- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. சாலை விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் தொடர்வது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மார்ச் 12 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூரில், தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெயினர் லாரி மீது மோதியதில், பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.
- காயமடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறையினர் என்பது கவனிக்கத்தக்கது. நெடுஞ்சாலை ஓரம் கனரக வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்திவைப்பது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஓட்டுநர்கள் அறியாததல்ல. எனினும், இது பரவலாகக் காணப்படக்கூடிய விதிமீறலாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் ஏராளமான விபத்துகளும் நிகழ்கின்றன.
- மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, இந்தியாவில் சாலை விபத்துகளில் 6.3% உயிரிழப்புகள், டிரக்-லாரிகளால் ஏற்படுகின்றன. கார்கள், கனரக வாகனங்கள் உள்பட நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களின்மீது மோதியதால் 3.2% விபத்துகள் நேர்ந்துள்ளன. 2022இல் டிரக்-லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 33,136 பேர் இறந்துள்ளனர்.
- கனரக வாகனங்கள் சென்னை போன்ற மாநகரங்களுக்குள் பகலில் நுழைவதற்குக் கட்டுப்பாடுகள் இருப்பதால், அவை புறநகரங்களில் காத்திருக்கின்றன. வாகனங்களை நிறுத்தி வைக்கும் மையங்களை லாரி ஓட்டுநர்கள் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் விபத்துக்கு வழிவகுக்கின்றன.
- பிப்ரவரியில் நடந்த ‘பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ’ நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டிரக், லாரி, பேருந்து, டாக்ஸி ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க நெடுஞ்சாலைகளில் 1,000 தங்கும் விடுதிகள் திறக்கப்படும் என்றார். நெடும்பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு இத்தகைய ஏற்பாடுகள் போதுமான ஓய்வை அளிக்கும்.
- விபத்து நிகழும்போது மட்டும், படிக்கட்டுப் பயணங்களால் நிகழும் ஆபத்துகள் பேசப்படுவதும் பின்னர் மறக்கப்படுவதுமான நிலை மாற வேண்டும். இதில் உறுதியான நடவடிக்கையை அரசு எடுத்தே ஆக வேண்டும். கல்லூரிகளும் பள்ளிகளும் உள்ள வழித்தடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவது அவசியம்.
- படிக்கட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதற்காகவே பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டன. அனைத்து அரசுப் பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளுக்கும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்படுவது கறாராகப் பின்பற்றப்பட வேண்டும். 70 பேருக்கு அதிகமான பயணிகளைப் பேருந்தில் ஏற்றிச்செல்லும் விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு உறுதி காட்டிய பிறகே, படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களுக்கான கடுமையான அறிவுறுத்தல்களில் நியாயம் இருக்கும்.
- இந்த விபத்து குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும், படிக்கட்டுப் பயணங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிடும்படியும் முறையீடு செய்யப்பட்டது. இக்கோரிக்கையை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்குக் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது.
- மதுராந்தகம் விபத்தில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் நிவாரண உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரண உதவியுடன் உறுதியான நடவடிக்கைகளும் அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 03 – 2024)