- இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 21 மாசு இல்லாத சுற்றுச்சூழலைப் பெறுவது அனைவருக்கும் "அடிப்படை உரிமை' எனத் தெரிவித்துள்ளது. வேலூர் குடிமக்கள் நல மன்றம் -எதிர் - யூனியன் ஆஃப் இந்தியா (1996) தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் நம் நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிமுக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
- இந்தியாவில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க "இயற்கையை மாசுபடுத்துபவர் செலுத்தும் (விலை) கொள்கை', "முன்னெச்சரிக்கை (தடுப்பு) கொள்கை' ஆகிய இரு கொள்கைகளை அத்தீர்ப்பு அறிமுகப்படுத்தியது.
- மேலும், நம் நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அரசுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
- புதுதில்லி, தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், இக்கொள்கைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவரே, அதை சுத்தப்படுத்துவதற்கான விலையையும் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்து வருகிறது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி, திட, திரவக் கழிவுகளை அகற்றத் தவறி, சுற்றுச்சூழலை மாசடைய செய்தமைக்காக பிகார் அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.4,000 கோடி அபராதம் விதித்துள்ளது.
- குப்பைகளை அகற்றுவது தொடர்பான சட்டவிதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய உத்தரகண்ட் அரசுதான் அதற்குரிய விலையை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
- காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதுகாப்பதும், உயிரினங்கள் மீது கருணை காட்டுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. சுற்றுசூழல் பாதிப்பில் யாரேனும் ஈடுபட்டால் அதற்கான விலையை (நிவாரணத்தொகை) அவர்தான் செலுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் சில நாட்கள் கழித்து ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. சென்னையில் நீர்நிலைகள் இல்லாததால் அவை கடலில் கரைக்கப்படுகின்றன.
- கடல் எண்ணற்ற வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள வற்றாத அமுதசுரபியாகும்.
- பெரிய அளவில் கண்கவர் வண்ணத்தில் செய்யப்படுகின்ற விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால் கடல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
- இந்த வகை விநாயகர் சிலைகள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்டு ரசாயன வண்ணக் கலவை பூசப்படுகிறது. இந்த ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் ஜிப்சம், சல்பர், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற வேதியல் கலவைகள் உள்ளன.
- இவை தண்ணீரில் கரைய பல மாதங்கள் ஆகும். மேலும், ரசாயன வண்ணக் கலவையில் மெர்குரி, லீட், காட்மியம், கார்பன் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரில் அமிலத் தன்மையை அதிகரிப்பதுடன், நீரில் உலோகங்களின் அளவையும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
- இவற்றுடன், தெர்மோகோல், நெகிழியால் செய்யப்பட்ட பூக்கள், பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட ஊதுபத்தி, கற்பூரம் ஆகியனவும் நீரின் தன்மையை வெகுவாக பாதிகின்றன. இது நீர்வாழ் உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாக அமைவதுடன், அந்த நீரினை பருகும் பறவைகள், ஏனைய விலங்கினங்களையும் பாதிப்படையச் செய்து, அவை உயிரிழக்கவும் காரணமாகி விடுகின்றன.
- இந்நிலையில், ரசயான கலவைகளினாலான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசடைந்து, நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதுடன் சுற்றுப்புற சீர்கேட்டினைûயும் உருவாக்குகிறது எனத் தெரிவித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஏரிகள், ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளில், விநாயகர் சிலைகள் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதில் ஏற்படும் பிரசனைக்கு தீர்வுக் காண குழு அமைத்தும் உத்தரவிட்டது.
- இவ்வழக்கினை சமீபத்தில் விசாரித்த பசுமை தீர்பாயம் சிலைகளை நீரில் கரைப்பதால் நீர்நிலை மாசுபடுவது மட்டுமல்ல, சிலையில் கரையாத பாகங்கள் மீண்டும் கரையில் ஒதுங்குகின்றன. அவற்றை சுத்தப்படுத்தும் சுமை அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏற்படுகிறது.
- எனவே, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். சிலைகளைக் கரைக்க செயற்கையான குளங்களை உருவாக்கவும், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸôல் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
- மேலும், அனுமதி அளிக்கப்படாத பகுதிகளில் சிலைகளைக் கரைத்தால் அபராதம் விதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி கேட்போரிடம் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கட்டணத்தைத் தீர்ப்பாயக் குழு தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- விநாயகர் சிலைகள் கரைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து, மூன்று மாதங்களுக்கு முன்பே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சிலைகளைக் கரைக்க வசூலிக்கப்படும் தொகையை நீர்நிலைகளைப் பராமரிக்க செலவிடலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
- மனித ஆரோக்கியத்திற்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க, நீர் மாசுபாட்டால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களே அதற்கான விலையையும் ஏற்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
- பாதுகாப்பான சுற்றுச்சூழலைப் பெறுவது எப்படி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையோ, அதுபோலவே இயற்கையை மாசுபடாமல் காத்து, சுற்றுச்சூழலை பேணி காப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எனவே, நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாத்து, நாட்டின் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு உதவுவோம்.
நன்றி: தினமணி (01 – 02 – 2024)