TNPSC Thervupettagam

நீர்வழிப்படூஉம் - நூல் அறிமுகம்

January 8 , 2024 371 days 340 0
  • மாற்றமென்னும் பேய், விட்டுவைக்காத சமூகமே கிடையாது. அந்த மாற்றத்தில் சில சமூகங்கள் வேரூன்றி நிற்கின்றன. சில, தூர்ந்து போய் இருந்த தடம் தெரியாது அழிந்து விடுகின்றன.
  • நவீனத்தின் போக்குகளுக்கேற்ப தங்களைத் தக்கவைத்துக் கொள்ள அந்தந்த சமூகத்தின் மனிதர்கள் வேறு வேறு சூழல்களுக்கு உந்தப்படுகிறார்கள்.
  • ஆனால் எல்லாவற்றுக்கும் பின்னணியில் அந்தச் சமூகத்தின் வேரான பண்பாடும் வரலாறும் துயர்களும் பின்னியிருக்கின்றன. அவற்றின் பலத்தாலேயே மேலோட்டமான வாழ்வை நவீன மனிதன் வாழ்ந்து கழிக்கிறான். நிலத்தைத் தோண்டி அந்த வேரை நமக்குக் காட்டுகிற நாவல், நீர்வழிப் படூஉம்.

வாழ்வெனும் தாயக்கர விளையாட்டு

  • பட்ட துயர்களைப் படாத கதைகளின் வழியாகச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறையில் இருந்து எழுந்துவரும் எழுத்தாளர் தேவிபாரதி. தன் கண் முன்னால் சிதைந்த சமூகத்தின் அத்தனை கோணங்களையும் எழுத்தால் தீண்டிப் பார்க்கத் துடிக்கும் ஆவேசத்தோடு இந்த நாவலை எழுதியுள்ளார்.
  • குடிநாவிதர்கள் என்கிற பட்டத்தோடு சமூகத்தின் கண்ணியாகச் செயல்பட்ட மனிதர்களின் வரலாற்றை, அவர்களது பங்களிப்பை இந்நாவல் வழியாக அறிய த் தருகிறார்.
  • ஒரே நேரத்தில் நாவிதர்களாகவும், மருத்துவர்களாகவும், சடங்குகளை நிர்வகிப்பவர்களாகவும், இந்த எந்தவிதமான பணியையும் பொருளால் அளவிடத் தெரியாதவர்களாகவும் வாழ்ந்த ஒரு சமூகத்தின் கதையை / ஒரு குடும்பத்தின் கதையாக நம்மால் நாவலின் வழியாக அறிய முடிகிறது.
  • நாவலில் வருகிற காருமாமாவும், பெரியம்மாவும் நம் மனதை ஈர்க்கிறார்கள். வெள்ளந்தியான மனிதர்கள் மீது கவிகிற சோகமும் அவர்களின் முன்னால் நாம் கட்டிச் சேர்த்திருக்கிற இந்த எண்ணற்ற அலங்காரப் பட்டங்களும் பதவிகளும் சுக்கு நூறாகி போவதையும் காண முடிகிறது.
  • ஓர் இறப்பில் தொடங்குகிற கதை, நூல் பிடித்தாற்போல் ஒன்றிலிருந்து ஒன்று என ஒவ்வொரு நிகழ்வாக விரிகிறது. காருமாமா இறந்த வீட்டில் ஒன்று சேர்பவர்களிலிருந்து அவர்களின் கதைகள், அவர்களுடன் கதைசொல்லி வாழ்ந்த கதைகள் என விரிந்து ஒரு முழு நாவலாக உருப்பெறுகிறது.
  • ஒரு கதைசொல்லியின் லாவகத்தோடு ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நம் கையைப் பிடித்து அழைத்து செல்லும் தேவிபாரதி, அங்கு நடக்கிற நிகழ்வுகளைக் காட்டுகிறார். ஒரு நேரத்தில் கதைசொல்லி காணாமல் போகிறார். ஆம்பாரந்து கரைகளிலும் உடையாம்பாளையத்தின் வீதிகளிலும் ஈரோடு சாயப்பட்டறைக் குடியிருப்புகளிலும் வாசகர்கள் அலைந்து திரிகிறார்கள்.
  • அம்மா, காருமாமாவைப் பற்றி கதையைச் சொல்லும்போது நாமும் அழுகிறோம். நல்லதங்காள் கதையைப் போல, ஐந்து பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கிணற்றில் அம்மா இறங்கும்போது வேண்டாம் என மானசிகமாகத் தடுக்க விரும்புகிறோம். ஓடிப் போன அத்தையை பெரியம்மாவும் அம்மாவும் கறுவும்போது நாமும் சேர்ந்து கொள்கிறோம். இது கதைசொல்லியின் வெற்றியெனக் கொள்ளலாம்.
  • இருந்த தடமே தெரியாமல் குடிநாவிதன் என்கிற முறைமை அழிந்துபோகும் போது மனிதர்கள் வேறு வேலைகளுக்குச் செல்கிறார்கள்.
  • வெறும் கால்களால், கிராமத்தின் இரண்டு மூன்று தலைமுறை மனிதர்களின் பிறப்பையும் இறப்பையும் நிர்வகித்த அவர்களின் பாத வெடிப்புகளுக்கு சமூகமே நல்லடக்கம் செய்து பிராயசித்தம் தேடிக் கொள்கிறது.

உணர்வும் உறவும்

  • தனித்தனி மனிதர்களின் உணர்வுகளைத் தாண்டி உறவுகளின் அருகாமையும் தொலைவும் ஏற்படுத்துகிற விளைவுகள் குறித்தும் நாவல் வழியாக நம்மால் அறிய முடிகிறது.
  • பழி பாவத்துக்கு அஞ்சுகிற மனிதர்களாக இந்த நாவலின் உலகில் மனிதர்கள் அலைகிறார்கள். நாளைக்கு ஒரு பேச்சு வந்துவிடக் கூடாது என உரியவற்றை உரியவர்களிடம் சேர்கிறார்கள். பெற்றுக் கொள்வதைப் போலவே திரும்பச் செய்யவும் முயற்சிக்கிறார்கள். உறவுகள் விடுபடக் கூடாதென நல்ல நிகழ்வுகளுக்கும் இழப்புகளுக்கும் உடன் சென்று நிற்கிறார்கள்.
  • செத்தெழவு இல்லையென (இறப்புக்குக்கூட போகக் கூடாது) சண்டையிட்டு கொண்டாலும் முதல் ஆளாக சென்று நிற்கிறார்கள். காரணங்களே இன்றி வீம்பு கொண்டவர்களாகவும் வாழ்கிறார்கள். எதிர் எதிர் வீடாக இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை. பேசிக்கொள்ளாத போதும் ஆபத்து என்றால் உதவ முன்வருகிறார்கள். இந்த உலகத்தின் வெள்ளந்தித்தனத்தை நவீன உலகின் உணர்வுகளற்ற சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மால் வெகுவாக ரசிக்க முடிகிறது.
  • ஒரு காலத்தின் பெட்டகம் என இந்நாவலைச் சொல்லலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி வந்து செல்கிறார்கள். சாயப்பட்டறை வருகிறது. இருவர் பெட்டிக்குள் இருந்து பேசுகிற சாதனம் வீட்டுக்குள் வருகிறது.
  • வாழ்வு அழைத்துச் செல்லும் பாதையெல்லாம் நீரைப் போல மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த ஓட்டத்தில் தான் அவர்களின் பாசம், நேசம், துரோகம், வலி, துயரம் எல்லாமும் கடந்து செல்கின்றன.
  • எல்லாவற்றுக்கு பிறகும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கும் வாழ்வு மீண்டும் வேறு மனிதர்களைக் கொண்டு தனது ஆட்டத்தைத் தொடர்கிறது. வாழ்க்கை ஆடும் தாயக்கர விளையாட்டில் வெட்டுப்பட்ட காய்களால் ஒருபோதும் மீண்டும் நுழைய முடியாத ஆட்டத்தை எஞ்சியிருப்பவர்கள் தொடர்கிறார்கள், நம்பிக்கையையும் நினைவுகளையும் மட்டுமே கையில் கொண்டு அவர்கள் வாழ முற்படுகிறார்கள்.
  • கண்ணீர் சிந்தாது இந்த நாவலை வாசித்து முடிக்க இயலாது. வாசிக்கும்போதும், பிறகும் கனத்த மனதோடு ஒரு நல்ல படைப்புக்கு நம்மை ஒப்புக்கொடுத்த நிறைவு ஏற்படுகிறது. அதுவே எழுத்தாளர் தேவிபாரதிக்கும் அவர் வழியாக நம்மோடு உரையாடுகிற குடிநாவித சமூகத்துக்கும் சாகித்திய அகாதமி விருதுக்கும் நியாயம் சேர்க்கிறது.

நன்றி: தினமணி (08 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories