- பொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல் கிறதோ என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், நம்பிக்கையான வார்த்தைகளைத் தன்னுடைய சுதந்திர தின உரையின் மூலம் அளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரே தன்னுடைய உரையில் குறிப்பிட்டபடி, சாமானிய மக்கள் எப்போதும் ஒரு அரசிடம் நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சிமுறை, நல்ல முடிவுகளையே எதிர்பார்க்கின்றனர்.
- தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் இந்தியாவை இடம்பெறச் செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாகச் சொன்ன பிரதமர் மோடி, ‘வாழ்வது சுலபம்தான் என்ற நிலை சாமானியனுக்கு ஏற்பட வேண்டும்’ என்று தன் உரையில் குறிப்பிட்டார். இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமானவையாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு ஒரு நாட்டில் சாமானிய மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். இன்றைய சூழல், இந்த இரு விஷயங்களையுமே கடுமையானதாக்கிவருகிறது என்பதுதான் நாடு எதிர்கொள்ளும் பெரும் சிக்கல்.
பொருளாதாரம்
- பொருளாதாரத்தை முடுக்கிவிட மக்களுடைய பங்களிப்பை அரசு எதிர்பார்க்கிறது. ‘மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் மக்கள் விரோதிகள் அல்லர், செல்வத்தை உருவாக்குபவர்கள் என்று மக்கள் தம் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் விளைவதையும் உற்பத்தியாவதையும் முன்னுரிமை தந்து வாங்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் முதலில் இந்தியாவுக்குள்ளேயே 15 சுற்றுலாத்தலங்களை அடையாளம் கண்டு சென்றுவர வேண்டும்’ என்ற பிரதமரின் வேண்டுகோள்களை உதாரணங்களாகச் சொல்லலாம். இவையெல்லாம் உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஊக்கியாகச் செயல்படும் என்பதோடு, நீண்ட நோக்கில் நல்ல பலன்களையும் தரலாம். ஆனால், இத்தகு யோசனைகளால் மட்டும் இந்தியப் பொருளாதாரத்தை இன்று சூழ்ந்துகொண்டிருக்கும் கருமேகங்களைத் துரத்த முடியாது. அரசு தீர்க்கமான சில வழிமுறைகளைத் தொழில் துறையினருடன் கலந்து பேசி வகுக்க வேண்டும்.
- நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டங்களோ கொள்கைகளோ இல்லாததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கும் நிலையில், ‘2024-க்குள் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் என்ற அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை வளர்ப்பது சாத்தியம்தான்.
அறிக்கை
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் அடித்தளக் கட்டமைப்புகளுக்கு ரூ.100 லட்சம் கோடி படிப்படியாகச் செலவிடப்படும் என்று கூறியுள்ள பிரதமர், விரிவான செயல்திட்டத்தை வெளியிடவில்லை. இதுவரை அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதே பொருளாதாரம் வேகமாகச் சரிவதற்கு ஒரு காரணமாகிக்கொண்டிருக்கிறது.
- புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குள் இருந்த வேலைவாய்ப்புகளும் வேகமாகக் கரைந்துவருகின்றன என்கிற தொழில் துறையினரின் குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அரசின் இலக்கு நீண்ட காலத்தைப் பற்றியதாக இருக்கிறதே தவிர, பொருளாதார உலகில் மிகவும் முக்கியம் என்று கருதப்படும் குறுகிய காலத்துக்குப் பயன்படுவதாகத் தெரியவில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை(20-08-2019)