TNPSC Thervupettagam

நூறுநாள் வேலைத் திட்டம்

October 13 , 2021 1141 days 735 0
  • ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்' ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அண்மைக்காலமாக நிலவுகிறது. அதன்மேல் விவாதங்களும் வைக்கப் படுகின்றன.
  • ஏழைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டங்களிலேயே முதன்மையான திட்டம் என்று இதனை உலக வங்கி பாராட்டியதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
  • இந்தியா நடுத்தர வர்க்க நாடு அல்ல; ஏழைகள் அதிகம் வாழும் நாடு. ஆகையால்தான் நம் பிரதமர் இந்தப் பேரிடர் காலத்தில் 80 கோடி மக்களுக்கு பொது விநியோக முறையில் உணவு தானியங்கள் வழங்கி உணவுப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் என்று ஐ.நா. சபையில் கூறினார்.
  • இன்று இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் நமக்கு புரிந்திருந்தால் இப்படிப்பட்ட விவாதம் வந்திருக்காது; இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் நடந்திருக்காது. இந்தத் திட்டம் வந்ததிலிருந்து, இந்தத் திட்டத்திற்கு எதிரான கருத்தை தொடர்ந்து பரப்பி வந்தது ஒரு கூட்டம்.
  • அது மெல்ல மெல்ல அரசியல் தளத்தில் பரவி, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியது. இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு புதிய அரசு வந்தவுடன் மூடுவிழா காணப் போகும் திட்டமாக இது சித்திரிக்கப்பட்டது.
  • ஆனால் நடந்தது வேறு. அந்தத் திட்டம் சீரமைக்கப்பட்டதே தவிர, நிறுத்தப்படவில்லை. உண்மை என்னவென்றால், இந்தத் திட்டம் பற்றி பொதுவெளியில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி அறிக்கைகள் அமைந்துவிட்டன.
  • அவை, இந்தத் திட்டம் விவசாயத்தில், இதில் பணி செய்த பணியாளர்களின் வாழ்வாதாரத்தில், குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமையில், பெண்கள் மேம்பாட்டில், பொதுச்சொத்து உருவாக்குவதில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை தரவுகளின் அடிப்படையில் வெளிக் கொணர்ந்து விட்டன.

ஒரு பார்வை!

  • இன்றைய மத்திய அரசாங்கம் இத்திட்டத்திற்காக ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 45,000 கோடியிலிருந்து 70,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து விட்டு தேவையின் அடிப்படையில் மேலும் 40,000 கோடி ரூபாயை 2020-ஆம் ஆண்டு மாநிலங்களுக்குக் கொடுத்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • அது மட்டுமல்ல, இந்தப் பேரிடர் காலத்தில் இத்திட்டத்தின் தேவையைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்வு இதழ்களில் வந்ததை பலர் வசதியாக மறந்து விட்டனர்.
  • இந்தப் பேரிடர் காலத்தில் விளிம்புநிலை மக்களுக்கும், பெண்களுக்கும், தலித்துக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது இந்தத் திட்டம்தான் என்பதை ஆதாரத்துடன் "டௌன் டு எர்த்' என்ற ஆங்கில ஆய்வு இதழ் கட்டுரையாக வெளியிட்டது.
  • இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு பொது சொத்துகள் உருவாகியுள்ளன என்பதையும் அவை எவ்வாறு விவசாயத்துக்கு உதவுகின்றன என்பதையும் கள ஆய்வின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது.
  • அதேபோல் தமிழ்நாட்டின் காந்திகிராம பல்கலைக்கழகமும் குஜராத்திலுள்ள "இர்மா' ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பன்னிரண்டு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்தன.
  • ஆய்வு முடிவில், பெண்களை அதிகாரப்படுத்துவதில், குடும்பத்தில் பெண்கள் முடிவெடுப்பதில், கிராமசபையில் பெண்கள் பங்கேற்பதில் இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட விளைவுகளை அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன.
  • அமெரிக்காவிலுள்ள பிரெளன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்ரோ பாஸ்டர், இந்தத் திட்டத்தால் கிராமப்புற உள்ளாட்சியின் ஆளுகையில் நடந்த மாற்றங்களை தன் ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். இத்திட்டத்தால் வரவேற்கத்தக்க பல விளைவுகள் விளிம்புநிலை மக்களின் குடும்பங்களில் பெண்கள் மூலம் நடந்துள்ளன.
  • இந்தத் திட்டம் வட மாநில மக்களுக்குத்தான் அதிக அளவில் பலனளித்திருக்க வேண்டும். அங்குதான் இந்தத் திட்டம் அதிகம் தேவைப்பட்டது.
  • ஆனால் இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களான கேரளமும் தமிழகமும்தான். நூறுநாள் வேலைத் திட்டம் என்பது வேலை தருவதும் பணம் தருவதும், பொதுச்சொத்தை உருவாக்குவதும் மட்டுமல்ல.
  • இவற்றைத் தாண்டி பல உயரிய நோக்கங்கள் இந்தத் திட்டத்திற்கு இருக்கின்றன. அவற்றை நாம் புரிந்துகொண்டு மக்களிடமும் அந்தப் புரிதலை ஏற்படுத்திவிட்டால் உலகையே வியக்க வைக்கும் உன்னதத் திட்டமாக இந்தத் திட்டத்தை மாற்றிடலாம்.
  • இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு என்பதை சட்டத்தின் மூலம் உரிமையாக்கித் தந்துள்ளது. அதை நாமும் புரிந்துகொண்டு, மக்களும் புரிந்து கொண்டால் இதன் மகத்துவம் நமக்குப் புரியும். நம் உரிமையை நாமே பாழ்படுத்த மாட்டோம்.
  • அடுத்து இத்திட்டத்தின் அடுத்த நோக்கம், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது. இந்தப் பணியின் மூலம் வாழ்வாதாரப் பாதுகாப்பு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
  • இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதிகாரப்பரவலுக்கு வலு சேர்க்க வேண்டும். பஞ்சாயத்து அமைப்புகள் இதன் மூலம் வலுப்பெற வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • திட்டமிடும் பணி மக்கள் பங்கேற்போடு நடத்திட வேண்டும். இந்தப் பணியாளர்கள் மூலம் கிராமசபை நடவடிக்கைகள் மேம்பட வேண்டும்.
  • அடுத்து, இத்திட்டத்தின் மூலம் தரமான பொது சொத்துகள் உருவாக்கப்பட்டு விவசாயத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.
  • நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட வேண்டும், வரத்துக் கால்வாய், போக்குக் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.
  • மண்ணை வளப்படுத்துவது, நீர் ஆதாரத்தை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தோட்டக்கலை அபிவிருத்தி, நில மேம்பாட்டுச் செயல்பாடுகளை நடத்திட வேண்டும்.

நல்ல பணி

  • நூறுநாள் வேலைத் திட்டத்தில் செலவழிக்கப்படும் மொத்த தொகையும் யாருக்கு நேரிடையாகச் செல்ல வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு, குறிப்பாக தலித்துக்கள், பெண்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்கள் கைகளுக்குச் செல்ல வேண்டும்.
  • அப்படிக் கிடைக்கின்றபோது அந்தப் பணம் அவர்களுக்குப் பல வழிகளில் பாதுகாப்பை வழங்கிடும்.
  • இவ்வளவு உன்னதமான அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நூறுநாள் வேலைத் திட்டம், இன்று வேலையே செய்யாமல் மரத்தடியில் உட்கார்ந்து விட்டு பணம் வாங்கும் திட்டமாக சித்திரிக்கப்பட்டு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சோக நிகழ்வு.
  • இந்தத் திட்டத்தில் ஊழல் இல்லாமல் இல்லை. இதற்கு யார் காரணம்? கிராமசபையில் பொதுமக்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை? இந்தத் திட்டத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படும் பணம் மக்கள் வரிப்பணம்தானே? அதை நம் மக்கள் ஏன் கண்காணிக்கத் தவறுகின்றார்கள்?
  • நம் பஞ்சாயத்து தலைவர்களும் அரசு அதிகாரிகளும் இதை ஏன் முழுப்புரிதலுடன் செயல்படுத்தவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. இதில் பல விதமான ஊழல்கள் இருக்கின்றன.
  • அவை களையப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு நிலையில் தமிழகம் இந்தத் திட்டத்தின் மூலம் பொது சொத்துகளை உருவாக்குவதில் சிரத்தையற்று இருந்தது. தற்போது அது மாறி வருகிறது.
  • மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் தமிழகத்தில் ஓரளவு சிறப்பாகச் செயல்படுவதாகத்தான் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
  • ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் தவறுகளின் அடிப்படையில் ஒட்டு மொத்த திட்டச் செயல்பாட்டின்மீதும் குறை கூறுவது சரியல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை ஆய்வு முடிவுக் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 30,143 கோடி ரூபாய் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக கிராமப்புறங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது.
  • சராசரியாக ஒரு கிராமப் பஞ்சாயத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் 2.4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவ்வளவும் யாருக்குச் சென்றிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
  • ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன் சென்றிருக்கிறது.
  • நம் பஞ்சாயத்தில் இத்தனை கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக செலவு செய்யப் பட்டுள்ளது என்றால் இந்தத் திட்டத்தால் உருவாக்கப்பட்ட பொது சொத்து எங்கே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
  • நாம் குடிமக்களாக வாழாமல் பொதுமக்களாக வாழ்ந்து குறை சொல்லிப் பழகிவிட்டோம். திட்டத்தில் ஏற்படக்கூடிய தவற்றை தட்டிக் கேட்க பொறுப்புள்ள குடிமக்களாக மாறி நாம் கேள்விகளை கிராமசபையிலே கேட்டிருக்க வேண்டும். தற்போது இத்திட்டத்திலுள்ள குறைகளைக் களைவதற்கான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • நூறுநாள் வேலைத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவை களையப்பட்டு திட்டம் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
  • அதை விட்டுவிட்டு, ஏழை எளிய மக்கள், குறிப்பாக விளிம்புநிலை மக்கள் பயன்பெறும் ஒரு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் கருத்துக் கூறுவது அந்த மக்களுக்கு நாம் இழைக்கும் துரோகம் என்பதை உணர வேண்டும்.
  • நூறுநாள் வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் குறைந்தபட்ச கூலி என்பது பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டது.
  • அதேபோல் சுதந்திர இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி என்பதும் கிராமங்களில் இத்திட்டத்தின் மூலமே கிடைத்தது.
  • கேரள மாநிலத்தைப்போல இந்தத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் எடுத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்த முனைய வேண்டும். இந்தத் திட்டம் பற்றி சரியான முறையில் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
  • கிராமசபை உறுப்பினர்கள் திட்ட செயல்பாடுகள் பற்றி கிராமசபையில் கேள்வி கேட்க வேண்டும்.
  • பஞ்சாயத்தைத் திட்டமிட வைக்க வேண்டும். அதுதான் நாம் ஏழை எளிய மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், பெண்களுக்கும் செய்யும் நல்ல பணியாகும்.

நன்றி: தினமணி  (13 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories