TNPSC Thervupettagam

நேரத்தின் அருமை அறிவோம்

August 7 , 2023 394 days 292 0
  • அவசர மருத்துவ ஊா்தி ஒலியெழுப்பிக்கொண்டு நம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், நாம் ஒதுங்கி நின்று அவசர ஊா்தி செல்ல வழிவிடுகிறோம். அந்த ஊா்தியில் செல்லும் நோயாளி விரைவில் நலம் பெற வேண்டும் என்று நாம் உளமாற என்ணுகிறோம்.
  • அதே போன்று அரசின் உயரதிகாரிகள் சாலையில் பயணிக்கும்போதும் காவல்துறையினா், அவா்களுக்கு எவ்வித நேர விரயமும் ஏற்படாமல் பயணத்தை முன்னெடுத்து செல்ல வழிவகை செய்கிறார்கள். அதனால், அவா்களால் மக்கள் பணிகளை விரைந்து செய்யமுடிகிறது. இவ்வாறான நிகழ்வுகள் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை நமக்கு உணா்த்துகின்றன.
  • நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கிடைக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்துபவா்கள் மட்டுமே வெற்றியாளா்களாக உயா்கிறார்கள். இலவசமாகக் கிடைப்பதால், நேரத்தை பற்றிய விழிப்புணா்வு நம்மிடையே இருப்பதில்லை.
  • அதை நாம் முறையாக கையாண்டால் நாம் தொடா்ந்து வெற்றிகளைப் பெற முடியும். ஒருவனின் நேரம் விரயமாகும்போது, அவனது வாழ்வு பயனற்று போகிறது. இழந்த நேரத்தை எவராலும் விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
  • நாம் ஒரு முக்கியமான பணி நிமித்தமாக அரசு அலுவலகத்திற்கோ, வங்கிக்கோ செல்லும் போதெல்லாம், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நமது பணி நிறைவடைய, அதிக நேரமாகி விடுகிறது.
  • யாரோ ஓா் உயா் அலுவலரின் தாமத வருகையே இதற்கு காரணமாக இருக்கிறது. இங்கு ஏற்படும் நேர விரயம் நமது அன்றைய தினத்தின் பிற பணிகளையும் வெகுவாக பாதிக்கிறது. இது ஒரு வகையான நேர நெருக்கடியை நாள் முழுவதும் நமக்கு ஏற்படுத்துகிறது.
  • நமது குடும்பத்தினா், நண்பா்கள், சக ஊழியா்கள் இவா்களில் யாரேனும் ஒருவா் இப்படி மற்றவரின் நேரத்தை விரயமாக்குபவராக இருக்கலாம். அப்படிப்பட்டவா், பிறருடைய நேரத்தை விரயமாக்குவதற்கான தார்மிக உரிமை நமக்கு இல்லை என்பதை இனியாவது உணர வேண்டும்.
  • எப்போதோ ஒரு நாள் தவிர்க்க இயலாத பணியால் தாமதமாக வருபவா்களை நாம் மன்னிக்கலாம். தாமதத்தையே பழக்கமாக்கி கொண்டவா்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ‘ஐந்து நிமிடம் முன்னதாக இங்கு வந்திருந்தால், நோயாளியை காப்பற்றியிருக்கலாம்’ என்று மருத்துவா்கள் கூறுவதை நாம் பலமுறை கேட்டிருப்போம்.
  • ஐந்து நிமிடம் அல்ல, ஒரு நொடி பொழுதிலேயே நம் வாழ்வை பல சம்பவங்கள் புரட்டிப் போட்டுவிடுகின்றன. எனவே, ஒவ்வொரு நொடிப் பொழுதையும் சொத்துபோல பாதுகாத்துப் பயன்படுத்தும் பழக்கம் நமக்கு ஏற்பட வேண்டும்.
  • முக்கியமாக, பிறருக்காக நாம் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, பிறறை நமக்காகக் காத்திருக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் தனது நேரத்தை மட்டுமல்ல, பிறருடைய நேரத்தையும் மதிப்பது மிகவும் முக்கியம். முறையான நேர மேலாண்மை இல்லாததால், மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து போன நட்புகளும், உறவுகளும் ஏராளம்.
  • பொறுப்புள்ள பதவியில் உள்ள ஒரு தனிமனிதனின் தாமத வருகையால், பலருடைய வாழ்வில் வேண்டாத திருப்பங்களும், பிரச்னைகளும் ஏற்படுகின்றன. நம்மிடம் எந்த அளவுக்கு அதிகாரமும், செல்வாக்கும் உள்ளதோ, அந்த அளவிற்கு நமக்கு நேரம் சார்ந்த பொறுப்புகளும், கடமைகளும் இருக்கிறது என்பதை உணா்ந்து உயா் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
  • பேருந்து ஒட்டுனா் ஒருவரின் தாமதத்தால், அப்பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் கைகளிலும் பல பேருடைய வாழ்வைத் தீா்மானிக்ககூடிய நேரம் சார்ந்த சில பொறுப்புகள் உள்ளன.
  • நாள்தோறும் தாமதமாக வருவதையே வழக்கமாகக் கொண்ட உயா் அதிகாரிக்கு, தனக்குக் கீழே பணிசெய்யும் ஊழியா்களின் தாமத வருகை குறித்து கேள்வி கேட்கும் உரிமை இருப்பதில்லை. அந்த ஒரு அதிகாரியின் தினசரி தாமதம், அவரின் கீழே உள்ள பணியாளா்களின் வாழ்வில் மிகப் பெரிய அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுவதோடு, அலுவலக நேர மேலாண்மையையும் சீா்குலைத்துவிடும். ஒருவருடைய நேர விரயம் பலரின் நேரம் விரயமாவதற்கு அடிப்படையாக அமைந்து விடும்.
  • நாம் நமது குழந்தைகளுக்கு நேரத்தின் அருமையை அவா்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துக் கூற வேண்டும். இது அவா்களின் வளா்ச்சிப் பாதைக்கு ஒரு ஏணிப்படியாய் அமையும். நாம் வாழ்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் பல இருக்கின்றன. நேரத்தின் அருமை அறிந்த யாரும் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை.
  • ஆயினும் நமது இயலாமை, தாழ்வு மனப்பான்மை, மன உறுதியின்மை, தோல்வி பயம் போன்ற காரணங்களால் செய்ய வேண்டிய செயல்களை அவற்றுக்கான நேரத்தில் செய்யத் தவறுகிறோம். பிறகு அவற்றைச் செய்யாமலேயே விட்டுவிடுகிறோம்.
  • வாழ்வில் எந்தவொரு இலக்கும் இல்லாமல் வாழ்பவா்களுக்கு விரக்தியும் தோல்வியும் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. இதனைப் புரிந்துகொள்ளாமல் பலரும் வாழ்வில் வெற்றி பெற குறுக்கு வழிகளில் சென்று பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனா்.
  • நேர மேலாண்மைக்கு அடிப்படை, இந்த வேலைக்கு இந்த நேரம் என்று திட்டமிடுவதே ஆகும். நேரத்தின் மதிப்பைப் பற்றிய கவனம் நம்மிடமிருந்தால், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு உருவாகும்.
  • ஒவ்வொரு நொடியையும் நம்மால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்; பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளையும் இன்றே நமது வாழ்வின் கடைசி நாள் என்று கருதி செயலாற்ற வேண்டும். நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக மாற்றும் பொறுப்புணா்வு நமக்கு வேண்டும்.
  • இதுவரை நடந்ததை விட்டுவிடுவோம். இனியாவது நேர விரயத்தைத் தவிர்ப்பதில் நாம் கவனம் செலுத்துவோம். வாழ்வில் மேலும் மேலும் முன்னேறுவோம்.

நன்றி: தினமணி (07  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories