TNPSC Thervupettagam

நெட்பிளிக்ஸில் புதிய வசதி

December 30 , 2024 10 days 38 0

நெட்பிளிக்ஸில் புதிய வசதி

நெட்பிளிக்ஸில் புதிய வசதி:

  • இனி நெட்பிளிக்ஸில் நீங்கள் பார்த்து ரசிக்கும் திரைப்படம் அல்லது வலைத்தொடரிலிருந்து உங்களுக்குப் பிடித்த தருணங்களைச் சேமித்து நண்பர்களுடன் பகிரலாம். இதற்கான வசதியை மொமெண்ட்ஸ் (Moments) எனும் பெயரில் நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
  • முதலில் ஐபோன்களுக்கு அறிமுகமான வசதி, இப்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வருகிறது. நெட்பிளிக்ஸில் பார்த்துக்கொண்டிருக்கும் போது, உங்களைக் கவர்ந்த காட்சியின் தொடக்கத்தில் திரையின் கீழ் பகுதியில் கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை அணுகலாம். அதன்பிறகு இந்தக் காட்சி ‘மை நெட்பிளிக்ஸ் டேப்’ பக்கத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். பயனாளிகளே அதை மீண்டும் பார்த்து ரசிக்கலாம், பகிரலாம்.

சாட்பாட் புதிது!

  • இணைய யுகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பாரம்பரிய பதிப்பு நிறுவனங்களில் பிரிட்டானிகாவும் ஒன்றாக இருக்கலாம். இது பத்தாண்டுகளுக்கு முன் அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொண்டது. இப்போது ஏஐ யுகத்தில் பிரிட்டானிகா, சாட்பாட் வடிவில் உரையாடத் தயாராகி இருக்கிறது: https://www.britannica.com/chatbot. பிரிட்டானிகா இணையதளத்தின் வாயிலாக அணுகக்கூடிய இந்த சாட்பாட்டிடம் கேள்விகள் கேட்டு, களஞ்சியத் தொகுப்பில் இருந்து பதில் பெறலாம். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் அளிக்கும் பதில்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், வல்லுநர் குழுவால் சரி பார்க்கப்பட்ட தகவல்களைக் கொண்ட பிரிட்டானிகாவின் சாட்பாட் ஏற்றதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

விண்கலக் கைக்கடிகாரம்:

  • நிலவுக்கு மனிதர்களைக் கொண்டுசென்ற அப்பல்லோ விண்கலத்திலிருந்த கம்ப்யூட்டரைவிட, தற்காலத் திறன்பேசிகள் பல ஆயிரம் மடங்கு ஆற்றல்மிக்கவை எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அப்பல்லோ கம்ப்யூட்டரின் பெருமையை இது எந்த வகையிலும் குறைத்துவிடவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது ‘அப்பல்லோ இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ எனும் பிரிட்டன் நிறுவனம் ஒன்று, அப்பல்லோ விண்கல கம்ப்யூட்டரின் வடிவமைப்பையும், விசைப் பலகை அமைப்பையும், கைக்கடிகார வடிவில் கொண்டுவந்துள்ளது. டி.எஸ்.கே.ஒய். மூன்வாட்ச் எனக் குறிப்பிடப்படும் இந்தக் கடிகாரம், பழைய கம்ப்யூட்டர் இடைமுகத்தின் தோற்றத்தை அப்படியே கொண்டிருக்கிறது. இந்த நவீனக் கைக்கடிகாரத்தைக் கொண்டு விண்கலத்தை இயக்க முடியாது என்றாலும், வரலாற்றைக் கையில் அணிந்துகொண்டிருக்கும் உணர்வைப் பெறலாம்.- https://apollo-instruments.com/

திரையைத் திரும்பிப் பார்ப்போமா?

  • மாஷப் எனச் சொல்லப்படும் ஒட்டுவேலை ஆக்கங்கள் இணையத்தில் மிகப் பிரபலம். இத்தகைய ஒட்டுவேலை ஆக்கங்களைப் பலவிதங்களில் உருவாக்கலாம் என்றாலும், ஸ்லீப்பி ஸ்கங்க் (https://www.youtube.com/user/sleepyskunk) என்கிற யூடியூபர் இதை வேறு ஒரு கட்டத்துக்குக் கொண்டுசென்றுள்ளார். 2024 நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களின் முன்னோட்டத்தை எல்லாம் மாஷப் காணொளியாக உருவாக்கி யூடியூபில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டுத் திரைப்படங்களைத் திரும்பிப்பார்க்கும் உணர்வை அளிக்கும் இந்தக் காணொளி ரசிக்க வைக்கிறது. படத்தொகுப்புக் கலையில் தேர்ச்சிபெற்ற இந்த யூடியூபர், கடந்த பல ஆண்டுகளாக இப்படித் திரைப்படத் தொகுப்புகளை வழங்கிவருகிறார்.

எங்கிருந்தாலும் தேடலாம்:

  • வரும் 2025 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தேடு இயந்திரங்களுக்கான ஆண்டாக இருக்கலாம். எனில், முன்னணி ஏஐ தேடு இந்திரங்களில் ஒன்றான பெர்பிளெக்சிட்டி (https://www.pehttps://www.perplexity.ai/rplexity.ai/) தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கேற்ப பெர்பிளெக்சிட்டியும் புதிய வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது. அண்மையில், கார்பன் எனும் அமெரிக்க நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தியுள்ளது.
  • ஏஐ அமைப்புகளுடன் வெளியே உள்ள தரவுகளை இணைப்பதில் நிபுணத்துவம்மிக்க நிறுவனமாக கார்பன் விளங்குகிறது. இதன் நுட்பத்தை பெர்பிளெக்சிட்டி பெற்றிருப்பதால், இனி அதன் தரவுப் பட்டியலுக்கு வெளியே உள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் தேடல் வசதியை வழங்கும் ஆற்றலை அது பெறும். ஆக, ஏஐ தேடு இயந்திரமான பெர்பிளெக்சிட்டியில், கேள்வி பதில் பாணியில் தேடலாம். கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்பத் தேடலை நிகழ்த்தி, தேடல் முடிவுகளின் சாராம்சத்தை ஏஐ துணையோடு பதிலாகத் தொகுத்து சுருக்கமாக அளிக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories