TNPSC Thervupettagam

நூற்றாண்டில் நுழையும் மேட்டூர் திட்டம்

July 25 , 2024 172 days 321 0
  • தமிழ்​நாட்டின் உயிர்​நாடியாக விளங்​கும் மேட்டூர் அணை கட்டப்​படுவதற்கு 1925 ஜூலை 20ஆம் தேதி அடிக்​கல் நாட்டப்​பட்டது. மேட்டூர் அணை நூற்​றாண்​டில் நுழையும் இந்த வேளை​யில், அதன் வரலாறோ திருப்​பங்​கள், ஆச்சரியங்​கள் நிறைந்​தது.
  • நீர்ப்​பாசனத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்​கலாம். முதலாவது, ஆறுகளில் உள்ள சாதாரண நீர்ப்​போக்கு மூலம் குறைந்த அளவு பாசன வசதியை நிலங்கள் பெறும். மற்றொன்று, ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்​களில் அவற்றைத் தேக்கிவைத்து, பிறகு சீரான அளவில் தேவையான அளவுக்கு நிலங்​களுக்குப் பாசன வசதி அளிப்பது. ஆனால், இயற்கையான முறையில் பாசன வசதி பெறும் வாய்ப்பு நமது மாநிலத்தில் இல்லை. பெருவெள்​ளத்தைச் சேமித்துப் பாசன வசதி ஏற்படுத்தித் தர இயலும். அதற்குச் சிறந்த உதாரணம் ‘காவிரி-மேட்டூர் திட்டம்’.

தொடக்கமும் தடங்கல்களும்:

  • ‘நீர்ப்​பாசனத் தந்தை’ எனப் போற்றப்​படும் சர் ஆர்தர் காட்டன் 1834 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுத்​தார். நான்கு சிறந்த பொறியாளர்கள் இத்திட்டத்தை மேம்படுத்தி, இறுதியாக முன்மொழிவு​களைத் தயாரித்​தனர். 1856 இல் மேஜர் லாஃபோர்ட் காவிரி ஆற்றில் மேட்டூர் - ஈரோட்டுக்கு இடையில் நெருஞ்​சிப்​பேட்டை என்ற இடத்தில் நீர்த்​தேக்கம் அமைய முன்மொழிந்​தார்.
  • பல காரணங்​களால் அந்த இடம் சரிவராமல் திட்டம் கைவிடப்​பட்டது. 1901 இல் மாற்று இடங்கள் முன்மொழியப்​பட்டன. 1904 இல் நெருஞ்​சிப்​பேட்டை என்ற இடத்தில் இருந்து மேல்நோக்கிச் சற்றுத் தள்ளி ஓர் இடத்தை மோஸ் முன்மொழிந்​தார். 1910இல் கர்னல் எல்லிஸ் இத்திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக நியமிக்​கப்​பட்டார்.
  • அவர் அளித்த விரிவான அறிக்​கை​யின்படி ரூ.3.85 கோடி மதிப்​பீட்டில் ஒரு புதிய திட்டம் அரசுக்குச் சமர்ப்​பிக்​கப்​பட்டது. இந்த வேளையில், கெடு வாய்ப்பாக மைசூர் அரசு எழுப்பிய நீர்ப் பங்கீட்டு தாவா மூலம் ‘காவிரி-மேட்டூர் திட்டம்’ சுமார் 15 வருட காலத்​துக்குப் பின்னடைவைச் சந்தித்தது.
  • இந்தப் பிரச்சினை நடுவர் மன்றத்​துக்குப் பரிந்துரைக்​கப்​பட்டது. அதன் தீர்ப்பை மதராஸ் அரசு நிராகரித்து, மேல் முறையீடு செய்தது. மீண்டும் மதராஸ் - மைசூர் அரசுகளின் முதன்மைப் பொறியாளர்​களின் பேச்சு​வார்த்தை நடைபெற்று, 1921 இல் பகுதியளவு ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • 1923 இல் மைசூர் அரசு தனது நிலைப்​பாட்டில் உறுதியாக நின்று, மேட்டூர் நீர்த்​தேக்கம் தவிர வேறு எந்தக் கட்டு​மானங்​களையும் மதராஸ் மாகாணத்தில் ஏற்படுத்தக் கூடாது என்றும், அப்போதைய விளைநிலங்​களின் நீர்ப்பாசன அளவைத் தவிர, நிலங்​களின் அளவை அதிகப்​படுத்​துதல் கூடாது என்றும் வாதிட்டது. அதிகாரபூர்வக் கடிதப் போக்கு​வரத்து மட்டுமின்றி இரண்டு அரசுகளின் பிரதிநிதி​களுக்​கிடையே தனிப்பட்ட முறையிலான கலந்தாலோ​சனைக் கூட்டங்​களும் பலமுறை நடைபெற்றன.
  • 1922 ஜூன், ஜூலை மாதங்​களில் நீர்ப்​பாசனத் துறைக்குப் பொறுப்பு வகித்த சர் கே.சீனிவாச ஐயங்கார், மைசூர் அரசின் திவானிடம் பல முறை நேரடி​யாகப் பேச்சு​வார்த்தை நடத்தினார். 1923 செப்டம்​பரில் சர் கெப்பி என்ற ஆலோசகர் இந்திய அரசின் சார்பாகப் பணிக்​கப்​பட்டு, இரண்டு அரசுகளின் முதன்மைப் பொறியாளர்​களுடன் பெங்களூரில் பேச்சு நடத்தினார். இறுதியாக, 1924 பிப்ரவரி மாதம் தொடர்ந்து 5 நாள்கள் நடந்த ஆலோசனையின் முடிவில், பிப்ரவரி 18ஆம் தேதி இரண்டு அரசுகளும் ஒப்பந்​தத்​துக்கு ஒப்புக்​கொண்டன.
  • இந்த ஒப்பந்தம் ஏற்பட சர் சி.பி.ராமசாமி ஐயரின் முயற்சி பெரிதும் துணைபுரிந்தது. திட்ட மதிப்பீடு மறுசீரமைப்பு செய்து ரூ.6.12 கோடியாக உயர்த்​தப்​பட்டு, இந்திய அரசுக்கு 1924 மார்ச் 31 இல் அனுப்​பிவைக்​கப்​பட்டது. இந்திய அரசுச் செயலரின் ஒப்புதல் 1925 மார்ச் மாதம் கிடைத்தது.

வழி பிறந்தது:

  • இதனிடையே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசு மதராஸ் மாகாணச் சட்டமன்​றத்தில் நீர்ப்​பாசனத் திட்டச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மறைமுக நிபந்தனை விதித்தது. அதன் முக்கியத்​து​வத்தை உணர்ந்த சட்டமன்ற உறுப்​பினர் சி.பி.ராமசாமி ஐயர் 1924 ஆகஸ்ட் 18 இல் காவிரி-மேட்டூர் நீர்த்​தேக்கம் கட்டவும், தேவையான கால்வாய், இதர பணிகளுடன் அப்போதைய நீர்ப்​பாசனத் திட்டத்தை மேம்படுத்​தவும் மதராஸ் மாகாணச் சட்டப்​பேரவையில் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.
  • இதற்கு நான்கு நாள்கள் முன்பு சட்டமன்ற உறுப்​பினர் டி.வி. சேஷகிரி ஐயர், சி.பி.ராமசாமி ஐயருக்கு எழுதிய கடிதத்​தில், ‘மேட்டூர் திட்டம் விரும்​பத்​தகாதது. இந்த நேரத்தில் அதை நிறைவேற்ற தீர்மானம் மூலம் அழுத்தம் கொடுக்​கப்படக் கூடாது’ என்று குறிப்​பிட்டிருந்​தார். அப்போது அமைந்​திருந்த சட்டமன்றக் குழு மக்களின் பொதுக்​கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் சட்டமன்றம் முழுமையான பிரதிநிதித்​து​வப்​படுத்​தப்​பட​வில்லை என்பதே அவர் கருத்து. அதைத் திறமையுடன் சமாளித்து அந்தத் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டது.
  • இது நடந்து ஆறு மாதங்​களுக்குப் பிறகு, மார்ச் 5 இல் ஒரு சுவையான நிகழ்ச்சி மதராஸ் மாகாண சட்டமன்​றத்தில் நடந்தேறியது. சட்டமன்ற உறுப்​பினர் டி.எம்​.நாராயண ஸ்வாமி பிள்ளை, “பாசன மசோதாவின் மூலம் மணல் மிகுந்த பாலைவனங்​களைப் பயன் தரத்தக்க அழகான தோட்டங்களாக மாற்றுவோம் என்று கூறிய சர் சி.பி.ராமசாமி ஐயர், மேட்டூர் போன்ற நீண்ட காலத் திட்டத்​துக்கு வெறும் ரூ.4 லட்சம் ஒதுக்கவே அக்கறை காட்டினார்” என்று தனது அதிருப்தியை வெளியிட்டார்.
  • குறுக்​கிட்டுப் பதிலளித்த ராமசாமி ஐயர், இந்த மேட்டூர் அணைத் திட்டத்​துக்கு மத்திய அரசின் செயலர் அனுமதி அளித்​து​விட்ட​தாகவும், அந்தத் தகவல் அன்று காலைதான் தனக்குக் கிடைத்​த​தாகவும் உறுப்​பினர்​களின் பலத்த கைத்தட்டல்​களுக்கு இடையில் சபையில் அறிவித்​தார்.
  • எந்தக் குறிப்​பிட்ட இடத்தில் உறுதியாக அணைக் கட்டு​மானம் கட்டப்​பட​விருக்​கிறது என்ற இறுதி முடிவு எட்டப்​படாமல் பரிசீலனையில் இருந்​ததால், நிலம் கையகப்​படுத்தும் நடவடிக்​கைக்கு மட்டுமே பட்ஜெட் போடப்​பட்டதாக விளக்​கமும் அளித்​தார். இந்திய அரசு உள்துறை அனுமதி பெறப்​பட்டிருப்​ப​தால், இந்தத் திட்டத்​துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என்று தெரிவித்​தார்.

அடிக்கல் நாட்டப்பட்டது:

  • இறுதியாக ‘காவிரி - மேட்டூர் திட்டம்’ ஒப்புதல் அளிக்​கப்​பட்டு, 1925 ஜூலை 20 இல் அப்போதைய மதராஸ் ஆளுநர் விஸ்கவுன்ட் கோஷென் (Viscount Goschen) அடிக்கல் நாட்டினார். தற்போதைய மேட்டூர் அணையின் வலதுபுறம் பாறைகள் நிறைந்த ஓரிடத்தில் கலவை இயந்திரம் பொருத்தும் பணி மேற்கொள்​ளப்​பட்டது.
  • தொடக்க விழாவுக்கு ஏராளமான விருந்​தினர்​களும் பார்வை​யாளர்​களும் வந்திருந்​தனர். விழாவில் கலந்து​ கொண்டு உரையாற்றிய ராமசாமி ஐயர், நீர்ப்​பாசனத் துறையை வெகுவாகப் பாராட்டினார். லட்சக்​கணக்கான மக்களின் நன்றிக்கு உரியவராக ஆளுநர் கோஷென் மதிக்​கப்​படுவார் என்றும் கூறினார்.

தொடங்​கியது பணி:

  • அணை கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளும், நிர்வாக அமைப்பு முறைகளும் அந்த நேரத்தில் ஏற்கெனவே ஆரம்பித்​து​விட்டன. அதைச் செயல்​படுத்த ஒரு குழு அமைக்​கப்​பட்டது. திட்டத்​துக்கு அவசியம் அனுமதி கிடைத்​து​விடும் என்ற முழு நம்பிக்​கையில் முன்னதாகவே நிலம் கையகப்​படுத்தும் வேலைகள் ஆரம்பிக்​கப்​பட்டிருந்தன. திட்டத்​தின்படி, அணை 200 அடி உயரத்​துடனும் (ஆழமான அடித்தள அஸ்திவார நிலையிலிருந்து), 6,352 அடி நீளத்​துடனும் அமைக்​கப்​பட்டது. மேற்கு - கிழக்காக காவிரி ஆற்றைக் கடந்து கிழக்கே உள்ள சீத்தாமலை வரை அணையின் நீளம் அமைந்தது.
  • இத்திட்டத்தின் மூலம் 3,01,000 ஏக்கர் நிலங்கள் புதிதாக சாகுபடி செய்யப் பாசன வசதி கிடைக்கும் எனவும், இரண்டாம் போகம் பாசன வசதி சுமார் 90,000 ஏக்கருக்குக் கிடைக்கும் எனவும் அப்போது கணக்கிடப்​பட்டது. புதிய நவீனக் கட்டுமான முறைகள், நவீனத் தொழிற்​ கரு​வி​களின் உதவியுடன் குறிப்​பிட்ட காலத்​துக்கு முன்பாகவே அணையைக் கட்டி முடிக்க முடிந்தது. 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 இல் மேட்டூர் அணை திறப்பு விழா கண்டது.
  • தமிழ்​நாட்டின் நெற்களஞ்​சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்​களுக்கு 100 ஆண்டுகளாகச் சீரான பாசன வசதியும் பல மாவட்டங்​களுக்குக் குடிநீர் வசதியும் தந்து கோடிக்​கணக்கான மக்களின் தாகம் தீர்க்​கிறது இந்த காவிரி - மேட்டூர் திட்டம். சிறியதும் பெரியதுமான பல பெரிய தொழிற்​சாலைகள் இயங்கத் தேவையான அளவு தண்ணீர் வசதி தந்து, தொழில் துறையை மேம்படுத்த வைக்கிறது. அந்த வகையில் மேட்டூர் அணை மனிதர்​களால் மனிதர்​களுக்கு அருளப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்​டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories