TNPSC Thervupettagam

நூறு நாள் வேலை: பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

August 2 , 2023 474 days 400 0
  • நூறு நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பயனர்கள் பட்டியலிலிருந்து இந்த ஆண்டு 5 கோடிப் பேர் நீக்கப் பட்டிருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். 2021-22ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2022-23இல் இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247% அதிகம் என்பது இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது.
  • மேற்கு வங்கத்தில் மட்டும் 5,199% கணக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. தெலங்கானா (2,727%), ஆந்திரப் பிரதேசம் (1,147%), உத்தரப் பிரதேசம் (466%), உத்தராகண்ட் (427%) என நீளும் இந்தப் பட்டியல், இந்தத் திட்டம் செல்லும் திசை குறித்த சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. இது வழக்கமாக மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைதான் என்று கூறியிருக்கும் மத்திய அமைச்சகம், போலியான வேலை அட்டை, வேலைபார்க்க விருப்பமின்மை, தொழிலாளர் இடப்பெயர்வு உள்ளிட்ட சில அம்சங்களை இதற்கான காரணிகளாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. எனினும், சம்பந்தப்பட்ட பயனர்கள், நூறு நாள் வேலைத்திட்ட அட்டையுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காததுதான் அவர்கள் நீக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • குறிப்பாக, ஆதார் அடிப்படையிலான ஊதிய முறை மூலம்தான் இந்தத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடுவை நான்கு முறை நீட்டித்தது. இறுதியாக, ஆதார் எண்ணுடன் நூறு நாள் வேலை அட்டையை இணைப்பதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அரசின் இந்த முடிவை எதிர்த்து சமூகச் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர். எனினும், இதுதொடர்பான நடவடிக்கையை அவசரகதியில் மாநில அரசுகள் மேற்கொண்ட நிலையில், வழக்கத்தைவிட மிக அதிகமான எண்ணிக்கையிலான பயனர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
  • நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிய கல்வித் தகுதியோ, தொழில் திறனோ தேவையில்லை என்பதால், சாமானியர்கள் ஏதேனும் ஒருவகையில் பிழைத்துக்கொள்ள முடியும். இத்திட்டத்தில் வேலை பார்ப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள்தான். மேலும், பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பிய பின்னர், அவர்களின் பிழைப்புக்கு இத்திட்டம் மிகப் பெரிய அளவில் கைகொடுத்தது.
  • இதற்கிடையே, இத்திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப் படுவதில் தாமதம் நிகழ்வதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதியம் நிலுவையில் இருப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று 2016இல் உச்ச நீதிமன்றமும் கண்டித் திருந்தது.
  • தவிர, ஆதார் அட்டை பெறுவது, ஆதார் எண்ணுடன் கைபேசி எண் உள்ளிட்டவற்றை இணைப்பது என்பன போன்றவற்றில் கிராமப்புற மக்கள் பின்தங்கியிருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் உணர்த்துகின்றன. இந்தச் சூழலில், ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுவதால் நூறு நாள் வேலைத் தொழிலாளர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவது சரியா என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய மாநில அரசுகளும் மத்திய அரசும் இணக்கமாகச் செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories