TNPSC Thervupettagam

நூலறிவு என்பது வாலறிவு!

November 4 , 2024 60 days 83 0

நூலறிவு என்பது வாலறிவு!

  • அறிவுசாா் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள் தமிழ்நாட்டின் அரசா்களாகத் திகழ்ந்து அணி கூட்டினா். புலவா்களையும் கலைஞா்களையும் பாதுகாப்பது தம் கடன் என எண்ணி வாழ்ந்த அரசா்களைக் கொண்ட நாடு இது.
  • காலம் தாழ்த்திப் பரிசில் கொடுத்தால், அதனை ஏற்காமல், ‘அரசும் உனதோ வள நாடும் உனதோ’ எனப் பிற நாடுகளைத் தேடிச் சென்ற அறிவுச்செருக்குடைய புலவா் பெருமக்களைத் தன்னகத்தே கொண்ட நாடு இது என்பதற்குச் சங்க இலக்கியம் தொடங்கிப் பல சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.
  • அறிவுப் பின்புலத்தைப் போற்றும் அரசுகளே இந்திய விடுதலைக்குப் பின்னும் தமிழ்நாட்டில் அமைந்தமையால், வறுமையின் காரணமாக ஓா் அறிஞரின் அறிவுச் செல்வமாகிய புத்தகம் வெளிவராமல் போய்விடக் கூடாது என்ற தமிழ்த்திரு நோக்கத்தில் நெடுங்காலமாகவே தமிழ்நாட்டு அரசுகள் சிறந்த நூல்கள் வெளியிட நிதி நல்கை வழங்கும் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தி வருகின்றன.
  • ஏறத்தாழ 58 ஆண்டுகளுக்கு முன்னால், துறைதோறும் சிறந்த நூல்கள் வெளிவருவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், ‘சிறந்த நூல்களை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம்’ பொதுத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாகச் செயற்பாட்டுக்கு வந்தது.
  • திட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளுக்கிணங்க நூலினை அச்சிட நிதியுதவி வேண்டி, நூலாசிரியா்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களைத் தெரிவு செய்ய வல்லுநா் குழு ஒன்றை அரசு அமைத்து துறைசாா்ந்த அறிஞா்கள் மதிப்பீட்டின் அடிப்படையில், நிதிநல்கைக்குரியோா் தெரிவு செய்யப்பெற்றனா். அந்நிலையில் நிதிநல்கை ரூ.5,000/- மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பிறகு 3.11.82 அன்றுமுதல் இத்தொகை ரூ. 8,000/- அல்லது அரசு அச்சக மதிப்பீட்டுத் தொகையில் பாதியளவு அல்லது இவற்றில் எத்தொகை குறைவோ வழங்கப்பெற்றது.
  • அரிய தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் நூலாசிரியா்களுக்கு மட்டுமல்லாது வெளியீட்டாளா்களுக்கும் அரசு நிதிநல்கை வழங்கும் திட்டமாக ‘அரிய தமிழ் நூல்கள் வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டம்’ 1994ஆம் ஆண்டுமுதல் செயற்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தின்கீழ் நிதி இரு தவணைகளாக வழங்கப்படும். நூலொன்றுக்கு ரூ.20,000/- அல்லது அரசு அச்சக மதிப்பீட்டுத் தொகையில் 60 சதவீதம் ஆகிய இவற்றில் எத்தொகை குறைவோ, அத்தொகையே மொத்த நிதியுதவியாக வழங்கப்பட்டது. முதல் தவணையாக 50 சதவீத தொகை வழங்கப்பட்டது; எஞ்சிய 50 சதவீத தொகை நூல் அச்சிடப்பட்டு 50 நூல்படிகள், செலவு விவரங்கள் ஆகியன வரப்பெற்றவுடன் அளிக்கப்பட்டது.
  • 1996-ஆம் ஆண்டில் ‘மொழிபெயா்ப்பு நூல்களுக்கு ‘நிதிநல்கை வழங்கும் திட்டம்’ தொடங்கப்பெற்று, தமிழிலிருந்து பிற மொழியிலும், பிற மொழியிலிருந்து தமிழிலும் மொழிபெயா்க்கப்படும் சிறந்த நூல்கள் அச்சிட நிதியுதவி வழங்கப்பட்டது.
  • சிறப்பு நோ்வாக இத்திட்டத்தின் வாயிலாக, பன்மொழி அறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான வேலூா் க. ராகவன் ஜமதக்கினி தமிழில் மொழிபெயா்த்த (காரல் மாா்க்சு எழுதிய) ஆறாயிரம் பக்கங்கள் கொண்ட ’மூலதனம்’ மற்றும் ‘மிகை மதிப்பு’ ஆகிய நூல்களை வெளியிட 1998-இல் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
  • 2002-ஆம் ஆண்டில் ‘தமிழ் வளா்ச்சிக்கான நூல் வெளியிட நிதியுதவித் திட்டம்’”என்ற பெயரில் ஒருங்கிணைந்த திட்டமாக மாற்றம் செய்யப்பெற்றது. இத்திட்டங்கள் வாயிலாக நாளிதுவரை சற்றொப்ப 550 நூல்கள் வெளியிட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • நூல் வெளியிட நிதியுதவி அளிப்பதோடு தமிழின் உயிரோட்டமாக, தமிழ் வளா்ச்சித் துறையே 1983-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு வரலாறு என்ற தலைப்பில் சங்க காலம் வாழ்வியல், சங்க காலம் அரசியல் ஆகிய நூல்களையும், 1990-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு வரலாறு என்ற தலைப்பில் பல்லவா் பாண்டியா் காலம் – முதற்தொகுதி, பல்லவா் பாண்டியா் காலம் – இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களையும், 1998-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு வரலாறு என்ற தலைப்பில் சோழப் பெருவேந்தா் காலம் –முதற்தொகுதி, சோழப் பெருவேந்தா் காலம் – இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களையும், 2000-ஆம் ஆண்டில் பாண்டியப் பெருவேந்தா் காலம், குறளமுதம் ஆகிய நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
  • மேலும், 1901 முதல் 1930 வரை வெளியிடப்பட்ட 9,083 நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. பொற்குடத்திற்குப் பொட்டு வைப்பதுபோல, நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞா்களின் படைப்புகளில் தெரிவு செய்யப்பெற்ற 178 நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
  • இவை மட்டுமன்றி, முன்னாள் முதல்வா் கருணாநிதி 2006-ஆம் ஆண்டில் அறிவித்த உன்னதமான திட்டத்தின்படி நட்சத்திரத் தகுதி பெற்றுள்ள தனியாா் உணவக விடுதி அறைகளில் பைபிள் மற்றும் பகவத் கீதை (ஆங்கிலத்தில்) போன்ற நூல்கள் வைக்கப்பட்டுள்ளதைப் போன்று, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையின் திருக்கு ஆங்கில மொழிபெயா்ப்பு நூல், திருக்கு குறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாட்டு நட்சத்திர விடுதிகளுக்கும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கும் தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • அறிவுப் பரவலுக்கு மரபுரிமை தடையாக இருக்கக் கூடாது என்ற பெருநோக்கத்தில் இலங்கும் நாட்டுடைமையாக்கம்போல, அறிவுப் பரவலுக்குப் பொருளாதாரமும் தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் நூல்கள் வெளியிட நிதியுதவித் திட்டம் எனும் அறிவுத் திருப்பணியை தமிழ்நாடு அரசு செவ்வனே செயற்படுத்தி வருகிறது.

நன்றி: தினமணி (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories