- மக்களவையில் ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா நிறைவேறியிருக்கிறது. இதன்மூலம், 42 மத்திய அரசு சட்டங்களில் காணப்படும் சுமார் 180 சிறு குற்றங்கள் கிரிமினல் குற்றப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. மருந்து தயாரிப்பு, ஊடகங்கள், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தொடா்பானவை அவை. முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்தக் குற்றங்கள் இப்போது அபராதம் விதிக்கும் குற்றங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
- தேவையில்லாத பல சட்டங்களும், சிறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனையும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியால் விதிக்கப்பட்டது என்னவோ உண்மை. காலத்துக்கு ஏற்ப சட்டங்களிலும், விதிகளிலும் மாற்றம் ஏற்படுத்துவதும், இன்றைய நடைமுறைக்குப் பொருந்தாதவை அகற்றப் படுவதும் அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
- நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் காலாவதியான பல சட்டங்கள் அகற்றப் பட்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் ‘ஜன் விஷ்வாஸ் (திருத்த) மசோதா 2022’ இணைக்கப்படக் கூடாது. நடைமுறையில் இருக்கும் அத்தியாவசியமான பல சட்டங்களும் விதிகளும் மாற்றப் பட்டு கிரிமினல் குற்றங்கள் அபராத குற்றங்களாக இதன்மூலம் மாற்றப்படுகின்றன, அவ்வளவே.
- இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பல்வேறு விமா்சனங்களுக்கும், சமூக ஊடக விவாதங்களுக்கும் உள்ளானது. குறிப்பாக டிரக்ஸ் - காஸ்மெட்டிக் ஆக்ட் 1940 (மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940) குறித்த சில திருத்தங்கள் சமூக ஆா்வலா்களின் எதிா்ப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. போலி, கலப்பட மருந்துகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் முன்பு போலவே கிரிமினல் தண்டனைக்குரிய குற்றங்களாக தொடரும். ஆனால் அவற்றுடன் தொடா்புடைய இரண்டு குற்றங்கள் மட்டும் கிரிமினல் தண்டனையிலிருந்து விலக்கப் படுகின்றன.
- சிறு குறைபாடுகள் மட்டுமே கிரிமினல் குற்றத்திலிருந்து அகற்றப்படுகிறதே தவிர, உரிமம் இல்லாமல் தயாரிப்பு, போலி தயாரிப்புகள், கலப்படத் தயாரிப்புகள் ஆகியவை முன்பு போலவே இரண்டாண்டு சிறைத் தண்டனை குற்றமாகவே தொடரும்.
- மருந்துகளில், அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள்; என்எஸ்க்யூ (நாட் ஆஃப் ஸ்டாண்டா்ட் குவாலிட்டி) என்று பரவலாக அழைக்கப் படும் தரத்தில் குறைபாடு ஆகியவை குறித்த இரண்டு குற்றங்களின் கிரிமினல் தன்மை அகற்றப்படுகிறது.
- மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு நிறுவனம் 2008-இல் ‘என்எஸ்க்யூ’ விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. விசாரணை அதிகாரிகளின் முடிவின்படி தரக்குறைவு குறித்த சிறு குறைபாடுகள் அபராதத்துடன் விடுவிக்கப்படலாம் என்கிறது புதிய திருத்தம். இதன்மூலம் புதிதாக மருந்துத் தயாரிப்பில் ஈடுபட எத்தனிக்கும் தொழில்முனைவோா், கைது செய்யப் படும் அச்சமில்லாமல் பாதுகாக்கப்படுவார்கள்.
- ‘என்எஸ்க்யூ’ பல குறைபாடுகளையும் சிறு தவறுகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, உடைந்த மாத்திரைகள் கொண்ட அட்டைகள், லேபிளில் காணப்படும் தெளிவில்லாத அச்சு அல்லது எழுத்துப் பிழைகள் போன்றவை கிரிமினல் குற்றங்களாகக் கருதப்பட்டன. 2008 வழிமுறைப் படி நீண்ட விசாரணை முறை கையாளப்பட்டு பல நிகழ்வுகளில் தண்டனை வழங்கப் பட்டிருக்கின்றன. தண்டனைக்கு பயந்து பல உண்மையான தயாரிப்பாளா்கள் தொழிலிலிருந்து விலகியிருக்கின்றனா். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்போது பிரிவு-27டியின் கீழுள்ள சில குறைபாடுள்ள கிரிமினல் குற்றத்திலிருந்து அகற்றப் பட்டிருக்கின்றன.
- தேசிய மருந்து பொருள்கள் கணக்கெடுப்பு 2014-16, மத்திய சுகாதார அமைச்சகத்தால் நடத்தப் பட்டது. அதன்படி, சில்லறை விற்பனையளவில் 3% மருந்துகள் தரக்குறைவு கொண்டவையாக இருந்தன. அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ‘என்எஸ்க்யூ’ அளவு 10% என்று அந்த ஆய்வு தெரிவித்தது. இந்தியாவின் மொத்த மருந்து விநியோகத்தின் அடிப்படையில் 3% என்பது மிகப்பெரிய அளவல்ல. 10% என்பது அந்தந்த மாநில அரசுகளின் கண்காணிப்பு குறைவு காரணமாகவும், ஊழல் காரணமாகவும் ஏற்படுபவை. ஆகவே, ‘என்எஸ்க்யூ’ அடிப்படையில் சிறு குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாக கருதப்படுவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.
- அதேநேரத்தில், சில முக்கியமான மருந்துகளில் தரக்குறைவோ, போலியோ, கலப்படமோ அனுமதிக்கப் படக்கூடாது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஜன் விஷ்வாஸ் (திருத்த) மசோதாவும் அதில் தெளிவாகவே இருக்கிறது. எரித்ரோமைசின் (29%), ஜென்டாமைசின் (21%), அமிக்காசின் (19.5%), ஓஆா்எஸ் (12%), பேன்டாபிரசோல் (11%) உள்ளிட்டவற்றில் அதிக அளவில் தரக்குறைவு, போலி, கலப்படம் ஆகியவை காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்களுக்கான சொட்டு மருந்துகளிலும் போலிகள் அதிகம்.
- இவைபோன்ற மருந்துகளில் எந்தவிதமான விதிமுறைத் தளா்வுகளும் இருந்துவிடக்கூடாது. மருந்துத் தயாரிப்பில் தரக்கட்டுப்பாடும், அதேநேரத்தில் தேவையற்ற தலையீடுகள் இல்லாமையும் அவசியம். ஜன் விஷ்வாஸ் மசோதா அதற்கு வழிகோலுகிறது.
- ஒருபுறம் ஜன் விஷ்வாஸ் சட்டம் தேவைதான் என்றாலும், அதேநேரத்தில் மருந்துத் தயாரிப்பு அல்லாத சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று மாசுக்கட்டுப்பாடு சட்டம் 1981, இந்திய வனச்சட்டம் 1927 ஆகியவற்றின் சில பிரிவுகளை கிரிமினல் குற்றத்திலிருந்து அபராதக் குற்றங்களாக மாற்றியிருப்பதை ஏற்க முடியவில்லை. குற்றத்தைக் கண்டுபிடிக்கும் அதிகாரிகளே அபராதம் விதிக்கும் அதிகாரம் பெற்றவா்களாக இருக்கும் விசித்திரம் ஊழலுக்கு வழிவகுக்கும்.
நன்றி: தினமணி (11 – 08 – 2023)