- அபிஜித் பானர்ஜி அவரது மேல்நாட்டு சகாக்களுடன் இணைந்து ஏழ்மையை எதிர்த்துப் போராடுவதற்கு முன்மொழிந்த அணுகுமுறைகளுக்காக, பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெறுகிறார். ஓர் இந்தியர் நோபல் பரிசு பெறுவது பெருமைக்குரியதுதான்.
- மும்பையில் பிறந்த அபிஜித் பானர்ஜி கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியிலும் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படித்தவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்.
- ஹார்வர்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர். இப்போது மாசசூஸிட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றுகிறார். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைக் குறித்தே அவரது ஆராய்ச்சிகள் மையம் கொண்டிருந்தன. எனினும், அவை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்தான் மேற்கொள்ளப்பட்டன.
- இந்தியர்கள் நோபல் பரிசு பெறுவது குறிஞ்சி மலர்வதைப் போலத்தான் நிகழ்கிறது. இதில் அறிவியல் துறைகளில் பரிசு பெற்றவர்கள் பானர்ஜியைப் போல மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுசெய்தார்களா அல்லது இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுசெய்தார்களா என்று திரும்பிப் பார்ப்பது நமது பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்துகொள்ள உதவும்.
வெளிநாடு கிளம்பும் ஆளுமைகள்
- 2009-ல் வேதியியலில் நோபல் பெற்ற வி.ராமகிருஷ்ணனும் 1983-ல் இயற்பியலில் நோபல் பெற்ற எஸ்.சந்திரசேகரும் தமிழர்கள். முன்னவர் பரோடாவிலும், பின்னவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தார்கள். ஒருவர் ஓஹியோ பல்கலைக்கழகத்துக்கும், அடுத்தவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் மேற்படிப்புக்குச் சென்றார்கள்.
- பிற்பாடு அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் அனைத்துக்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களே களம் அமைத்துத் தந்தன. 1998-ல் நோபல் பெற்ற அமர்த்திய சென் உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்.
- இவரும் அபிஜித் பானர்ஜியைப் போலவே கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்தவர். மேற்படிப்பையும் ஆய்வையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். சில காலம் கொல்கத்தாவிலும் டெல்லியிலும் பயிற்றுவித்த பிறகு, 1971 முதல் அமெரிக்க, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில்தான் பணியாற்றிவருகிறார்; அங்கேதான் தன் ஆய்வுகளையும் மேற்கொண்டுவருகிறார்.
- 1968-ல் மருத்துவத் துறையில் நோபல் பெற்ற ஹர் கோவிந்த் குரானா லாகூரிலிருந்து லிவர்பூல் போனார். 1948-ல் பிஹெச்டி பட்டம் பெற்றார். 1949-ல் இந்தியா திரும்பினார். அவருக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. 1950-ல் கேம்பிரிட்ஜ் அழைத்தது. பிறகு, அவர் இந்தியா திரும்பவேயில்லை.
- 1930-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் நோபல் பெற்ற இன்னொரு தமிழரான சி.வி.ராமன் விதிவிலக்காகத் தனது ஆய்வுகளை இந்தியாவிலேயே நிகழ்த்தியிருக்கிறார். ஆக, இதுவரை ஒன்பது இந்தியர்கள் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். இதில் அறிவியல் துறைகளின் கீழ் ஆறு பேர்.
- இவர்களில் சி.வி.ராமன் நீங்கலாக மற்ற அனைவரின் ஆய்வுகளும் மேலை நாடுகளில்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. ஏன் இந்தியப் பல்கலைக்கழகங்களில் உலகத் தரமான ஆய்வுகளை நடத்த முடியாதா?
- இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் 49, மாநில அரசுகளின்கீழ் 367, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 123, தனியார் வசம் 282; ஆக, 821 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சர்வதேசப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது இவை எங்கே நிற்கின்றன? 86 நாடுகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தியிருக்கிறது ‘க்யூஎஸ்’ என்கிற கல்வி நிறுவனம்.
- இதில் அமெரிக்காவின் மாசசூஸிட்ஸ், ஸ்டான்போர்டு, ஹார்வர்டு, பிரின்ஸ்டன் முதலானவையும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, இம்பீரியல் முதலானவையும் முதல் பத்து இடங்களுக்குப் போட்டியிடுகின்றன.
- சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்கள் 11-ம் இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. ஹாங்காங்கும் சீனாவும் முதல் 25 இடங்களுக்குள் தலா ஓரிடமும் பெறுகின்றன.
இந்தியா எங்கே இருக்கிறது?
- சுதந்திர இந்தியாவை அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்காகத் தொடங்கப்பட்ட ஐஐடிகளால்கூட முதல் 150 இடங்களில் ஒன்றைக்கூடப் பிடிக்க முடியவில்லை. பல்வேறு ஐஐடிகள் பெற்றிருக்கும் தரம் வருமாறு: மும்பை - 152, டெல்லி - 182, சென்னை - 271, கரக்பூர் - 281, கான்பூர் - 291, ரூர்க்கி - 383. இவை தவிர, ஐநூறாவது இடத்திலிருந்து ஆயிரமாவது இடத்துக்குள் 15 பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன. இதில் இரண்டு தமிழகத்தில் உள்ளன: கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் தொழில்நுட்பக் கழகம்.
- உலகெங்கும் உள்ள கல்விக்கூடங்களை அளவிட ஐந்து அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது, கல்வித் தரம். கல்விக்கூடங்களின் தரத்தை உலகின் தலைசிறந்த கல்வியாளர்கள் பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை போன்றவற்றால் கணிப்பார்கள். இரண்டாவது, நிறுவனங்களில் நற்பெயர்.
- அதாவது, ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களைக் குறித்து அந்நிறுவனம் வழங்கும் சான்றின் அடிப்படையில் பணியாளர்கள் படித்த கல்லூரிகளை மதிப்பிடுவார்கள்.
- மூன்றாவது, முக்கியமானது: ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கானது மட்டுமல்ல. அது ஆசிரியர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கிறமையமாகவும் திகழ வேண்டும். இந்த ஆய்வுகளை அவர்கள் ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டும்.
- அடுத்த ஐந்தாண்டு கால அளவில், இந்த ஆய்வுக் கட்டுரைகள் எத்தனை முறை மேற்கோள் காட்டப்படுகின்றன என்பதையும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் வைத்து மதிப்பெண்கள் வழங்கப்படும். நான்காவதாக, ஆசிரியர்-மாணவர் விகிதம். கடைசிக் கூறானது ஒரு நல்ல கல்விக்கூடத்துக்கு அயல் நாடுகளிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வர வேண்டும். நமது புகழ்பெற்ற கல்விக்கூடங்கள்கூட வெளிநாட்டவரை ஈர்ப்பதில்லை.
ஹாங்காங் முன்னுதாரணம்
- இந்த இடத்தில் எனது ஹாங்காங் அனுபவம் ஒன்றையும் இந்திய அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துகொள்வது சரியாக இருக்கும். 2007-08 கல்வியாண்டில், ஒரு ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினேன். எனது களம்சார்ந்த அனுபவங்களை ஒரு விரிவுரையாளரோடு பகிர்ந்துகொண்டேன். அந்த விரிவுரையாளர், மற்ற ஆசிரியர்களைப் போலவே மூன்றாண்டு ஒப்பந்தத்தில் பணியாற்றினார்.
- இந்த ஒப்பந்தக் காலத்தில் இவரது பயிற்றுவிக்கும் திறனை மாணவர்கள் மதிப்பிடுவார்கள். இவர் எழுதுகிற ஆய்வுக் கட்டுரைகள், அவை வெளியாகும் ஆராய்ச்சி இதழ்களின் தரத்தைப் பொறுத்து மதிப்பிடப்படும். இதுபோன்றவற்றின் அடிப்படையில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவரது ஒப்பந்த காலம் அடுத்த மூன்றாண்டுக்கு நீட்டிக்கப்படும். ஆகவே, ஹாங்காங் ஆசிரியர்கள் கற்றுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பணியாற்றும் கல்வி நிறுவனங்கள் பெரிதினும் பெரிதை அவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கும். அந்தக் கல்விச் சூழலில் புதிய புதிய ஆய்வுகள் நடந்தவண்ணம் இருக்கும்.
- சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேர்பெற்ற இந்தியப் பொறியியல் கல்லூரி ஒன்றில் சுரங்க ரயில் நிலையங்கள் குறித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நவீனக் கட்டுமானக் கூறுகள் ஏதொன்றையும் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆசிரியர்களில் பலர் அறிந்திருக்கவில்லை. அதைக் குறித்து அவர்கள் அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை.
- நமது கல்விக்கூடங்கள் பலவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மனனம் செய்து தேர்வுகளில் மறுஉற்பத்தி செய்கிற நிலை நீடிக்கிறது. இது மாற வேண்டும். ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் வளாகத்தின் நான்கு சுவர்களுக்கு வெளியே அறிவுப்புலத்திலும் தொழில் துறையிலும் என்னவெல்லாம் நடக்கிறது என்று அறிந்திருக்க வேண்டும்.
- அதை மாணவர்களுக்குக் கடத்திக்கொண்டிருக்கவும் வேண்டும். நமது கல்விச்சாலைகள் குறித்து வெளியாகும் செய்திகளில் ஆள்மாறாட்டங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் பாலியல் புகார்களும் இல்லாது ஒழிய வேண்டும்.
- அப்போதுதான் நமது பல்கலைக்கழகங்களிலிருந்து திறமான புலமை வெளிப்படும். அதை வெளிநாட்டார் வணக்கம் செய்வார்கள். ஹார்வர்டைப் போல கேம்பிரிட்ஜைப் போல நமது பல்கலைக்கழகங்களையும் தேடிவருவார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (24-10-2-2019)