TNPSC Thervupettagam

நீர் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

September 9 , 2019 1938 days 1533 0
  • சென்னை மாநகரத்துக்கும் பிற நகரங்களுக்கும் தேவையான அளவு சுத்தமான நீரை வழங்குவது ராக்கெட் அறிவியல் அல்ல; இதைச் சாத்தியமாக்குவது கொள்கைகளும் தொழில்நுட்பங்களும்தான். கடந்த 30 ஆண்டுகளாகவே இதை நாம் அறிந்திருக்கிறோம். இருந்தும், இலக்கை ஏன் நம்மால் அடைய முடியவில்லை? நீண்டகாலத் திட்டமிடலை மறந்துவிட்ட நிர்வாக அமைப்புகள், பலவீனமான அரசியல் மனஉறுதி, ஒழுங்குமுறைகளைத் திறம்படச் செயல்படுத்த இயலாமை, வழங்குதல் மற்றும் தேவை மேலாண்மை இரண்டுக்குமான முக்கியத்துவம், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தோல்வி என்று அதற்கான காரணிகளை வரிசைப்படுத்தினால் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
  • சென்னையின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 1,400 மிமீ. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வறட்சி மட்டுமல்லாமல், 2019-ல் தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக ஒரு சொட்டு மழைகூடப் பெய்யவில்லை. இந்நிலையில், 2019 ஜூன் மாதத்தில் சென்னையின் முக்கிய நீர்வளங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் முற்றிலும் வறண்டுபோனதால் ‘சுழிய தின’த்தை (Day Zero) சென்னை எதிர்கொள்ள நேர்ந்தது. இதுவரை சந்தித்திராத குடிநீர்ப் பிரச்சினையில் சிக்கி சென்னையின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

சென்னை எதிர்கொண்ட நீர் நெருக்கடி

  • சென்னை பெருநகரில் வாழும் 75 லட்சம் மக்களுக்கு ‘சென்னை பெருநகர நீர் வழங்கல் வாரியம்’ நாளொன்றுக்கு சுமார் 830 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) குடிநீர் விநியோகிக்கிறது. இந்த மொத்த அளவில், சென்னையின் நான்கு நீர் வளங்கள் மற்றும் வீராணம் உள்ளிட்ட மேற்பரப்பு நீரின் பங்கு 65%, நிலத்தடி நீரின் பங்கு 9%, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பங்கு 16%, மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரின் பங்கு 10%. 2019 ஜூன் மாதத்தில் வழங்கிய நீரின் அளவு கிட்டத்தட்ட சரிபாதியாகக் குறைந்தது. வீராணமும் இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இல்லாமல்போயிருந்தால் நிலைமை மோசமாகியிருந்திருக்கும்.
    மழைநீர் சேகரிப்பு, சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை மறுஉருவாக்கம் செய்வது குறித்து மட்டுமே ஊடக விவாதங்கள் தங்கள் கவனம் செலுத்தியதில் சென்னையில் குடிநீர் சிக்கலின் முழுமையான சித்திரம் மறைந்துபோனது. நிலத்தடி நீர்மட்ட உயர்வு, வெள்ளத்தடுப்பு போன்றவற்றுக்கு முன் சொன்ன இரண்டு முயற்சிகளும் பெரும் உதவி புரியும் என்பதிலும், அவற்றைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், பருவம் தவறிய மழை மற்றும் மழைப் பற்றாக்குறையால் ஏற்பட்ட தீவிரமான நெருக்கடியைத் தீர்க்க இவை மட்டும் உதவாது.

பருவநிலை சார்ந்திராத நீர்வளம்

  • 2019-ன் அனுபவம் நமக்கு ஏதாவது கற்றுத் தந்திருக்குமானால், அது தற்போதைய பருவநிலை மாற்ற காலகட்டத்தில் வெறும் மேற்பரப்பு நீரையும் நிலத்தடி நீரையும் மட்டும் சார்ந்திருந்திருக்கக் கூடாது என்பதுதான். எனவே, ‘பருவநிலையைச் சார்ந்திராத’ (climate independent) நீர் ஆதாரங்களை உருவாக்கிட வேண்டிய தேவை இப்போது உருவாகியுள்ளது. பருவநிலையைச் சார்ந்திராத நீர் வளங்களான கடல்நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி ஆகிய இரண்டு முக்கியமான வளங்களின் பங்களிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த நீர் வழங்கலில் குறைந்தபட்சம் 35% வரை விரிவுபடுத்துவதிலும், அதைத் தொடர்ந்து தக்க வைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  • சென்னைக்குக் குடிநீர் வழங்க 150 எம்எல்டி மற்றும் 400 எம்எல்டி திறன்கொண்ட மேலும் இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தொடக்கத்தில், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்குக் கடல்நீர் சுத்திகரிப்பு மூலமாகவும், பிற பகுதிகளுக்கு காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளிலிருந்தும் குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும்.

கடல்நீர் சுத்திகரிப்பு

  • கடல்நீர் சுத்திகரிப்பு முறைக்கு ஆகும் அதிக செலவு குறித்தும், கடல்நீரால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விமர்சனங்களும் மிகைப்படுத்தப்படுபவை என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. ஏனெனில், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படுத்தும் புதிய ‘எதிர் சவ்வூடுபரவல்’ (reverse osmosis) தொழில்நுட்பமானது முந்தைய ‘அனல் வடிப்பாலை’ (thermal distillation) தொழில்நுட்பத்தைவிட மிகவும் செலவு குறைந்ததாகவும், அதிகத் திறன் கொண்டதாகவும் உள்ளது. அது மட்டுமில்லாமல், குறைவான மாசு வெளியேற்றம் கொண்டுள்ளதும், இத்தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்பட்டுவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றால் பல கிமீ தொலைவு வரை கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் ஏற்படும் பாதிப்பு கடலினுடைய முன்பகுதியின் 300 மீட்டர் தொலைவுக்குள் கட்டுப்படுத்தப்படுகிறது. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வெளியிடும் உப்பு நிறைந்த கழிவுநீர்கூட கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே வெளியிடப்படும். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கப்போவதில்லை; ஏனெனில், மீனவர்கள் கடலுக்குள் பல கிமீ தொலைவு சென்றே மீன் பிடிப்பர். மேலும், உப்புநீரின் உப்புத்தன்மையைச் சகித்துக்கொள்ளும் உணவு, தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கும், மீன்களை வளர்ப்பதற்கும் ஆராய்ச்சி நடந்துவருகிறது. இதன் மூலம் உப்பு நிறைந்த கழிவுநீரைக் கடலுக்குள் செலுத்த வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முடியும்.

மறுசுழற்சி நீரின் பயன்பாடு

  • நாம் பயன்படுத்தும் தண்ணீரில் சுமார் 80% கழிவுநீராக மாறுகிறது. இந்திய நகரங்களின் ஒட்டுமொத்த கழிவுநீர் சுத்திகரிப்புத் திறன் 30% மட்டுமே. இது சென்னை பெருநகரில் 50% ஆக இருப்பது ஓரளவு ஆறுதல் தரும் விஷயம். அதேவேளையில், பலவீனமான கண்காணிப்புகள் காரணமாகத் தொழிற்சாலை கழிவுநீர்கூட உரிய முறையில் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் கொண்டு கலக்கப்படுகிறது. இதன் விளைவாக, நீர்நிலைகள் மிகவும் மாசுபடுவதுடன் சுகாதாரக் கேடுகளும் ஏற்படுகின்றன. 70% நீர் கலப்படமாக இருப்பதால், இந்தியாவில் குடிநீரின் தரம் மோசமானதாக இருக்கிறது. 2018-க்கான உலகக் குடிநீர் தரப்பட்டியலில் 122 நாடுகளில் இந்தியா தற்போது 120-வது இடத்தில் உள்ளது என்பது நமது சூழல் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கான உதாரணம்.
  • கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் மறுஉருவாக்கம் என்பது சுற்றுச்சூழல், சுகாதாரக் காரணங்களுக்காக மட்டுமல்லாமல் ‘பருவநிலையைச் சார்ந்திராத’ ஒரு முக்கிய நீர் வளம் என்ற அம்சத்திலும் முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. இந்த முறை கடல்நீர் சுத்திகரிப்புடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றலும் திறனும் கொண்டது மட்டுமின்றி சிக்கனமானதும்கூட. சென்னை பெருநகரில் வெளியேற்றப்படும் கழிவுநீரில் வெறும் 30%-த்தை மட்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால்கூட 250 எம்எல்டி தண்ணீர் கூடுதலாகக் கிடைக்கும்.

உளவியல் தடையைப் போக்குவோம்

  • பொதுவான குடிநீர் தரத்தைக் காட்டிலும் மறுசுழற்சி நீர் தூய்மையானது. வீடுகளின் மொத்த நீர்ப் பயன்பாட்டில் 60% நீர் சமையல் அல்லாத பயன்பாட்டுக்கானது. ஆனால், இதற்குக்கூட மறுசுழற்சி நீரைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மத்தியில் உளவியல் சிக்கலும் ஒருவித தயக்க மனோபாவமும் காணப்படுகிறது. சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்த உளவியல் தடையை வெற்றிகொள்ள இங்கும் மறுசுழற்சி நீரின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கான தொடர் விழிப்புணர்வுக் கல்வியை மேற்கொள்வது அவசியம். தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், தோட்டத் தொழில்கள், புல்வெளிப் பராமரிப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள், பெரிய அடுக்ககக் குடியிருப்புகள் போன்றவற்றில் குடிநீர் அல்லாத தேவைகளுக்கு மறுசுழற்சி நீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
  • உலகளவில் வேளாண்மை, தொழிற்சாலை, வீடுகளுக்கான நீர்ப் பயன்பாடு முறையே 70%, 20%, 10% ஆகும். இந்தியாவில் வேளாண்மைக்கான நீர்ப் பயன்பாடு உலக சராசரியை விட அதிகமாக உள்ளது (சுமார் 85-90%). சென்னை பெருநகரப் பகுதியில்கூட வேளாண்மைக்கான நீர்ப் பயன்பாடு 80%-ஆக உள்ளது. ஊடக விவாதங்கள் வீடுகளுக்கான குடிநீர்ப் பயன்பாடு குறித்து மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால், வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கான நீர்ப் பயன்பாட்டைக் குறைப்பதில்தான் நாம் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். நீர்ப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் கிடைக்கும் மின் சேமிப்பு கணிசமானது. இதன் மூலம் வெளியேறும் கழிவுநீரின் அளவையும் நம்மால் குறைக்க முடியும்.

மாற்று நீர் மேலாண்மை அவசியம்

  • மேற்பரப்பு நீர், நிலத்தடி நீரை வீணடிப்பது போன்ற திறனற்ற நீர் மேலாண்மையால் இந்தியாவில் 60% பாசன நீர் வீணாகிறது. இதனால், வேளாண் விளைச்சல் ஒரு அலகுக்குப் பயன்படுத்தும் நீர் அளவைக் குறிக்கும் ‘நீர் முத்திரை’ (water imprint) உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மிக அதிகம். நுண்ணீர்ப் பாசனம், சொட்டுநீர்ப் பாசனம் போன்ற முறைகளைப் பயன்படுத்தி நீர்ப் பயன்பாட்டைக் குறைத்து, ‘ஒரு சொட்டு நீருக்கு அதிக விளைச்சல்’ பெறும்வண்ணம் விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவைப்படும் அரிசி, பருத்தி, சர்க்கரை, மாட்டிறைச்சி போன்ற வேளாண், கால்நடை உற்பத்திப் பொருட்களில் பொதிந்துள்ள மறைநீரின் (virtual water exports) அளவு இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் நீரின் மொத்த அளவைவிட நான்கு மடங்குகள் அதிகம். எனவே, அதிக நீர் தேவைப்படும் பயிர்களைவிட குறைவான நீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் முறைக்கு மாறுமாறு விவசாயிகளிடம் அரசு வலியுறுத்த வேண்டும். உணவுப் பயிர் அல்லாத பிற பயிர்களின் பாசனத்துக்கு மறுசுழற்சி நீரைப் பயன்படுத்தும்படியும் வலியுறுத்த வேண்டும். இதுகுறித்த ஒருமித்த அரசியல் கருத்து உருவாக்கப்படுவதும் அவசியம்.
  • தொழிற்துறை பயன்படுத்தும் நீரில் 88% அனல் மின் நிலையங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. பொறியியல், துணி உற்பத்தி, காகிதம், இரும்பு உற்பத்திக்கான தொழிற்சாலைகள் போன்றவை நீரை அதிகம் பயன்படுத்தும் பிற முக்கியத் தொழிற்துறைகள். இந்தியாவில் வேளாண் துறையைப் போன்றே தொழில்துறையிலும் நீர்ப் பயன்பாட்டுத் திறன் உலகிலேயே குறைவு. தொழிற்சாலைகள் நீரை அதிகம் பயன்படுத்துவதுடன், நீரை மாசுபடுத்தவும் செய்கின்றன.
  • கழிவுநீர் வெளியேற்றத்துக்கான ‘சுழியன் அளவு’ (zero discharge) வழிகாட்டு விதிகளைச் சமரசமின்றி நடைமுறைப்படுத்துவதுடன், தாமாகவே உற்பத்திசெய்தோ அல்லது அரசு அமைப்புகளிடம் கொள்முதல்செய்தோ தொழிற்சாலைகள் மறுசுழற்சி நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டும். பல பெரிய நிறுவனங்கள் நீர்ப் பராமரிப்பு, மறுசுழற்சி முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தமது நீர் முத்திரை அளவைத் தற்போது வெகுவாகக் குறைத்துவருகின்றன. சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்.

இலவசத் தண்ணீர் கூடாது

  • இலவசமாக அல்லது அதிக மானியத்துடன் கூடிய நீர் விநியோகம் என்பது தொடர்ந்து சாத்தியமல்ல என்பதையே உலக அனுபவங்கள் காட்டுகின்றன. மேலும், குடிநீர் வழங்கலைப் போன்றே குடிநீர்த் தேவையையும் முறையாக நிர்வகிப்பது அவசியமானது. தண்ணீருக்கு உரிய கட்டணம் நிர்ணயிப்பதே சிறந்த மேலாண்மை. சென்னையில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தண்ணீர் கட்டண மீட்டர் பொருத்தப்பட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீட்டு உபயோகிப்பாளர்கள் பெரிதும் மானியம் அளிக்கப்பட்டு, ஒரே சீராக நிர்ணயிக்கப்படும் கட்டணம் செலுத்துகிறார்கள்.
    சென்னை பெருநகரமும் தமிழ்நாட்டில் உள்ள பிற உள்ளாட்சிகளும் தண்ணீர் கட்டண மீட்டர் பொருத்தாமல் நீர் விநியோகத்தில் நேரிடும் நீர்க் கசிவு, நீர்த் திருட்டு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியாது. உலகம் முழுவதும் நீர் இழப்பின் சராசரி அளவு 35%. ஆனால், சென்னையில் இது 20% மட்டும் என்ற சென்னை பெருநகர நீர் வழங்கல் வாரியத்தின் கூற்று நம்பத்தகுந்ததல்ல. சிங்கப்பூர், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளில் நீர் இழப்பு 10%-க்கும் குறைவாக இருந்தாலும், அவை பல வளர்ந்த நாடுகளில்கூட 30% ஆகவும், பல வளரும் நாடுகளில் 50% ஆகவும் உள்ளன. எனவே, சென்னையின் இழப்பு அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.
  • வீடுகளில் தண்ணீர் கட்டண மீட்டர் பொருத்துவது சாத்தியமில்லை எனக் கருதினால், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தனிப்பட்ட குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள் வரையான விநியோக இணைப்புகளில் ஆங்காங்கே மீட்டர் பொருத்தி பராமரிக்கலாம். இதன் மூலம் எங்கெங்கு நீர் இழப்பு ஏற்படுகின்றன என்பதைத் துல்லியமாக அறிந்திட முடியும். இது முக்கியமானது மட்டுமல்ல; அவசியமானதும்கூட. நீர்க் கசிவு, நீர்த் திருட்டு மூலம் சுமார் 40% இழப்பு நேர்வது தெரியவரும்போது விநியோகத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது அர்த்தமற்றது என்பது புலப்படும். மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.
  • சென்னையில், கடும் வறட்சிகள், அதிக வெள்ளங்கள் ஏற்படும்போது மட்டும் தண்ணீர்ப் பிரச்சினையில் ஆர்வம் காட்டுகிறோம்; நெருக்கடி தீர்ந்ததும் அமைதியடைந்துவிடுகிறோம். சமீபத்திய நீர் நெருக்கடி நமது அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அவர்களுக்கு சிக்கலின் தீவிரத்தை உணர்த்தியிருக்கும் என்று நம்பலாம். முன்கூறிய பரிந்துரைகளைக் கருத்தொற்றுமையுடன் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும்போது, சென்னையின் நீர் நெருக்கடியை எதிர்கொள்வது ஒரு பெரிய சவாலாக இருக்காது.

நன்றி: இந்து தமிழ் திசை (09-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories