TNPSC Thervupettagam

நூலகம் என்றோர் அறிவுப் பட்டறை

August 29 , 2024 138 days 235 0

நூலகம் என்றோர் அறிவுப் பட்டறை

  • பாரதி, "பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்றார். பாரதியின் தாசனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட பாரதிதாசன், "புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' என்றார்.
  • கல்வி மனிதனின் அடிப்படைத் தேவை. அதற்கு நூல்கள் வேண்டும். நூல்களைப் பாதுகாத்து சமூகத்துக்கு அளிக்க நூல்நிலையங்கள் அவசியம்.
  • தமிழ்ச் சமூகத்துக்கு நூல்நிலையங்கள் புதிதல்ல. சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக மூன்று சங்கங்களிலும் நூல்கள் அரங்கேற்றப்பட்டதோடு பாதுகாக்கவும் பட்டன. பிற்காலத்தில், அச்சுஇயந்திரம் வந்த பின் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எண்ணிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், ஆதீனங்களை நாடினார். அங்கே நூல்கள் ஏட்டுச் சுவடிகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன. தமிழர், நூல் நிலையங்களை ஏற்படுத்திப் பாதுகாக்கும் வழக்கம் கொண்டிருந்தமை இதனால் தெளிவாகிறது.
  • தமிழகத்தில் மட்டுமல்ல, பாரத தேசத்தில் நூல்களைப் பாதுகாத்து வைக்க நூல் நிலையங்களை ஏற்படுத்தியிருந்ததை நாளந்தா பல்கலைக்கழகத்தின் வழியாகத் தெரிந்து கொள்கிறோம். லட்சக்கணக்கான நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டிருந்ததை வரலாறு கூறுகிறது. யுவான் சுவாங், ஹியூன் சாங் போன்ற பயணிகளும் இங்கு வந்து கல்வி பயின்றதோடு சமய, சித்தாந்த நூல்களைப் படியெடுத்துக் கொண்டு, அதைப் பொக்கிஷமென தமது நாட்டுக்குக் கொண்டு சென்றதை அவர்களே பதிவு செய்துள்ளனர்.
  • காஞ்சியிலும் நூல்களைப் படியெடுத்துக் கொள்ள பல ஆண்டுகள் யுவான் சுவாங் தங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் அரசின் மானியத்தில் செயல்பட்டு வந்ததற்கும் குறிப்புகள் உள்ளன.
  • ஒளவை தனது மூதுரையில்,"நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு' என்று நூல் பல கற்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார். இந்தப் பாரம்பரியத்தில் வந்த நமக்கு நூல் நிலையங்கள் வாழ்வோடு இணைந்தவை. இன்றைக்கும் அந்தத் தத்துவமே நூல் நிலையங்களை அரசு ஏற்படுத்துவதற்கான அடிப்படை.
  • தமிழக அரசு, மாவட்ட மைய நூலகம், மாவட்டக் கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் என ஊர்தோறும் நூலகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிரவும் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மதுரையில் தமிழ்ச் சங்க நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என சிறப்பு நூலகங்களும் அதிநவீன வசதிகளுடன் இயங்கி வருகின்றன. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் நூலகங்கள் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நாளில் நடமாடும் நூலகம், மின் நூலகம் போன்ற வசதிகளும் ஏற்பட்டுள்ளன.
  • சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு நூலகம் அத்தியாவசியமானது. சாதாரண மனிதர்களையும் சாதனையாளர்களாக மாற்றியமைக்கும் வல்லமை நூல்களுக்கு உண்டு. அனைத்து நூல்களையும் ஒருவர் வாங்கிப் படித்தல் சாத்தியமில்லை என்பதால் நூலகங்கள் அனைவரும் எளிதாகச் சென்று பயன்படுத்தக் கூடிய வகையில் அமைதல் வேண்டும்.
  • இதற்காகவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வீட்டுவரி செலுத்தும்போதே அதில் ஒரு சிறு தொகையை நூலக வரி என்று செலுத்துகிறோம். இந்தத் தொகை, மாவட்ட நூலக ஆணைக் குழுவுக்கு வழங்கப்படும். இந்தத் தொகையைக் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் நூலகங்கள் பராமரிப்பு, நிர்வாகம், புதிய நூல்கள் வாங்குவது ஆகியவற்றைச் செயல்படுத்த முடிகிறது.
  • இப்படி நூல்நிலையங்களை அரசு சாத்தியமாக்கியுள்ள நிலையில், அதில் நூல்கள் வாங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தான ரிட் மனு ஒன்று 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான தீர்ப்பினை கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதியாக இருந்த நீதியரசர் ஆர்.மகாதேவன் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட்டனர்.
  • தீர்ப்பில், "நூலகங்கள் கற்பனையைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளன. அவை உலகத்தை நமக்குத் திறந்து காட்டி ஆராய்வதற்கும் சாதிப்பதற்கும் ஊக்கம் தருகின்றன. நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மக்களின் அறிவுசார் திறன்கள், இயல்பு, நடத்தை இவற்றை வடிவமைப்பதில் நூலகத்தின் பங்கு முக்கியமானது. எனவே நூலகத்திற்கு வாங்கப்படும் நூல்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் சில தீர்வுகளை இந்தத் தீர்ப்பு தருகிறது.
  • தமிழகத்தில் நல்ல புத்தகங்களை வெளியிடும் பல சிறந்த பதிப்பகங்கள் இருக்கின்றன. அவை ஊக்குவிக்கப்பட வேண்டும். அவை வெளியிடும் புத்தகங்களை நூலகங்களுக்கு வாங்க வேண்டும். பொதுமக்கள் நூலகங்களில் நேரத்தைச் செலவிட ஊக்கமளித்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
  • புகழ்மிக்க பதிப்பகங்கள் வெளியிடும் நூல்கள் மற்றும் சிறந்த எழுத்தாளர்களின் நூல்களை வியாபார நோக்கத்தில் வெவ்வேறு பெயர்களில் மாறுபட்ட அட்டைப் படத்துடன் வெளியிட்டு நூலகங்களுக்குத் தருவோரை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நூலகத் துறைக்கு சில தீர்வுகளை நீதிமன்றம் தந்துள்ளது.
  • அதன்படி, நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய பொதுநூலக இயக்ககம் மக்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வலைதளத்தை உருவாக்க வேண்டும். அப்படியோர் வலைதளம் இருப்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • புத்தகங்கள் வாங்குவதற்கான முன்மொழிவுகள் இந்த வலைதளத்தில் அறிவிப்புகளாக வெளியிடப்பட வேண்டும். 200 புத்தகங்களுக்குக் குறையாமல் பதிப்பித்துள்ள தமிழகத்தில் செயல்படும் பதிப்பகங்களுக்கு இந்த அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இத்தகைய பதிப்பகங்களின் பட்டியலை ஏற்படுத்திப் பராமரிக்க வேண்டும்.
  • நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகங்கள் மீண்டும் அச்சிடப்பட்டு வெவ்வேறு தலைப்புகளிலும் ஆசிரியர்களின் பெயர்களிலும் வெளியிடப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் வாங்கப்படுகின்றன. பதிப்புரிமை நாட்டுடைமை ஆக்கப்படும்போது, அரசே அதன் பாதுகாவலராகிறது. இலக்கியப் படைப்பின், படைப்பாளரின் தார்மிக உரிமையைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது. எனவே, நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகள் வெவ்வேறு பெயர்களில் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பொதுவெளியில் விற்பனைக்கு வராமல் பொதுநூலகங்களுக்காக மட்டுமே நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். ஒருமுறை வாங்கப்பட்ட புத்தகங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் வாங்கப்படக் கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்பட வேண்டும். அப்படிப் பின்பற்றாத அதிகாரிகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இப்படி அரசுக்கு வழிகாட்டும் தீர்ப்பில் நூலகத்தின் பெருமைகள் மற்றும் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ""நூல்களை சேகரிப்பவை நல்ல நூலகங்களல்ல. நல்ல நூலகங்கள் சேவைகளை உருவாக்குகின்றன, சிறந்த நூலகங்கள் சமூகங்களை உருவாக்குகின்றன.'' உறுப்பினர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள நூலகத்தைப் பயன்படுத்துவதில் முனைப்புடன் பங்கேற்பது, ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும், சமூகத்தில் உள்ள மக்களின் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும்.
  • ஒரு நூலகம் என்பது பலருக்கும் பல விதமாக அமையலாம். நூலகங்கள் அறிவுக்கான நுழைவாயில்கள். அவை தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு விலைமதிப்பற்ற ஆதாரங்களாகச் செயல்படுகின்றன. வெறும் புத்தகங்களின் களஞ்சியமாக மட்டும் நூலகங்கள் இருப்பதில்லை. கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் கலாசார, அறிவுசார் மையங்களாக இருக்கின்றன. இதையெல்லாம் உணர்ந்தே நூலகங்களுக்கான சட்டம் இயற்றப்பட்டு நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
  • நூலகங்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய அம்சம், நூலகத்திற்கு வருகை தருவதைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் கொண்டுவர பள்ளிக்கூடத்தின் தலைவர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பின் இறுதியில் கூறியுள்ளதே ஆகும்.
  • மாணவர்களும், நூலகமும் உற்ற நண்பர்கள் ஆகும்போது, மாணவர்களுக்கு அறிவுப் பஞ்சமே இருக்காது. பாடப் புத்தகங்களைத் தாண்டி பிற நல்ல புத்தகங்களையும் அவர்கள் படிக்கும்பொழுது சிந்தனைத் திறன் விரிவடைகிறது. புரிந்துகொள்ளும் ஆற்றல் பெருகுகிறது. உடற்பயிற்சியால் உடல் உறுதி பெறுவது போல வாசிப்பு மனதிற்கு வலிமை தருகிறது.
  • சிறந்த, தெளிந்த மனநிலையை உருவாக்கவும் நன்மை தீமைகளைக் கண்டறியவும் வாசிப்பு அவசியம். ஒரு சாதாரண கல் உளியால் செதுக்கச் செதுக்க அழகிய சிற்பமாவது போல, புத்தகங்கள் வாசிக்க வாசிக்க அவை நம்மைப் பண்புள்ள மனிதர்களாக்குகின்றன.
  • வாசிப்பு மனிதனை முழுமையடையச் செய்யும். வாசிப்பு அறத்தினை மனதில் ஏற்றும். ஞாபக சக்தியைப் பெருக்கும். பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட, புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளும் செய்திகள் நினைவில் நிற்கும். மாணவனின் பார்வையும் உலகமும் விரிவடையும்.
  • மாணவர்களிடத்தில் நூலகப் பயன்பாட்டுப் பழக்கத்தை ஏற்படுத்தி, அகண்ட, ஆழமான வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்கும்போது, வேறுபாடுகள் மறைந்து அமைதியும் புரிதலும் மிகுந்த சமத்துவ சமூகம் உருவாகும்.

நன்றி: தினமணி (29 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories