- இந்தியாவில், பன்னாட்டு நிறுவனமான ‘நெஸ்லே’ சந்தைப்படுத்தும் குழந்தைகளுக்கான இணை உணவில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாகச் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
- சுவிஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘பப்ளிக் ஐ’யும் (Public Eye) ‘சர்வதேசக் குழந்தை உணவு நடவடிக்கைக் கூட்டமை’வும் (IBFAN) வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தகவல் வந்திருக்கிறது. பல்வேறு உலக நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் ‘நெஸ்லே’யின் குழந்தை உணவுத் தயாரிப்புகளில், சர்க்கரை உள்ளடக்கத்தில் அப்பட்டமான வேறுபாடுகள் இருப்பதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
- சமீபத்தில், உலக அளவில் ‘நெஸ்லே’யின் 150 வகைக் குழந்தை உணவுத் தயாரிப்புகளை இந்த நிறுவனங்கள் ஆய்வுசெய்தன. இவற்றில் இந்தியாவிலிருந்து மட்டும் ‘நெஸ்லே’யின் 15 வகைத் தயாரிப்புகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளிலும், ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ‘நெஸ்லே’வின் உணவுத் தயாரிப்புகள், ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைவிட மிக அதிக அளவு சர்க்கரையைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இந்தியாவில் விற்கப்படும் ‘செரிலாக்’ (Cerelac) இணை உணவில், ஒரு கரண்டிக்கு 2.7 கிராம் சர்க்கரை அதிகமாக உள்ளதாகவும், பிலிப்பைன்ஸில் அதிகபட்சமாக 7.3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பிரிட்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டுச் சந்தைகளில் அதே உணவில் சர்க்கரையே இல்லை என்றும் இந்த நிறுவனங்களின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பாரபட்சத்தைத் தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி தேசிய நுகர்வோர்க் குறைதீர் அமைச்சகம் (Consumers Affair Ministry) இந்திய உணவுப் பாதுகாப்பு - தரப்படுத்துதல் ஆணையத்துக்குக் (Food Safety and Standards Authority of India) கடிதம் எழுதியுள்ளது.
- சர்க்கரை ஏன் பிரச்சினை ஆகிறது? குழந்தைகளின் உணவு ஆவலைத் தூண்டுவதற்கு இணை உணவுகளில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பொதுவாகப் பால், பழங்களில் கிடைக்கும் இயற்கைச் சர்க்கரையைப் பயன்படுத்தும்போது பிரச்சினை இல்லை. செயற்கையாகத் தயாரிக்கப்படும் சர்க்கரையும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையும்தான் பிரச்சினை செய்பவை. இவற்றைச் ‘சேர்க்கைச் சர்க்கரை’ (Added Sugars) என்கிறோம். அடுத்து, உலக சுகாதார நிறுவனம் இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் இணை உணவில் சர்க்கரையே சேர்க்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது. இந்த மாதிரியான விதிமுறைகளுக்கு மாறாக உணவு தயாரிக்கப்படும்போது சர்க்கரை பிரச்சினை ஆகிறது.
- உதாரணத்துக்கு ‘நெஸ்லே’யின் கோதுமை, ஆப்பிள் கலந்த இணை உணவில் (Wheat Apple Baby Cereal) 100 கிராம் மொத்தச் சர்க்கரையில் 24 கிராம் சர்க்கரை மால்டோடெக்ஸ்ட்ரின் (Maltodextrin), டெக்ஸ்ட்ரோஸ் (Dextrose) எனும் ‘சேர்க்கைச் சர்க்கரை’களில் தயாரிக்கப்படுகிறது. இதை, 8 மாதக் குழந்தை முதல் இரண்டு வயதுக் குழந்தை வரை பயன்படுத்தவும், குழந்தை ஒன்றுக்குத் தினமும் 100 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. அப்படியென்றால், அந்தக் குழந்தை தினமும் 24 கிராம் ‘சேர்க்கைச் சர்க்கரை’யை எடுத்துக்கொள்கிறது என்று பொருள்.
- இயல்பில், சிறு குழந்தைகள் தாய்ப்பால் அருந்திப் பழக்கப்பட்டவை. தாய்ப்பாலில் ‘லேக்டோஸ்’ எனும் சர்க்கரை இருக்கிறது. இது இயற்கையானது. இதில் இனிப்பு குறைவு. தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, ‘செரிலாக்’ போன்ற இணை உணவுக்கு மாறும்போது, குழந்தைகளுக்கு அதிக இனிப்பு கிடைக்கிறது. இதனால் அந்தக் குழந்தைகள் இனிப்புச் சுவை மீது ஆர்வம் கொள்கின்றன; வளரும் பருவத்தில் இனிப்புள்ள உணவு வகைகளைத்தான் தேடுகின்றன. அதோடு, தினமும் 24 கிராம் ‘சேர்க்கைச் சர்க்கரை’யும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இன்சுலினைச் சுரக்கும் கணையத்துக்கு இது சுமையைக் கூட்டுகிறது. இதன் விளைவாக, கணையத்தில் இன்சுலின் அதிகம் சுரக்கிறது. இது சர்க்கரை நோய்க்கும் உடல் பருமனுக்கும் வழி வகுக்கிறது.
- மேலும், அதிக இனிப்பு காரணமாகக் குழந்தைகள் அளவுக்கு மீறி இணை உணவுகளைச் சாப்பிட்டுவிடலாம். அப்படி அதிகரித்துவிட்ட சர்க்கரையானது கல்லீரலில் ‘டிரைகிளிசரைடு’ (Triglyceride) எனும் ஒருவிதக் கொழுப்பு வகையாக மாற்றப்பட்டுச் சேமிக்கப்படும். இது ‘கொழுப்புக் கல்லீர’லுக்குப் (Fatty Liver) பாதை போடும். அடுத்து, ‘மால்டோடெக்ஸ்ட்ரின்’ சர்க்கரைக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் கூட்டும் அளவு (Glycaemic Index) அதிகம். இதனால், இணை உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு இளம்பருவத்திலேயே சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கிறது. பல் சொத்தை, உயர் ரத்தஅழுத்தம், இதய நோய் எனப் பல நோய்களும் அடுத்தடுத்து ஏற்படலாம். இந்தியாவில் ஏற்கெனவே 10 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்; ஐந்து வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் ஒன்றரைக் கோடிப் பேர் உடல் பருமன் உள்ளவர்கள். ‘சேர்க்கைச் சர்க்கரை’ இணை உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தியாவின் நோய்ச்சுமை இன்னும் அதிகரிக்கக்கூடும். அது நாட்டின் பொருளாதார வளத்தைப் பாதிக்கும்.
- விதிமுறைகளில் குளறுபடிகள்: 2020இல் விதிக்கப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கான உணவு) விதிமுறைகள் (Food Safety and Standards (Foods for Infant Nutrition) Regulations-2020), பலவீனமாக இருப்பதும், தெளிவில்லாமல் இருப்பதும், வணிக அறம் குறைந்துபோவதற்கு ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, குழந்தைகளுக்கான இணை உணவில் சர்க்கரையைச் சேர்க்க இந்த விதிமுறை அனுமதிக்கிறது. இதை ஓர் அனுகூலமாக எடுத்துக்கொண்டு, உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் சர்க்கரையைச் சேர்த்துவிடுகின்றன. ஆகவே, இந்த விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- மேலும், நுகர்வோருக்கு எது ‘ஆரோக்கிய உணவு’ (Healthy Food), எது ‘ஆரோக்கியமற்ற உணவு’ (Unhealthy Food) என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மேற்சொன்ன விதிமுறைகளில் இவை குறித்த சரியான வரையறை தரப்பட்டிருக்க வேண்டும். இந்த வரையறை விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கும் இந்திய உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைச் சீரமைக்க வேண்டும்.
- இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான உணவுத் தயாரிப்புகளில் எச்சரிக்கை நட்சத்திரக் குறியீடுகள்தான் காணப்படுகின்றன. சாமானியருக்கு அவை புரிவதில்லை. ஆகவே, நட்சத்திரக் குறியீடுகளுக்குப் பதிலாக, அந்தந்த உணவில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவை எந்த அளவில் உள்ளன என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் வாசகங்களை வெளியிடச் சொல்லலாம். ‘நெஸ்லே’யின் உணவுத் தயாரிப்புகளில் விட்டமின் அளவைத் தெரிவித்திருக்கும் அளவுக்குச் சர்க்கரை அளவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
- தேசியச் சந்தையில், குழந்தைகளின் இணை உணவு வணிகத்தைக் கூட்டுவதில் ஊடக விளம்பரங்களின் பங்கு அதிகப்படியானது. இந்தியாவில், ‘குழந்தைக்கான பாலுக்கான மாற்று உணவு சட்ட’த்தின் கீழ் (Infant milk substitutions act) குழந்தை உணவு வகைகளை ஊடகங்களில் விளம்பரப்படுத்தக் கூடாது. ஆனால், இந்த விதி மீறப்படுவதை நாடே அறியும். இனியாவது விதி மீறும் நிறுவனங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- தேவை அறம் சார்ந்த வணிகம்: ‘நெஸ்லே’ நிறுவனம் உணவுத் தயாரிப்பு விஷயத்தில் சர்ச்சைக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல! உதாரணத்துக்கு, 2015இல் ‘மேகி நூடுல்ஸ்’ விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதை இங்கு நினைவுகூரலாம். 2022இல் இணை உணவில் மட்டும் இந்த நிறுவனம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாக வணிகம் செய்திருக்கிறது. வணிகப் போட்டி, வணிக அறத்தை இரண்டாம்பட்சம் ஆக்கிவிட்டது. ஒரு நாட்டின் பொருளாதார வளத்துக்கு வணிக ஆதாரம் முக்கியமானதுதான். அதேவேளையில், அந்த வணிகம் சமூக நலன் சார்ந்ததாகவும், அறம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டியது அதைவிட முக்கியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 04 – 2024)