- சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது எந்த ஒரு சுற்றுலாத் தலத்துக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். ஆனால், அளவுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதால், உயிர்ப்பன்மை வளம் பாதிக்கப்படும் என்பதே நாம் உணராத உண்மை. அப்படியான தருணங்களில், பயணிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனும் குரல்கள் சுற்றுலாத் தலங்களில் ஒலிப்பது உண்டு. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா மாவட்டமான நீலகிரி இதற்குச் சமீபத்திய உதாரணம். நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஆண்டொன்றில் சுமார் 1.5 டன் ஞெகிழிக் குப்பை (பெரும்பாலும் பாலித்தீன் பைகள்) இங்குள்ள மலைப்பகுதிகளில் குவிக்கப்படுகின்றன. இப்பகுதியில் ஞெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், குப்பை குவிவது நின்றபாடில்லை.
அச்சமூட்டும் சூழல்
- நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டிக்கு, 2022இல் மட்டும் சுமார் பத்தாயிரம் வாகனங்களில், ஏறத்தாழ 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள், கோடை காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வந்திருக்கிறார்கள். 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்தச் சிறிய நகரம், சுமார் 90,000 மக்களின் தேவையை மட்டுமே நிறைவுசெய்யும் திறனைக் கொண்டது. இந்நிலை நீடித்தால், அது உயிர்ப்பன்மை வளம் மிகுந்த மலைகளைப் பாழாக்கிவிடும் என்று இங்கு வாழும் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அஞ்சுகிறார்கள். நீலகிரியின் சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு [Confederation of Environment Associations of Nilgiris (CEAN)], நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் எம்.அருணாவிடம் சமீபத்தில் ஒரு மனுவை அளித்தது.
- தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையினர் அதிகப்படியான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்நிலை நீடித்தால், இந்த மலைப்பகுதி உயிரியல் நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில், நீலகிரி மாவட்டத்தின் முந்தைய ஆட்சியர் எஸ்.பி.அம்ருத் இம்மாவட்டத்தில் சுற்றுலாவைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிப் பேசியுள்ளார். இப்படியான கட்டுப்பாடுகள் போக்குவரத்து உமிழ்வுகளைக் குறைப்பதற்கும் கழிவு மேலாண்மைக்கும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
சுற்றுலாக் கட்டுப்பாடு சாத்தியமா
- ‘வளங்குன்றா வளர்ச்சி’ என்கிற முறையில் சுற்றுலாவைக் கையாளும் பூடான் நாட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சுற்றுலா வளர்ச்சி மூலம் கிடைக்கும் வணிக வளர்ச்சியைவிட, உயிர்ப்பன்மைப் பேணுதலையே பெரிதாகக் கருதும் நாடு அது. பூடானுக்கு வரும் அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ‘வளங்குன்றா வளர்ச்சிக் கட்டணம்’ (Sustainable Development Fee) என்கிற பெயரில் தங்களின் கரிமத் தடத்தை ஈடுசெய்ய நாளொன்றுக்குத் தலா 100 டாலர் சிறப்புக் கட்டணம் செலுத்தியாக வேண்டும். இந்தக் கொள்கை வளங்குன்றா வளர்ச்சிக்கு வழிவகுத்தாலும், பணக்காரர்கள் மட்டுமே சுற்றுலா செல்ல முடியும் என்கிற நிலை இருக்கிறது. அத்துடன், சமத்துவத்துக்கு எதிரான ஒரு கொள்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. சமூக சமத்துவக் கொள்கைக்குப் பெயர் போன தமிழ்நாட்டில் இதுபோன்ற முன்னெடுப்புகள் சாத்தியமில்லை. எனினும், சுற்றுலாவைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் உள்ளன.
சமத்துவமான தீர்வு
- இமயமலையை ஒட்டி அமைந்திருக்கும் 13 மாநிலங்களை, சூழலியல் கூருணர்வு மண்டலம் என்ற அடிப்படையில் வரையறுத்து, அவற்றின் தாங்கும்திறனை அறிய ஆய்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளது. மலைவாசத் தலங்களுக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தடுக்கக் கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் விளைவாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது. தாங்கும்திறனை அறிந்து அதற்கேற்றாற்போலப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவது, சுற்றுலா தீவிரமடையும் பருவங்களிலும் பயணிகள் வருகையைக் கட்டுப்படுத்த உதவும் என்பது கவனிக்கத்தக்கது.
- காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான குழுவில் (IPCCC) அங்கம் வகிக்கும் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் கூறுகையில், “அளவுக்கு அதிகமான பயணிகள் வருவது காடழிப்பு, மாசுபாடு, வாழிடங்கள் அழிவு, வளம் குன்றல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்துவது நீலகிரி மாவட்டத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உதவும். சரியான முறையில் சுற்றுலாவைக் கட்டுப்படுத்துவது சமத்துவமான தீர்வாக இருக்கும்” என்கிறார். “வணிகத்துக்குப் பெரும் பாதிப்பு வராத வகையில் பயணிகள் மலைப்பிரதேசத்துக்கு வரும்போது, அவர்களிடம் தங்கும் இடத்துக்கான பதிவு இருக்கிறதா என்று கண்டறிந்த பின்பே அவர்களை அனுமதிக்க வேண்டும்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
- தங்கும் இடங்கள் மிக விலையுயர்ந்த விடுதிகளாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. சாதாரண, சிக்கனமான இடமாகவும் இருக்கலாம். இது வணிக வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்கும் என்கிறார் கீஸ்டோன் அமைப்பின் நிறுவனரும் இயக்குநருமான பிரதிம் ராய். “நீலகிரி மாவட்டத்தில் இப்போது இருக்கும் சிக்கல், அதிகப்படியான பயணிகளின் வாகனங்கள்தான். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனப் புகையால் சுற்றுச்சூழலும் சீர்கெடுகிறது” என்கிறார் அவர்.
நெரிசல் காலக் கட்டணம்
- நீலகிரி மலைப்பகுதிகளில் சூழலியல் காரணங்களால் சாலைகளை அதிக அளவில்விரிவுபடுத்த முடியாது. கண்மூடித்தனமான சாலை விரிவாக்கங்கள் ஏற்கெனவே நிலச்சரிவுகளை ஏற்படுத்திஉள்ளன. எனவே, தனியார் வாகனங்களிடம் நெரிசல் தொகை வசூலிப்பது ஒரு தீர்வாகும். “நெரிசல் காலக் கட்டணம் வசூலிப்பது சுற்றுலாப் பயணிகள் பிரத்யேகமாக வண்டிகளைக் கொண்டுவருவதைத் தவிர்ப்பதோடு, சுற்றுலாவால் ஏற்படும் சேதத்தைச் சரிசெய்ய அத்தொகையைப் பயன்படுத்தலாம்” என்கிறார் காட்டுயிர் பாதுகாப்பு நிபுணர் சி.ஆர்.ஜெயபிரகாஷ். இதைச் சிறந்த முறையில் அமல்படுத்த பொதுப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
- தற்போது நீலகிரி பகுதிக்கு உள்ளே வரவும் அப்பகுதியிலிருந்து வெளியேறவும் பொதுப் போக்குவரத்து வசதி மிகவும் குறைவாகவும் அணுக முடியாத நிலையிலும் உள்ளது. எனவே, மலைப் பிரதேசத்தில் மக்கள் பயணிக்க நிலப்பரப்புக்கு ஏற்ற வகையில் 30-40 பேர் அமர்வதற்கு ஏற்ற சிற்றுந்துகள் தேவை.
ஆற்றல் - தண்ணீர் தணிக்கை
- 2018இல் நீலகிரி மாவட் டத்தில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாகக் கட்டப் பட்டிருந்த 27 சொகுசு விடுதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விடுதிகள் கட்டப்பட்டது, மனித-விலங்கு எதிர்கொள்ளலைத் தீவிரப்படுத்தியது. அது மட்டுமில்லாமல், பயணிகளின் தேவைக்காக ஆற்றல்-தண்ணீரை இவ்விடுதிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தின. வணிக நிறுவனங்களும் உரிமம் பெற்ற சேவை நிறுவனங்களும் உரிமங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவோடு தங்கள் ஆற்றல் பயன்பாட்டை ஒப்பிட்டுக் காட்ட வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும்.
- இதன் மூலம் சூழலியல் சார்ந்த சுற்றுலா செயல்பாட்டில் இல்லாத இடங்களிலும் வளங்குன்றாத முறையில் சுற்றுலாவை வலுவூட்ட முடியும் என்கிறார் ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சில் என்கிற அமைப்பின் ஆராய்ச்சி இயக்குநர் கார்த்திக் கணேசன். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது கடுமையான நடவடிக்கையாகத் தோன்றினாலும், நீலகிரி மாவட்டத்தின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணவும் வருங்காலத்தில் வளங்குன்றாத முறையில் சுற்றுலா வளர்ச்சியைப் பாதுகாக்கவும் இது உதவும் என்பதில் சந்தேகமில்லை!
நன்றி: இந்து தமிழ் திசை (21 - 11 – 2023)