- கரோனா பெருந்தொற்று ஏற்பட்டவுடன்தான் நுண்ணுயிரிகள் மீதான நம் கவனம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன்பே பாக்டீரியா, வைரஸ் ஆகிய நுண்ணுயிரிகளை நாம் அறிந்திருந்தாலும்கூட, கரோனாவுக்குப் பிறகுதான் மக்கள் நுண்ணுயிரிகளைக் கண்டு அதிகம் அஞ்சத் தொடங்கினர். உண்மையில் நுண்ணுயிரிகள் கெட்டவையா, நம்மை அழிப்பதற்காகவே பிறந்தவையா என்றால், இல்லை.
- நுண்ணுயிரிகளுக்கும் நமக்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. நம் உடலை ஆராய்ந்தால் அதற்கு உள்ளேயும் வெளியேயும் பாக்டீரியாக்கள், ஈஸ்டுகள், வைரஸ்கள் எனக் கூட்டம் கூட்டமாக நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியும். இதை நுண்ணுயிரின மண்டலம் (Microbiome) என்கிறோம். இந்த நுண்ணுயிரின மண்டலம் நமக்குப் பலன்கள் ஏராளம்.
- நம் உடலில் வாழும் ஒருவகை நுண்ணுயிரியால்தான் (பாக்டீரியாய்ட்ஸ் ஃபிராகிலிஸ்) நார்ச்சத்தை குடல் ஜீரணிக்கிறது. உடலுக்கு வேண்டிய சில ஊட்டச்சத்துகளை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றுகிறது. ஸ்டஃபைலோகாக்கஸ் ஹோமின்ஸ் எனும் பாக்டீரியா நம் சரும ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
- பல செல் உயிரிகள் பூமியில் தோன்றுவதற்கு 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நுண்ணுயிரிகள் வாழ்ந்துவருகின்றன. அதனால், பின்னால் தோன்றிய அத்தனை உயிரினங்களும் பிழைத்திருப்பதற்கு ஏதோ ஒரு வகையில் நுண்ணுயிரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.
- ஒரு குழந்தை பூமியில் பிறந்த உடனேயே அதற்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையேயான உறவு தொடங்கிவிடுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும், அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் நுண்ணுயிரிகள் பெரும் பங்காற்றுகின்றன. உண்மையில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் மட்டுமல்ல, நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்கூட நம் வாழ்க்கைக்கு ஏதோ ஒருவகையில் உதவுகின்றன.
- கனடாவைச் சேர்ந்த மருத்துவர்கள், அங்குள்ள பழங்குடி மக்களிடையே 1970இல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் காடுகளிலும் சுகாதாரச் சீர்கேடு மிகுந்த பகுதிகளிலும் வாழும் குழந்தைகளைவிட, சுகாதாரமான சூழலில் வாழும் குழந்தைகள் அதிக அளவு ஆஸ்துமாவுக்கும் மற்ற ஒவ்வாமை நோய்களுக்கும் ஆளாவது தெரியவந்தது.
- இதே முடிவை மற்ற நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளும் உறுதிசெய்தன. இது ஏன் என்று ஆராய்ந்ததில் அதிகச் சுகாதாரம் மிக்கச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பலவீனமான நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- பொதுவாக ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் செயல்படாமலேயே இருக்கிறது. இதனால், பல்வேறு நுண்ணுயிரிகள் உடலுக்குள் செல்கின்றன. இதை உடல் வேண்டுமென்றே அனுமதிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு நுண்ணுயிரியையும் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றில் எது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமோ அதை மட்டும் தனியாக வகைப்படுத்திவிடுகிறது. அடுத்த முறை அது உடலுக்குள் நுழையும்போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்துவிடுகிறது.
- இதுவே சுகாதாரமான சூழலில் வளரும் குழந்தைகளின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் பல்வேறு நுண்ணுயிரிகளுக்குப் பரிச்சயம் ஆகியிருக்காது. எனவே, அவற்றால் எளிதில் நோய் ஏற்படும் நுண்ணுயிரிகளை வகைப்படுத்த முடியாமல் போகிறது. இதனால், காற்றில் பரவும் மகரந்தம், வீட்டில் பயன்படுத்தும் சாதாரண வேதிப்பொருள்களைக்கூட ஆபத்தான கிருமிகள் என்று நினைத்துத் தாக்கி ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது.
- இன்று நாம் சாப்பிடும் உணவு சுத்தமாக இருக்கிறது. நாம் குடிக்கும் நீர் சுத்திகரிக்கப்பட்டுக் கிடைக்கிறது. மனிதர்கள் தனித்தனியாக வாழ்வதால் அவர்களுக்கு இடையே தொடர்பில்லாமல் கிருமிப் பரவலும் குறைந்துவிடுகிறது. ஆனால், இதுவே நமக்கு நோய்ப் பாதிப்பு அதிகரிப்பதற்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- உடலுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளைப் பொருத்தவரை தாயிடம் இருந்தே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. அதன்பின் அந்தக் குழந்தை உயிர் வாழ்வதற்கு வேண்டிய பல்வேறு உதவிகளையும் இந்த நுண்ணுயிரிகள்தாம் செய்கின்றன.
- ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துகள் அனைத்தும் தாய்ப்பாலின் மூலமாகவே கிடைக்கின்றன. இந்தச் சத்துகள் குழந்தைகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்வது நுண்ணுயிரிகள்தாம். தாய்ப்பாலில் ஒலிகோ சர்க்கரை எனும் பொருள் அதிக அளவில் இருக்கும். இந்தச் சர்க்கரையைக் குழந்தைகளால் ஜீரணிக்க முடியாது. அவற்றை உடைத்துக் குழந்தைகளுக்கு வேண்டிய ஊட்டச்சத்தாக மாற்றுபவை நுண்ணுயிரிகள்தாம்.
- குழந்தைகளின் பெருங்குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள், தாய்ப்பாலில் உள்ள ஒலிகோ சர்க்கரைகளின் சிக்கலான மூலக்கூறுகளை ஜீரணித்து, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் மூளை வளர்ச்சிக்கும் வேண்டிய கொழுப்பு அமிலங்களாகவும் ஊட்டச்சத்துகளாகவும் வெளியிடுகின்றன.
- இது மட்டுமல்லாமல் தாய்ப்பாலில்கூடச் சில வைரஸ்கள் இடம்பெற்றுள்ளன. இவையும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து, உடலுக்குச் சாதகமான நுண்ணுயிரிகளை மட்டும் அனுமதிக்கின்றன. இவ்வாறு வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நுண்ணுயிரிகள் நமக்கு உதவுகின்றன.
- மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களும் நுண்ணுயிரிகளின் உதவிகளை நாடுகின்றன. உதாரணமாகக் குளவி இனங்கள் முட்டையிடும்போது பசை போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்தப் பசையில் இடம்பெற்றிருக்கும் நுண்ணுயிர்கள் குளவிக் குஞ்சுகள் நோய்த்தொற்றால் பாதிக்காதபடி பாதுகாக்கின்றன. இவ்வாறு ஒவ்வோர் உயிரினமும் பிறப்பில் இருந்தே நுண்ணுயிரிகளைச் சார்ந்து இருக்கிறது.
- இருப்பினும், சில நுண்ணுயிரிகள் நம்மைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால், எதிரி யார், நண்பன் யார் என்பதை நமது உடல் அறிந்தே வைத்திருக்கிறது. நமக்குக் கெடுதல் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளைத் தெரிந்துகொண்டு, நோய்த்தடுப்பு மண்டலத்தின் உதவியுடன் அழிக்க முனைகிறது. அதற்கும் நுண்ணுயிரிகள்தாம் உதவிபுரிகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2023)