- புத்தகம்தான் ஒருவனை வித்தகனாக்கும். நூலறிவுதான் ஒருவனுக்கு மேம்பட்ட அறிவைக் கொடுத்து அவனை வாலறிவனாக மாற்றும். அதனால் வாசிக்கும் பழக்கத்தை ஒருவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பை நேசிப்பவன்தான் வையத்தில் மேல்நிலைக்கு வருவான். உணவின் சத்துகள் நம் ரத்தத்தில்தான் கலக்கும். புத்தகத்தின் சத்துக்கள்தான் நம் சித்தத்தில் கலந்து சிந்தனையைத் தெளிவாக்கும்.
- புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்களைப் பலர் வாங்கிச் செல்கின்றனர். அவ்வளவு புத்தகங்களையும் அவர்கள் படிக்கிறார்களா அல்லது புத்தக அலமாரியில் அடுக்கி வைக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.
- எனக்குத் தெரிந்த பிரபலமான ஒருவர் வீட்டில் பல வகையான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "இவ்வளவு புத்தகங்களையும் படித்தீர்களா' என்று நான் கேட்டபோது, "இவற்றையெல்லாம் படிக்க நேரம் எங்கே இருக்கிறது? ஏதோ ஒன்றிரண்டைப் படிப்பேன். புத்தகத்தை வாங்கிச் சேர்த்து வைப்பதில் எனக்கு ஆவல் அதிகம்' என்று கூறினார். அவர் போல் ஒருசிலர் இருக்கலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
- அந்த நாளில் தமிழ்நாட்டிலேயே நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்திப் புத்தகம் படித்தவர்களில் அறிஞர் அண்ணாவும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
- கன்னிமாரா நூலகத்தையே கரைத்துக் குடித்தவர் அண்ணா. அங்கு தேடிக் கிடைக்காத ஒரு நூல் திருவல்லிக்கேணி சிங்காரவேலர் மாளிகையில் உள்ள நூலகத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு போய்த் தேடி எடுத்து அதைப் படித்தார். இதை அண்ணாவே சொல்லியிருக்கிறார். அதைப்போல பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் அவ்வப்போது அங்கு சென்று நூல்களை எடுத்துப் படித்திருக்கிறார்.
- அண்ணா அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது அறுவைச் சிகிச்சைக்கு நேரமாகிவிட்டது வாருங்கள் என்று டாக்டர் மில்லர் அழைத்தபோது, கொஞ்சம் பொறுங்கள், இன்னும் அரை மணி நேரத்தில் இதைப் படித்து முடித்து விடுவேன். அதன் பின்னர் அறுவைச் சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம் என்றார் அண்ணா.
- அப்படி அண்ணா கடைசியாகப் படித்த அந்தப் புத்தகம் மேரிகரோலின் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய "மாஸ்டர் கிறிஸ்டியன்' என்ற புத்தகம்தான். தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கே இது தெரியாது.
- அப்படியெல்லாம் அண்ணா படித்த காரணத்தால்தான் எந்த நேரத்தில் எந்தத் தலைப்பைக் கொடுத்து எந்த இடத்தில் பேசச் சொன்னாலும் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தார். சிலர் புத்தகங்களைப் படிக்காத காரணத்தால்தான் மற்றவர்களிடம் எழுதி வாங்கி மேடையில் தாங்கள் பேசுவது போல் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பல தவறுகள் நிகழ்கின்றன. இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
- பண்டித ஜவாஹர்லால் நேரு விமானப் பயணம் செய்யும்போது - அது அரை மணி நேரப் பயணமாக இருந்தாலும் - குறைந்தது ஐந்து புத்தகங்களாவது எடுத்துச் செல்வாராம். இந்திரா காந்தி ஒருமுறை அவரிடம், "இத்தனை புத்தகங்கள் எடுத்துச் செல்கிறீர்களே. அரை மணிநேரப் பயணத்தில் ஒரு புத்தகத்தைக் கூடப் படிக்க முடியாதே. இவ்வளவையும் ஏன் எடுத்துச் செல்கிறீர்கள்' என்று கேட்டாராம்.
- அதற்கு நேரு, "அது எனக்கும் தெரியும். இருந்தாலும் ஏன் இத்தனை புத்தகம் எடுத்துச் செல்கிறேன் என்றால், இத்தனை அறிஞர்கள் என்னுடன் பயணிக்கிறார்கள் என்ற தெம்பு எனக்கு ஏற்படும். அதனால் துணிச்சலோடு எதையும் சொல்லலாம் என்ற நம்பிக்கையும் ஊக்கமும் எனக்குள் தோன்றும். அதனால்தான் இத்தனைப் புத்தகங்களை எடுத்துச் செல்கிறேன்' என்றாராம்.
- அது மட்டுமல்ல நான் மறைந்து விட்டால் என்னுடலில் மலர் மாலைகளை வைக்காதீர்கள். புத்தகங்களைப் பரப்பி வையுங்கள் என்பாராம் பண்டித நேரு. அதைப்போல் இன்றைக்கு எந்தத் தலைவர் சொல்கிறார்?
- முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவர்தான் "எனக்கு சால்வையோ, பூங்கொத்தோ கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாகப் புத்தகங்களைக் கொடுங்கள்' என்று கூறுகிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
- உலக அளவில் சமுதாயப் புரட்சிக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் புத்தகங்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றன. வால்டேர், ரூசோ எழுதிய புத்தகங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. ஹிட்லர் எழுதிய "மெயின் கேம்ப்' என்ற புத்தகம்தான் ஜெர்மானியர்களை இன வெறி உள்ளவர்களாக மாற்றியது. புத்தகங்களால் தீமையும் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
- அதே நேரத்தில் நூலகங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தவர் ஹிட்லர். இங்கிலாந்து மீது ஜெர்மனி படையெடுத்தபோது, "இலண்டன் நகரை எது வேண்டுமானாலும் செய்யுங்கள். அங்கிருக்கக் கூடிய நூலகங்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படக்கூடாது. அப்படி சேதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு நான் கடுமையான தண்டனை விதிப்பேன்' என்று எச்சரித்தார் அவர்.
- அவரை விடக் கொடுங்கோலர்களாக இலங்கையில் மகிந்த ராஜபட்சவும், கோத்தபய ராஜபக்சவும் இருந்ததால் யாழ்ப்பாணம் நூலகத்தையே இராணுவத்தை விட்டு எரிக்கச் செய்தனர். இலட்சக்கணக்கான தமிழ் நூல்களை அழித்துவிட்டனர், நூலகத்தின் பெருமை புரியாத அறிவிலிகள் அவர்கள். காலம் அவர்களை நிச்சயம் தண்டிக்கும்.
- இலங்கை மக்கள் போர்க்கோலம் கொண்டதால் இலங்கையை விட்டே தப்பிச்செல்லக்கூடிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டதல்லவா? அதுபோல் தமிழ் மக்கள் கோபத்தால் அவர்கள் தண்டிக்கப்படப் போவதும் உறுதி.
- இத்தாலியில் பிறந்த மாக்கியவல்லி எழுதிய "பிரின்ஸ்' (இளவரசன்) என்ற நூல்தான் பிளவுபட்டுக் கிடந்த இத்தாலியை ஒன்றுபடுத்தியது. மாக்கியவல்லியின் மறைவுக்குப் பிறகுதான் இந்நூல் வெளிவந்தது. 20 ஆண்டுகளில் 25 பதிப்புகள் வெளிவந்தன.
- பிரெஞ்சு நாட்டு மன்னன் பதினான்காம் லூயி இந்த நூலைத் தனது மார்பில் வைத்தபடியே தூங்குவானாம். அந்த அளவுக்கு இந்நூல் அவனைப் பாதித்திருந்தது.
- வாட்டர்லூ போர்க்களத்தில் இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் இந்த நூலைப் படித்து மேலும் தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டான் மாவீரன் நெப்போலியன் என்று அவன் வாழ்க்கை வரலாறு கூறுகிறது. ஜெர்மனி நாட்டின் இரும்பு மனிதன் என்று சொல்லப்படும் பிஸ்மார்க், "எனக்கு மிகவும் விருப்பமான நூல் பிரின்ஸ்' என்று குறிப்பிட்டிருக்கிறார். தனக்குத் தொடர்ச்சியான ஊக்கத்தைக் கொடுத்தது இந்த நூல்தான் என்று ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் பதிவு செய்திருக்கிறார். காரல் மார்க்ஸýக்கு முன் ஐரோப்பிய அரசியலைப் புரட்டிப்போட்ட நூல் மாக்கியவல்லியின் "பிரின்ஸ்' நூல்தான்.
- தாமஸ்பெயின் எழுதிய "காமன் சென்ஸ்' என்ற நூல் பிரிட்டிஷ் பிடியிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் விடுதலை பெறக் காரணமாக அமைந்தது. இந்த நூலைப் படித்த பிறகுதான் ஜார்ஜ் வாஷிங்டன், தாம்சன், ஜெபர்சன், பெஞ்சமின் பிராங்கிளின் போன்றவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விடுதலைக்கு மிகத் தீவிரமாகப் போராடினர்கள். 47 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நூல் மூன்று மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.
- அதுபோல் அமெரிக்காவில் நிலவிய அடிமை முறையை எதிர்த்து மிகப்பெரிய உள் நாட்டுப் போரை ஏற்படுத்தியது "ஹாரியட் பீச்சர் ஸ்டோஸ்' என்ற பெண்மணி எழுதிய "அங்கிள் டாம்ஸ் கேபின்' என்ற நூல் தான்.
- "நேஷனல் ஈரா' என்ற வார இதழில் ஓராண்டு காலம் கற்பனை கலந்த கதையாக எழுதினார். இந்த நூல் ஒரே ஆண்டில் மூன்று லட்சம் பிரதிகள் விற்பனை ஆயின. ஐரோப்பாவிலும், காலனி நாடுகளிலும் 15 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இந்நூல் 22 மொழிகளில் வெளிவந்திருக்கிறது.
- அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் வருவதற்கு இந்த நூல்தான் காரணம். 1862-ஆம் ஆண்டு ஆபிரகாம் லிங்கனைப் பார்ப்பதற்கு வெள்ளை மாளிகைக்குச் சென்ற ஹாரியட் பீச்சர் ஸ்டோசை ஆபிரகாம் லிங்கன் வரவேற்றபோது "மிகப் பெரிய உள்நாட்டுப் போரை புத்தகத்தின் மூலம் உருவாக்கிய இளைய நங்கையே வருக' என்று அழைத்து வரவேற்றாராம்.
- "காரல் மார்க்ஸ் தனது தாஸ் கேபிடல் (மூலதனம்) என்ற நூலை, லண்டன் மியூசியத்தில் இருந்த நூலகத்தில் ஒரு நாளைக்குப் பதினாறு மணி நேரம் செலவழித்துக் குறிப்புகளைத் திரட்டி 17 ஆண்டுகளில் எழுதி முடித்ததாக வரலாறு கூறுகிறது.
- இந்த நூலைப் படித்த பிறகுதான் ரஷியாவில் லெனின் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி உருவானது. மா சேதுங் சீனாவில் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைப்பதற்கும் வியத்நாமில் ஹோசிமின் புதிய ஆட்சி அமைப்பதற்கும் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் சேர்ந்து புரட்சிகரமான ஆட்சியை அமைப்பதற்கும் "மூலதனம்' என்ற நூல்தான் அடிப்படையாக விளங்கியது.
- பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன் அவன் இறுதியாகப் படித்த புத்தகம் லெனின் எழுதிய "த ஸ்டேட் அண்ட் ரொவல்யூஷன்' (அரசும் புரட்சியும்) என்ற புத்தகம்தான்.
- ஆக, புத்தகங்களும், நூலகங்களும்தான் புரட்சியாளர்களுக்கும், அறிவாளர்களுக்கும் வாளாயுதங்களாகவும் போராயுதங்களாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நூலாயுதம்தான் எழுத்தாளர்களுக்கு இன்றைக்கு வேலாயுதமாக இருக்கிறது. அந்த வகையில் நூலாயுதங்களை நாம் சேகரிப்போம்.
நன்றி: தினமணி (01 – 12 – 2023)