TNPSC Thervupettagam

நெல் விவசாயிகளைத் தண்டிக்காதீர்கள்

January 17 , 2024 224 days 212 0
  • இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும், எல்லாப் பருவங்களிலும் பயிரிடப்படும் பெரும் பயிர் நெல். அறுபதுகளின் நடுப்பகுதியில் பசுமைப் புரட்சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, நெல் பயிரின் தன்மை உணவு தானியப் பயிரிலிருந்து பெரும் வணிகப் பயிராக மாறியுள்ளது.
  • ஏறக்குறைய 460 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், நெல் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், இந்தியாவின் பெரும்பான்மை விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. இருப்பினும், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி தடை, புழுங்கல் அரிசிக்கு விதிக்கப் பட்டுள்ள 20% ஏற்றுமதி வரி ஆகியவை நெல் சாகுபடியில் ஏற்கெனவே பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல் சாகுபடி செய்பவர்கள் லாபம் ஈட்டுகிறார்களா? அரிசி ஏற்றுமதித் தடையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டாமா?

நெல் சாகுபடியின் வளர்ச்சி

  • நெல் சாகுபடிப் பரப்பளவு 1950-51க்கும் 1960-61க்கும் இடையில் ஏறக்குறைய 330 லட்சம் ஹெக்டேராக இருந்தபோதிலும், பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு அதன் சாகுபடிப் பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளது. 1964-65இல் 350 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் பரப்பு, 2021-22இல் 460 லட்சம் ஹெக்டேராக (31%) அதிகரித்துள்ளது.
  • பரப்பளவு அதிகரிப்புடன், மொத்த உணவு தானியப் பரப்பில் நெல்லின் பங்கும் இதே காலகட்டத்தில் சுமார் 31%லிருந்து 36%ஆக அதிகரித்துள்ளது. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க காலத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்ததாலும், நீர்ப்பாசனப் பகுதியில் வீரிய விதை, வேதி உரங்களை அதிகளவு பயன்படுத்தியதாலும், நெல் மகசூல் - மொத்த உற்பத்தி கடுமையாக அதிகரித்தது.
  • ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் நெல் மகசூல் 1,078 கிலோவிலிருந்து 2,809 கிலோவாக அதிகரித்த அதேவேளை, நெல்லின் மொத்த உற்பத்தியானது இக்காலகட்டத்தில் சுமார் 390 லட்சம் டன்னிலிருந்து 1,300 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 2021-22இல் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லின் பங்களிப்பு மட்டும் 41%.
  • பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) அறிவிப்பு, பல்வேறு மாநிலங்களில் அதன் சாகுபடிப் பரப்பளவை மாற்றியுள்ளது. பாரம்பரியமாக மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பிஹார், அசாம் போன்ற மாநிலங்களில் நெல் பெருமளவில் பயிரிடப்பட்டது.
  • இன்று இருப்பதுபோல, அறுபது-எழுபதுகளில் நெல் சாகுபடியில் பஞ்சாப் முக்கிய மாநிலமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், பஞ்சாபில் 1966-67இல் வெறும் 2.85 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டுவந்த நெல், 2021-22இல் 29.78 லட்சம் ஹெக்டேராக, 10 மடங்கு அதிகரித்துள்ளது.
  • சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் எந்தப் பயிரிலும், எந்த மாநிலத்திலும் இத்தகைய சாகுபடிப் பரப்பளவு அதிகரிப்பு பதிவாகவில்லை. எது எப்படி இருப்பினும், 2021-22இல் மேற்கண்ட மாநிலங்கள், இந்தியாவின் மொத்த நெல் பரப்பில் 77%-ஐக் கொண்டுள்ளன.

சுருங்கும் லாபம்

  •  நெல் விவசாயிகள் அதன் சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டுகிறார்கள் என்ற எண்ணம் கொள்கை வகுப்பாளர்கள், சில பொருளாதார வல்லுநர்களிடையே நிலவுகிறது. இது சரியா? நெல் விவசாயிகளின் பரிதாபகரமான நிலையைக் காட்ட, விவசாயச் செலவுகள்-விலைகளுக்கான ஆணையம் (CACP) வெளியிட்டுள்ள சாகுபடிச் செலவுத் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் அதிகமாக விளையும் வடக்குப் பிராந்தியத்திலிருந்து இரண்டு மாநிலங்களையும் (பஞ்சாப், உத்தரப் பிரதேசம்) கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இரண்டு மாநிலங்களையும் (ஒடிஷா, மேற்கு வங்கம்), தெற்குப் பிராந்தியத்திலிருந்து இரண்டு மாநிலங்களை (ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு) உள்ளடக்கி ஒரு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவில் உள்ள பல பொருளாதார வல்லுநர்கள், விவசாயிகளின் மொத்தச் செலவைக் கணக்கில் கொள்ளாத A2 செலவுக் காரணியைப் பயன்படுத்தி பயிர்களுக்கான லாபத்தைக் கணக்கிடுகின்றார்கள். அது முற்றிலும் தவறு. பயிர் சாகுபடிக்காக விவசாயிகளால் செய்யப்படும் அனைத்து செலுத்தப்பட்ட செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பு (imputed cost of family labour), நிலத்துக்கான வாடகை, முதலீட்டின் தேய்மான மதிப்பு ஆகியவை அடங்கிய C2 செலவுக் காரணியைக் கொண்டு பயிர்களின் லாபத்தைக் கணக்கிட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.
  • இதன்படி செய்யப்பட்ட கணக்கீட்டில், பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நெல் பயிரிடும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர் அல்லது மிகக் குறைந்த லாபத்தைப் பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடியின் லாபம் 1975-76இல் ரூ.474லிருந்து 2020-21இல் ரூ.42,686ஆக உயர்ந்துள்ளது. ஆனால், நெல் விளையும் முக்கியமான ஆறு மாநிலங்களின் சராசரி கணக்கீட்டின்படி, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு ஹெக்டேருக்கு ரூ.65லிருந்து ரூ.2,256ஆக இக்காலத்தில் அதிகரித்துள்ளது.
  • அதிர்ச்சியூட்டும் வகையில், 1971-72 முதல் 2020-21 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, தரவுகள் கிடைக்கப்பெற்ற 34 ஆண்டுகளில், 24 முறை மட்டுமே தமிழக நெல் விவசாயிகள் ஓரளவு லாபம் ஈட்டியுள்ளார்கள். இதேபோன்ற போக்கு மற்ற மாநிலங்களிலும் நிலவியுள்ளது.
  • விளைச்சல் பெருமளவு அதிகரித்துள்ள போதிலும் நெல் சாகுபடியில் விவசாயிகளால் ஏன் லாபம் ஈட்ட முடியவில்லை? ஒன்று, வேலை ஆட்களுக்கான கூலி, உரம், விதை போன்ற இடுபொருட்களின் விலையின் விரைவான அதிகரிப்பு காரணமாக, ஒரு ஹெக்டேருக்கான சாகுபடிச் செலவு, நெல்லிலிருந்து பெறப்பட்ட உற்பத்தி மதிப்பைவிட மிக வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளால் லாபத்தையும் அறுவடை செய்ய முடியவில்லை.
  • உதாரணமாக, நெல் பயிரிடும் ஆறு மாநிலங்களின் சராசரிக் கணக்கின்படி, 1971-72க்கும் 2020-21க்கும் இடையில், C2 சாகுபடிச் செலவு 65 மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால், அதேவேளை நெல் உற்பத்தியின் மதிப்பு 59 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது; இரண்டு, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு நெல்லுக்கான எம்எஸ்பியைக் கணிசமாக உயர்த்தியிருந்தாலும், அரசு முகமைகளின் மோசமான கொள்முதல் காரணமாக, விவசாயிகளால் எம்எஸ்பியை முழுமையாகப் பெற முடியவில்லை.
  • பஞ்சாப் தவிர, மற்ற விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெரும்பாலும் சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு நெல்லின் விலை எம்எஸ்பியைவிட எப்போதும் மிகவும் குறைவாக உள்ளது. இதனை CACPஆல் வெளியிடப்பட்ட தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
  • இந்தியாவில் நெல் சாகுபடி பெரும்பாலான விவசாயிகளுக்கு லாபகரமாக இல்லை என்பதைத் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதித் தடை, சந்தை விலையைக் குறைத்து, நெல் விவசாயிகளுக்கு மேலும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • இந்தியா போன்ற நீர்ப் பற்றாக்குறை அதிகம் உள்ள நாடுகளில், நீர் அதிகம் தேவைப்படும் நெல் பயிரை அதிகமாகச் சாகுபடி செய்வது விரும்பத்தகாதது என்றாலும், மாற்று ஏற்பாடுகள் செய்யும்வரை, நெல் விவசாயிகளைக் காக்கவேண்டும். எனவே, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு, நெல்லின் சர்வதேச சந்தை விலையைக் கணக்கில் கொண்டு அரசு தற்காலிக இழப்பீடு வழங்க வேண்டும்.
  • அல்லது, ஏற்றுமதித் தடை விதிக்கப்படும்போது, அரசு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நெல் கொள்முதல் அளவை அதிகரித்து, எம்எஸ்பியின் முழுப் பயனை விவசாயிகள் பெற வழி செய்யவேண்டும். வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான தெளிவான கொள்கைகளை மத்திய அரசு உருவாக்காவிட்டால், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது கடினம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories