- மக்களவைத் தேர்தல் தொடர்பாக இப்போதே பாதுகாப்பான ஓர் எச்சரிக்கை: ‘சுதந்திர இந்தியாவில் நடைபெறும் 2024 தேர்தல், நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்காது’.
- இந்தத் தேர்தலில் பல நடைமுறைகள் மாற்றப்பட்டு ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப நடத்தப்படுமா அல்லது முழுக்கவே கேலிக்கூத்தாகிவிடுமா என்பது இப்போதைக்குத் தெரியாது.
- தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட விவகாரத்திலிருந்து, ‘நம்பத்தகுந்த தேர்தல்’ என்ற நிலையிலிருந்து மாறிவிடும் என்பதற்கான ஆரம்பம் தெரிந்துவிட்டது. பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தைப் போலவோ அல்லது தொலைவிலிருக்கும் ரஷ்யாவைப் போலவோ தேர்தல் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கும் திசையில் ஓட்டி நடக்கத் தொடங்கியிருக்கிறோம்.
- இப்படி எழுத மிகுந்த வேதனைப்படுகிறேன். இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு என்னை நானே தூதுவனாகக் கருதி உலக அரங்கில் பேசியிருக்கிறேன். மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பாவை மையமாக வைத்த அவற்றின் தரக் குறியீடுகளையும் எதிர்கொண்டு பேசியபோது இந்தியத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதாக வாதிட்டது அல்லாமல் கொண்டாடியும் இருக்கிறேன்.
- முதலாவது மக்களவைத் தேர்தலை 1951-52இல் நடத்திய ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது உலகின் பிற நாடுகளிலிருந்து வந்த தேர்தல் ஆணையர்களிடையே உரையாற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் 2002இல் என்னை அழைத்திருந்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வலிமையையும், தேர்தலில் கட்சிகள் நிகழ்த்தும் போட்டியையும், கோடிக்கணக்கான மக்களை எளிதாக வாக்களிக்க வைக்கும் நிர்வாக ஆற்றலையும் விளக்கிப் பெருமிதம் பொங்கப் பேசினேன்.
- அவையெல்லாம் இப்போது என் மனசாட்சியை உறுத்துகின்றன. நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறாமல் போவது, இந்தியாவில் இது முதல் முறையும் அல்ல. இந்தியாவின் நெடும்பயணத்தில், தேர்தல் முறைகேடுகள் என்ற கரும்புள்ளி அவ்வப்போது தோன்றியுள்ளன. ஆனால், அவையெல்லாம் மாநில அளவில் அல்லது சில தொகுதிகளில் மட்டும் நடந்தவை. தேசிய அளவில் அப்படி இதுவரை நடந்ததில்லை.
- வங்கத்தில் 1972இல் நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல், அசாமில் 1983இல் நடந்த பேரவைத் தேர்தல், பஞ்சாபில் 1992இல் நடந்த பேரவைத் தேர்தல் போன்றவை, ‘நம்பகமான தேர்தல்’ என்பதற்கான குறைந்தபட்ச வரம்புகளைக்கூட மீறியவை.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்கள் (1977, 2002 விதிவிலக்கு) மோசடியானவைதான். 1987இல் நடந்தது மிகவும் அவமானகரமான தேர்தல்.
- இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலைக்குப் பிறகு நடந்த 1977 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரம், வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுவது எல்லாமே முறையாக நடந்தன. தேர்தல் முடிவே அதற்கு சாட்சி (காங்கிரஸ் தோற்றது, எதிர்க்கட்சி ஜனதா வென்று ஆட்சியைப் பிடித்தது). 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவிடம் தொண்டர் பலம், பண பலம், ஊடக ஆதரவு பலம், அரசு நிர்வாக இயந்திர பலம், தேர்தல் ஆணையத்தின் அனுசரணை என்று எல்லாமே இருந்தும் - கட்சி சார்பான பெரிய செயல்பாட்டுக்கு, அது இடம் தரவில்லை.
தொடர்ச்சியான வீழ்ச்சி
- அந்த வரம்புகள் அனைத்துமே இந்த முறை மீறப்படுகின்றன. இந்தக் கட்டுரையை நான் எழுதும் நேரத்தில் தில்லியில் அமல்பிரிவு இயக்குநரக அதிகாரிகள் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆஆக பிரமுகரின் வீட்டுக்குச் சோதனைக்காகப் போகிறார்கள். பத்திரிகைகளைப் புரட்டி, தலைப்புகளை மட்டும் பார்க்கிறேன். வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தொடர்ந்த வழக்கில், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் கே.கவிதா கைதுசெய்யப்பட்டார்; கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆஆக தொண்டர்கள் தில்லியில் போராட்டம்; இமாச்சலத்தில் ஆளும் காங்கிரஸைச் சேர்ந்த 6 பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு - பாஜகவில் சேர்ந்தனர்; காங்கிரஸ் கட்சியை முடக்கும் அளவுக்கு, வருமான வரித் துறை மிகப் பெரிய தொகையை அபராதமாக விதிக்கிறது; ‘கொள்கை ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்புக்கு அரசு அளித்த உரிமம் ரத்துசெய்யப்பட்டதால் அதன் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து யாமினி ஐயர் விடுவிக்கப்படுகிறார் – அன்னிய நாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டப்படி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, வரி செலுத்துமாறு அதற்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது; நடிகை கங்கணா ரணாவத் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடேவுக்கு எதிராக நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழுகின்றன – அதுவும் அவர் மன்னிப்பு கேட்ட பிறகும்; வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த திலீப் கோஷுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கண்டனங்கள்.
- அடுத்த நாள் காலை வாட்ஸப்பில் மேலும் பல தகவல்கள்: சிவசேனை (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே - யுபிடி) சார்பில் காலை 9 மணிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார்; காலை 10 மணிக்கு அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய விசாரணை தொடர்பாக அமல்பிரிவு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்புகிறது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, அரசியல் நிகழ்ச்சிகளை ‘டேன்ஸ் ஆஃப் டெமாக்ரசி’ என்று தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.
- அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்களைக் கூறுவதும், பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளும் வலிமையான ஆதாரங்கள் இல்லைதான்; ஜனநாயகம் – தேர்தல் உதவிகள் தொடர்பாக சர்வதேச நிறுவனம் (ஐஐடிஇஏ) 173 நாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் தேர்தல், அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை மதிப்பிடுகிறது. 2014 முதல் 2022 வரையில் இந்தியாவின் மதிப்பெண் 71%லிருந்து 60% ஆக சரிந்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் மோசமான நாடுகள் வரிசையில் 50வது இடத்திலிருந்து 66வது இடத்துக்குக் கீழிறங்கிவிட்டது.
- இதை மேற்கத்திய நாடுகளின் சதி என்று கூறக்கூடும். அதன் இணையதளத்தைப் பார்த்தால் அந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் என்பதும் அதன் நிர்வாகக் குழுவில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோராவும் இருக்கிறார் என்பதும் தெரியும். நேர்மையான தேர்தல் குறியீட்டெண் என்ற இன்னொரு சர்வதேச மதிப்பீட்டில், இந்தியாவுக்கு 59% மதிப்பெண்தான் தரப்பட்டுள்ளது. அத்துடன் மஞ்சள் நிற எல்லையில் இந்தியா இருக்கிறது. பிரேசில், கானா, நேபாளத்துக்குக் கீழே இருப்பது ஆறுதல்.
- இப்படியே போனால் 2024 தேர்தலுக்குப் பிறகு ஆரஞ்சு வண்ணம் இந்தியாவுக்குத் தரப்படலாம். ‘இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடு அல்ல - தேர்தல் ஜனநாயக நாடு மட்டுமே’ என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். அந்த முடிவையும் அவர்கள் விரைவில் மாற்றிக்கொண்டுவிடக்கூடும். ரஷ்யாவில் நடந்ததைப் போல கேலிக்கூத்தோ, பாகிஸ்தானில் நடந்ததைப் போல மோசடியோ அல்ல என்றாலும் – ‘மோசமான ஜனநாயக நாடு’ என்ற நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். நியாயமாக தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையை இழக்கும் வகையில், சுற்றி வளைப்புகள் தொடங்கியுள்ளன. இது தொடர்ந்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தை அமுக்கும் சுதந்திரமும், வாக்குகளை எண்ணுவதில் நேர்மையும் மட்டும் நிகழலாம்.
நன்றி: அருஞ்சொல் (30 – 03 – 2024)