TNPSC Thervupettagam

நூலிழையில் ஊசலாடும் மனித இனம்

December 19 , 2023 473 days 347 0
  • ஐ.நா. காலநிலை மாற்றக் கூட்டமைப்புச் சட்டகத்தின் (United Nations Framework Convention on Climate Change) உறுப்பினர்கள் பங்கேற்ற 28ஆவது காலநிலை உச்சி மாநாடு (Conference of Parties - COP28) துபாயில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்றது. நம்பிக்கையூட்டும் சில நகர்வுகளும், ஏமாற்றம் தரும் பல நிகழ்வுகளுமாக இம்மாநாடு முடிவடைந்திருக்கிறது.

எதிர்பார்ப்புகள்

  • காலநிலை மாற்றத்துக்கான முக்கியஉடன்படிக்கையான ‘2015 பாரிஸ் ஒப்பந்த’த்தில் உலகின் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பெரிய ஆய்வு நடத்தப்படும். இலக்கை நோக்கி எதிர்பார்த்தபடி எல்லா நாடுகளும் செயல்படுகின்றனவா என்பது கணக்கெடுக்கப்படும். பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, முதன்முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த இந்த ஆய்வின் முடிவுகள், 28 ஆவது உச்சிமாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாநாடு தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக வெளியான உமிழ்வு இடைவெளி அறிக்கை (Emissions Gap Report), அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
  • உமிழ்வுகள் அப்படியே தொடரும்பட்சத்தில் வெப்பநிலை உயர்வதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநாட்டில்விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டுச் செயல்பாடுகள் முடுக்கிவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. புதைபடிவ எரிபொருள்களின் உற்பத்தியை மேற்கொள்ளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மாநாடு நடத்தப்படுவதைப் பலர் விமர்சித்திருந்தனர். மாநாட்டின் தலைவராகச் சுல்தான் அல்-ஜாபர் நியமிக்கப்பட்டது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அபுதாபி எண்ணெய் நிறுவனத்தின் தலைவரான அல்-ஜாபர், சமரசமின்றிப் புதைபடிவ எரிபொருள்களை அணுகுவாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

முக்கிய முடிவுகள்

  • மாநாட்டின் முதல் நாளிலேயே மிக முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது. சென்ற உச்சி மாநாட்டில் விவாதமாக முன்னெடுக்கப்பட்ட இழப்பு-பாதிப்புக்கான நிதியம் (Loss and Damage Fund) குறித்த தெளிவான வரைமுறைகள் வெளியிடப்பட்டன. வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மைப் பிரதிநிதிகளைக் கொண்ட 26 நபர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், நிதியம் சுயேச்சையாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜெர்மனியும் ஐக்கிய அரபு அமீரகமும் தலா நூறு மில்லியன் டாலர்களை வழங்குவதாக அறிவித்த நிலையில், இந்த நிதியத்தைத் தொடங்குவதற்கான குறைந்தபட்சத் தகுதி எட்டப்பட்டது.
  • அடுத்தடுத்து நாடுகள் நிதி வழங்கியதில் மாநாட்டின் இறுதி நாளில் மொத்தம் 770 மில்லியன் டாலர் சேகரிக்கப்பட்டது. காலநிலை உச்சி மாநாடுகளின் 28 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, மாநாட்டு ஆவணத்தில் நேரடியாக, ‘புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது’ என்பது போன்ற சொற்றொடர் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. இறுதி அறிக்கையில், ‘காலநிலைமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, புதைபடிவ எரிபொருள்களிலிருந்து விலகிச் செல்வது’ என்ற முடிவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கிய நகர்வு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை மூன்று மடங்கு அதிகரிப்பது என்று ஓர் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆற்றலின் செயல்திறனை அதிகரிப்பதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. காலநிலை மாநாடு வரலாற்றில், காலநிலைசார்ந்த நோய்கள், உடல்நலம், சுகாதாரப் பிரச்சினைகள்ஆகியவை பற்றி விவாதங்கள் முதல்முறையாகநடந்தன. இதுதொடர்பான அறிக்கையில், 124 நாடுகள் கையெழுத்திட்டன.

ஏமாற்றங்கள்

  • இழப்பு-பாதிப்புக்கான நிதியத்தில் இப்போது உள்ள நிதி போதுமானது அல்ல என்று தீவு நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளும் குற்றம்சாட்டியிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் 400 பில்லியன் டாலர் அளவுக்குக் காலநிலை இழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், ஒரு சர்வதேச மாநாட்டில் நேரடியாகக் கோரிக்கை வைத்தும் சில நூறு மில்லியன் டாலர்கள் மட்டுமே சேர்ந்திருப்பது கவலைக்குரியது. மாநாட்டின் இறுதி அறிக்கையில், கரிமச் சேகரிப்புத் தொழில்நுட்பம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கரிம வணிகத்தை ஊக்குவிப்பதாக இருக்கிறது. தவிர, கரிமச் சேகரிப்புத் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதாலேயே உமிழ்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வழக்கம்போல புதைபடிவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அறிக்கையின் பல இடங்களில் உள்ள சொற்களும் வாக்கியங்களும் குழப்பமானவையாக இருக்கின்றன. குறிப்பாக, ‘வரைமுறையற்ற நிலக்கரிப்பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘தடுக்க வேண்டும்’ அல்லது ‘முழுமையாகக் கைவிட வேண்டும்’ என்று ஏன் சொல்லவில்லை என்று செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. ஆனால், அதற்கான நிதியுதவி பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ‘இடைப்பட்ட எரிபொருள்களைப் (Transitional Fuels) பயன்படுத்தலாம்’ என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்தச் சொல்லாடல் ஆபத்தானது என்றும், மேலை நாடுகள் திரவ இயற்கை எரிவாயுவை நோக்கி நகர்வதை இது ஊக்குவிக்கும் என்றும் காலநிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாநாட்டில் எண்ணெய் நிறுவனங்கள், கரிமச் சேகரிப்பு- தொழில்நுட்பங்கள் சார்ந்த நிறுவனங்களிலிருந்தும் பலர் பங்கேற்றிருக்கின்றனர். புதைபடிவ எரிபொருள் பயன்பாடு குறித்து ஏற்கெனவே நாடுகள் முரண்பட்டுவரும் நிலையில், இவர்கள் பங்கேற்றது விமர்சிக்கப்பட்டது.
  • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்காவின் முன்னெடுப்பாகப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. இழப்பு-பாதிப்பு நிதியத்துக்கு, அமெரிக்கா சார்பில் 17.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம், பசுமை காலநிலை நிதியத்துக்கு 2 பில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கத் துணை அதிபர் கமலாஹாரிஸ் அறிவித்திருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் உள் அரசியல் இது நடக்காமல் தடுத்துவிடும் என்றுவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒபாமாவின் காலகட்டத்திலும் இதுதான் நடந்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போராட்டங்கள்

  • பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலைக் கட்டுப்படுத்த முடியாத உலக நாடுகளால், காலநிலைப் பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட முடியுமா என்ற கேள்வி நிலவியது. “காலநிலை மாற்றத்தோடு இஸ்ரேல் தாக்குதலைப் பற்றியும் பேச வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் காலநிலை நீதியை நிலைநாட்ட முடியாது” என்கிறார் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க். மனித உரிமை பேணுதலும் காலநிலை நீதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஆகவே, மனித உரிமை குறித்த போராட்டங்களும் மாநாட்டு வளாகத்தில் தொடர்ந்து நடந்தன. இந்தியாவைச் சேர்ந்த பன்னிரண்டே வயதான செயல்பாட்டாளர் லிசிப்ரியா கங்குஜம், மாநாடு நடக்கும்போது திடீரென்று மேடையேறி, புதைபடிவ எரிபொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார். சில நிமிடங்களில் மேடையிலிருந்து இறக்கப்பட்டார் என்றாலும் அவரது போராட்டம் பெரிதும் கவனிக்கப்பட்டது.
  • “காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் புதைபடிவ எரிபொருள்களிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், ‘புதைபடிவ எரிபொருள்களிலிருந்து விலகிச்செல்வது’ என்ற முடிவை எடுக்கவே 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. “புதைபடிவ எரிபொருள்களைக் கைவிடுவது பற்றிப் பேச முடியவில்லை. பல ஆண்டுகளாக அதற்கு எதிர்ப்பு இருந்தது” என்று குட்டர்ஸ் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். மாநாட்டு அறிக்கையில் பல ஓட்டைகள் இருப்பதாகவும், அதை வைத்து உலக நாடுகள் தப்பித்துக்கொள்ளும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
  • இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், அவை முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அடுத்தடுத்த முடிவுகள் இன்னும் விரைவாக எடுக்கப்பட வேண்டும். அசர்பைஜானில் நடக்க இருக்கும் அடுத்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக எல்லா நாடுகளும் உமிழ்வுகளைப் பெருமளவில் குறைக்க வேண்டும். விரைவான செயல்பாட்டின் மூலமாக மட்டுமே ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2023)

889 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top