கலாம். அப்படியே இருப்பினும், அவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை HbA1c பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக, மருத்துவரின் அனுமதியின்றி ஒருபோதும் சிகிச்சையை நிறுத்திவிடக் கூடாது.

இயற்கை மருத்துவம் வேண்டாம்

  • கணையத்தில் 40 சதவீத பீட்டா செல்கள் இறந்துவிடுவதால், நீரிழிவு நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர் முழுமையாகக் குணமடைவதற்கோ நீரிழிவு நோய் இல்லாமல் போவதற்கோ சாத்தியம் கிடையாது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோயுடன்தான் வாழ்ந்தாக வேண்டும். அந்த நிலையை மருந்து, மாத்திரை உள்ளிட்ட சிகிச்சையின் மூலம் அவர் சமாளித்து வாழ்வது மட்டுமே அவர் முன் இருக்கும் வழி.
  • அலோபதி மருந்துகளுக்குப் பக்க விளைவு கள் உள்ளதாகக் கருதி, இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை சிலர் தவிர்க்கின்றனர். இன்னும் சிலர், இயற்கை மருத்துவம் என்கிற பெயரில் உலவும் தவறான சிகிச்சைமுறையால் ஈர்க்கப்பட்டு செல்கின்றனர். இது நிலைமையை மோசமாக்குமே தவிர, ஒருபோதும் மேம்படுத்தாது. இவர்கள் நீரிழிவு பாதிப்பு முற்றிய நிலையில், நிவர்த்தி செய்ய முடியாத பாதிப்புடன் எங்களை வந்தடைகிறார்கள். ஒரு வாதத்துக்கு நீரிழிவு நோய்க்கான மருந்துகளுக்குப் பக்கவிளைவுகள் உள்ளன என்று வைத்துக்கொண்டாலும், அது நீரிழிவு நோய் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புடன் ஒப்பிடும்போது, பக்கவிளைவுகள் புறந்தள்ளும் அளவில்தான் இருக்கும் என்பதே உண்மை.
  • நீரிழிவு நோய் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதில்தான் ஒரு நோயாளி யின் சாமார்த்தியம் உள்ளது. இதற்கு மருத்துவரின் உதவியும், அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளும் அவசியம் தேவை. உணவுக் கட்டுப்பாடும், தினசரி உடற்பயிற்சியும் இந்தச் சிகிச்சையின் அங்கமே. இவற்றை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றுவது மட்டுமே நீரிழிவு நோயின் அடுத்தகட்டப் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும்.

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories