- டேனியல் கானமென் (1934 -2024). உலகப்புகழ்பெற்ற உளவியல் ஆராய்ச்சியாளர். நடத்தைப் பொருளியலில் (Behavioural Economics) மிக முக்கியமான பங்களிப்பு வழங்கியவர். மனிதர்களின் முடிவெடுக்கும் செயல்பாடு சார்ந்து இவர் எழுதிய Thinking, Fast and Slow புத்தகம் புகழ்பெற்ற ஒன்று. அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 2002-ம் ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
- இஸ்ரேலிய - அமெரிக்கரான கானமென் கடந்த மார்ச் 27-ம் தேதி தன்னுடைய 90-வது வயதில் காலமானார். இந்தத் தருணத்தில் அவரது பங்களிப்பை நினைவு கூர்வது அவசியம்.
- நவீன சந்தைப் பொருளியலின் அடிப்படை அனுமானங்களில் ஒன்று, தனிமனிதர்கள் நுகர்வு மற்றும் உற்பத்தி சார்ந்து முடிவெடுக்கும்போது சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து மிகச் சிறந்த முடிவை எடுப்பதில் வல்லவர்கள். இந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே, பெரும்பாலான பொருளாதாரக் கொள்கை முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
- இத்தகைய சூழலில், இந்த அனுமானம் தவறானது என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிரூபித்தார் டேனியல் கானமென். (Daniel Kahneman)
- இதே கருத்தை பொருளாதார நோபல் அறிஞர் ஹெர்பர்ட் சைமனும் முன்வைத்திருந்தார். எனினும், அந்த வாதத்துக்கு தன்னுடைய ஆய்வின் மூலம் திடமான நிரூபணமும், தெளிவான வரையறையும் அளித்து அதற்கொரு கொள்கைவடிவத்தை உருவாக்கிய பெருமை டேனியல் கானமெனையே சேரும்.
- மனிதர்கள் தடுமாறுவார்கள்: மனிதர்கள் முடிவெடுப்பதில் சிறந்தவர்கள் என்பதால் அதுபற்றி மேலும் ஆராய்ச்சி தேவையில்லை. அவர்கள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை ஆராய்வதே போதுமானது என்று மற்றொரு நோபல் அறிஞர் மில்டன் ப்ரீட்மென் கூறிய நிலையில், அதை கானமென் மறுத்தார். மக்களின் முடிவெடுக்கும் செயல்முறையைப் பொருத்தே விளைவுகள் அமைகின்றன. எனவே, மனிதர்களின் முடிவெடுக்கும் செயல்பாட்டை ஆராய்வது அவசியம் என்று அவர் வாதிட்டார்.
- தனிமனிதர்கள் முடிவெடுக்கும் செயல்பாட்டை கானமென் இரண்டு விதமாகப் பிரித்தார். ஒன்று, ஒரு விஷயத்தைப்பற்றி விரைவாக முடிவெடுப்பது. உதாரணமாக, சாலையில் வாகனத்தை முந்திச்செல்லும்போது எதிரே வரும்வாகனத்தின் வேகத்துக்கு ஏற்ப முந்திச்செல்வதா அல்லது நின்று செல்வதா என்பது விரைவாக எடுக்கப்படக்கூடிய முடிவாகும்.
- இங்கே கவனிக்க வேண்டியது, எதிரே வரும் வாகனம் என்ன வேகத்தில் வருகிறது, முன்னே செல்லும் வாகனம் வேகத்தைக் கூட்டுமாஅல்லது குறைக்குமா போன்ற தகவல் சரியாகக்கணிக்க முடியாதது. இங்கே, மிக விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், மோசமான விளைவுகள் நேரிடலாம். இதுவே,திருமணம் போன்ற நீண்ட கால அடிப்படையிலான முடிவுகளுக்கு போதிய அவகாசம் எடுத்து அனைத்து விதமான தகவல்களையும் திரட்டி ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும்.
- சிலவேளைகளில் மனிதர்கள் விரைவாக முடிவு எடுக்கவேண்டிய தருணங்களில் மெதுவாகவும், மெதுவாக எடுக்க வேண்டிய தருணங்களில் விரைவாகவும் முடிவுகளை எடுக்கின்றனர். இதனால், மனிதர்கள் பொருளாதாரம் சார்ந்து சிறப்பாக முடிவெடுக்கக்கூடியவர்கள் என்ற அனுமானம் தவறானது என்றார் கானமென்.
- அதோடு மட்டுமன்றி, மனிதர்கள் மிக சுலபமாக எடுக்கக் கூடிய முடிவுகளில்கூட தவறுகள் செய்கின்றனர். அதேபோல் மக்கள் ஆதாயம் பெறுவதைவிடவும் இழப்பைத் தவிர்ப்பதில் அதிக முனைப்புக் காட்டுகின்றனர் என்பதைகானமென் தன் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.
- ஆதாயமும் இழப்பும்: ஒரே அளவுள்ள ஆதாயம் மற்றும் இழப்புஆகியவற்றை மக்கள் சமமாகவே பார்க்கின்றனர் என்று நவசெவ்வியல் (Neoclassical Economics) பொருளியல் கோட்பாடுகள் முன்வைக்கின்றன. இதையும் கானமென் கேள்விக்கு உள்ளாக்கினார்.
- உதாரணமாக, இரு நபர்களின் ஆண்டுவருமானம் ரூ.5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். நவசெவ்வியல் பொருளியல் இருவரின் பொருளாதார நலனையும் சமமாகவே மதிப்பிடுகிறது. ஆனால், ஒருவரின் வருவாய் ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகக் குறைந்தும் மற்றொருவரின் வருவாய் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சத்துக்கு உயர்ந்ததாகவும் வைத்துக்கொண்டால், இருவரின் பொருளாதார நலனையும் ஒன்றாக மதிப்பிட முடியாது.
- இருவருடைய வருவாயும் தற்போது சமமாகஇருப்பினும், உண்மையில் முன்னவர் நலம் குன்றியும் பின்னவர் சந்தோஷமாகவும் இருப்பர்.மேலும், ஒருவர் ரூ.2 லட்சம் வருவாயை இழக்கும்போது ஏற்படும் சோகமானது, அதே அளவு பணத்தை ஈட்டுவதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிட தீவிரமானதாக இருக்கும். எனவே, அரசின் கொள்கை முடிவுகள் மக்களின் மனநிலைக்கு தக்கவாறு மாற்றியமைக்கப்படவேண்டும் என்றார்.
- ஒருவருக்கு வரியை முன்னரே பிடித்துவிட்டு சம்பளத்தைக் கொடுப்பதும், மொத்த சம்பளத்தையும் கொடுத்துவிட்டு பின்பு அதிலிருந்து வரியை பிடித்தம் செய்வதும் வரி செலுத்துவோரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது நவசெவ்வியல் பொருளியலின் கூற்று.
- ஆனால், கானமெனின் கூற்றுப்படி, முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டுப் பின்பு வரியை எடுப்பது மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தும் என்பதாகும். அதேபோல், மானியங்களைக் கொடுத்துவிட்டு பின்பு அவற்றைத் திரும்பப் பெறுவது பொதுநல இழப்பை ஏற்படுத்தும் என்றார்.
- மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் தவறுகளுக்கு உட்பட்டவை. ஒருவர் எடுக்கும் முடிவு, அவரின் தன்மையையும், திறனையும் பொருத்தது. பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்யும் தவறை அடுத்த முறை திருத்திக் கொள்வதில்லை. மீண்டும் அதே தவறான முடிவைதான் எடுக்கின்றனர். ஒரு நாட்டில், கணிசமான மக்கள் இம்மாதிரியான முடிவுகள் எடுப்பின் அந்த நாட்டில் ‘அதிக சந்தை, குறைந்த அரசு’ என்ற கொள்கை தோல்வியடையும். இதை நிவர்த்தி செய்ய, குறைந்த அரசு என்பதற்குப் பதிலாக தேவைப்படும் நேரத்தில், தேவையான அளவு அரசின் தலையீடு இன்றியமையாதது என்பது அவரது ஆய்வின் சாராம்சம்.
- கானமெனைப் பற்றி நாம் பேசுகையில் தவறவிடக்கூடாத ஒரு பெயர் அமோஸ் ட்வெர்ஸ்கி(Amos Tversky). கானமெனும் ட்வெர்ஸ்கியும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சிதான் கானமெனுக்கு நோபல் பரிசு கிடைக்க காரணமாக அமைந்தது. நோபல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அமோஸ் உயிரோடு இல்லை. இதனால், கானமெனுக்கு மட்டும் நோபல் வழங்கப்பட்டது.
- பொருளியல் ஆராய்ச்சியில் இருவரின்பங்களிப்பு, எண்ணற்ற இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு தூண்டுதலாக அமையப்பெற்று அரசுக் கொள்கைகளில் வியக்கத்தகு மாற்றங்களைக் கொண்டுவந்தபடி உள்ளது. அது எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது திண்ணம்.
- ஹிட்லரின் பிடியிலிருந்து தப்பிய சிறுவன்: யூதர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கொலைக்களத்துக்கு அனுப்புவதற்காக சிறப்புக் காவலர்களை ஜெர்மனி அரசு நியமித்திருந்த காலகட்டம் அது.
- சிறு வயதில் கானமென் தன்னுடைய நண்பன் வீட்டில் விளையாடிவிட்டு மாலை 6 மணிக்குமேல் ஆள் அரவம் இல்லாத தெருவில் நடந்து சென்றபொழுது, அவ்வாறான ஒரு காவலரின் கண்ணில் பட நேர்ந்தது.
- மிகுந்த பயத்துடன் அந்தக் காவலரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தார். ஆனால், அந்தக் காவலரோ கானமெனை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தார். கானமெனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திகைத்துபோய் நின்றார்.
- அந்தக் காவலர் கானமெனை எதுவும் செய்யவில்லை. தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்த அந்தக்காவலர், “நீ என் மகன் போல் இருக்கிறாய். இங்கிருந்து தப்பியோடி விடு” என்று கானமெனை அணைத்தபடி உணர்ச்சி வசப்பட்டார்.கானமெனுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அன்றைய தினம் அந்தக் காவலர் எடுத்த மனிதாபிமான முடிவுதான் கானமென் என்ற மாமேதையை நமக்கு விட்டுச்சென்றது!
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 04 – 2024)