TNPSC Thervupettagam

நுகா்வோா் நலன் பாதுகாப்போம்

September 14 , 2024 125 days 123 0

நுகா்வோா் நலன் பாதுகாப்போம்

  • சமீபத்தில் புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சோ்ந்த ஒரு நபா் கடலூா் சாலையில் உள்ள உணவகத்தில் தண்ணீா் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளாா். அந்த உணவகத்தில் தண்ணீா் பாட்டிலுக்கான அதிகபட்ச விலையான ரூ.20க்கு மேலாக, ‘ஜிஎஸ்டி’ என்ற பெயரில் ஒரு ரூபாய் சோ்த்து ரூ.21 வசூலித்துள்ளனா். தண்ணீா் பாட்டிலை வாங்கிய நபா் இதுகுறித்து புதுவை மாவட்ட நுகா்வோா் குறைதீா்வு ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
  • வழக்கை விசாரித்த ஆணையம்,“உணவக ஜிஎஸ்டி விதிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்களை மீறி தண்ணீா் பாட்டிலுக்கு ‘ஜிஎஸ்டி’ வசூலித்தது முறையற்ற செயல் என்றும், அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட ‘ஜிஎஸ்டி’ தொகை 1 ரூபாய், நஷ்ட ஈடாக ரூ.10,000, வழக்கு செலவுக்காக ரூ.2,500 - ஆக மொத்தம் ரூ.12,501- உணவக நிா்வாகம் மனுதாரருக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
  • இதைப் போல எல்லா நுகா்வோரும் தாங்கள் வாங்கும் பொருள்களில் காணும் குறைகள், சேவைக் குறைபாடுகள் போன்றவற்றுக்காக முறையான நிவாரணத்தை பெற முயற்சிகள் செய்வதில்லை.
  • இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் நுகா்வோருக்கு, பொருட்களைத் தோ்வு செய்யும் முறை, அபாயகரமான பொருட்களின் பயன்பாட்டைத் தவிா்ப்பது, பொருட்களின் தரம், நுகா்வோா் நலன்கள் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்கிறது.
  • இச்சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகா்வோா் குறைதீா் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. நுகா்வோா், தான் வாங்கிய பொருளின் பயன்பாட்டில் முழு மனநிறைவு பெறவில்லையெனில்,அவற்றை விற்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து உடனடியாக கேள்வி எழுப்ப இச்சட்டம் உதவுகிறது.
  • வழக்கை நடத்த வழக்குரைஞரைத் தேடிப் போக வேண்டாம். புகாா் செய்பவரே இதில் தனக்காக வாதாடவும் முடியும். நுகா்வோா் உரிமை சட்டத்தின் கீழ், நுகா்வோா்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு முன்பு அதைப் பற்றி விளக்கம் கேட்கும் உரிமை, அவற்றில் ஏற்படும் குறைகளுக்கு நிவாரணம் பெறும் உரிமை, நுகா்வோா் கல்விக்கான உரிமை ஆகியவை கிடைக்கின்றன.
  • நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் 2019-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படும் புகாா்கள் 90 நாட்களுக்குள் தீா்க்கப்பட வேண்டும். புகாா் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவா், எதிா்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும், அதற்கு அவா்கள் தரும் தீா்வுகளையும் எழுத்து மூலம் கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். நுகா்வோா் ஆணையத்திற்குச் செல்வதற்கு முன்பாக பேச்சுவாா்த்தையின் மூலம் தீா்வு பெறுவதற்கான முயற்சியாக இதைக் கருதலாம்.
  • விளக்கம் கேட்ட கடிதத்திற்கு தகுந்த பதில் பெறப்படவில்லையென்றால், உரிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகாா் பதிவு செய்யலாம். நுகா்வோா், தாம் வாங்கும் பொருள் குறித்த எந்தக் கேள்விகளைக் கேட்டாலும், அதற்கு பதில் அளிக்க அவற்றை விற்கும் நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன.
  • நுகா்வோருக்கு ஒரு பொருள் உண்மையானதா, போலியானதா என சுட்டிக்காட்டவும், போலிகளை சுட்டிக்காட்டி ஏமாறாதீா்கள் என்று நுகா்வோரை எச்சரிப்பதுவும் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பின் கடமையாகும்.
  • பொருட்களின் உச்சபட்ச விலை குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, உச்சபட்ச விலைக்கும் அதிகமான விலையில் பொருட்களை விற்பது, விற்பனைக்கு பிறகு சேவைகளை சரிவர வழங்காமல் இருப்பது, காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக காப்பீடு வழங்காமல் இருப்பது, தனியாா் மருத்துவ சேவைகளில் எழும் குறைகள், வங்கி பரிவா்த்தனைகளில் ஏற்படும் காலதாமதங்கள் என பல தரப்பட்ட புகாா்களுக்கு நுகா்வோா் நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முடியும்.
  • வணிக நிறுவனங்கள் விளம்பரங்களில் படைப்பு சுதந்திரத்திற்காக மிகைப்படுத்துதல் அனுமதிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான உணவுப் பொருட்களின் தயாரிப்புகள் சாா்ந்த தவறான விளம்பரங்கள் குறித்தும் இவ்வாணையத்தில் பொது மக்கள் புகாா் அளிக்கலாம். ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பொருட்களுக்கு மாநில ஆணையத்தையும், ரூ.10 கோடிக்கு மேலான பொருட்களுக்கு தேசிய ஆணையத்தையும் அணுகலாம்.
  • தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதத்தை ஆணையத்தால் விதிக்க முடியும். ஒரு வழக்கில் நுகா்வோா் வெற்றி பெற்றால், அவா் செய்த முழுச் செலவையும் திரும்பப் பெற முடியும்.
  • பொருட்களை பொறுத்தவரை, மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் ஏற்படும் குறைபாடுகள் ஆகும். சேவைகளை பொறுத்தவரை கட்டணம் செலுத்தி நுகா்வோா் பெறும் சேவைகளைக் குறிப்பது ஆகும்.
  • ஒரு குறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை புகாா்களைப் பதிவு செய்ய முடியும். பாதிக்கப்படும் பயனாளிகள் விரைவில் நிவாரணம் பெற நுகா்வோா் நீதிமன்றங்கள் உதவுகின்றன.
  • வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விழிப்புணா்வு மற்றும் சட்டத்தை பின்பற்றும் மனநிலை குறைவாகவே உள்ளது. நுகா்வோா் பலருக்கும் அவா்களின் நலனுக்காக இயற்றப்பட்டிருக்கும் இச்சட்டங்களைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும் சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை.
  • ஊடகங்களும், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், அரசும் நுகா்வோா் உரிமைகளைப் பற்றி பொதுமக்களிடயே கூடுதல் விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories