TNPSC Thervupettagam

நோய்தீர்க்கும் மருந்துகளே நஞ்சாகும் அபாயம்!

December 10 , 2019 1860 days 1501 0
  • முதலில் ஒரு பின்னோட்ட நிகழ்வு. உலகில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து பெனிசிலின். அதைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளமிங் 1945-ல் நோபல் பரிசு பெற்ற மேடையில் சொன்னது இது: ‘உயிர்களின் வாழ்க்கைச் சுழற்சியில் கிருமிகளைப் போன்ற சாமர்த்தியசாலிகள் வேறு எதுவுமில்லை.
  • அவை இருபதே நிமிடங்களில் இரு மடங்காகப் பெருகுவதிலும் சரி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் மரபணுக்களின் வடிவத்தை மாற்றிக்கொள்வதிலும் சரி, படுவேகமாகச் செயல்பட்டு, எதிர்ப்பாற்றல் கொண்ட மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு உடனே கடத்திவிடும். இதன் காரணமாக, வழக்கமாக நாம் கொடுக்கும் மருந்துகளை எதிர்த்து நின்று ஜெயித்துவிடும்; ஏமாறப்போவது நாம்தான்.’ அவரது கூற்று இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சமீப காலமாக, ஆன்டிபயாடிக்குகளின் அதீதப் பயன்பாடு பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவருகிறது.
  • நவீன மருத்துவத்தின் அபார வளர்ச்சிக்கு அடிப்படையே ஆன்டிபயாடிக் மருந்துகளின் கண்டுபிடிப்புதான். இவற்றின் வரவால் உலகில் மனித உயிர்களைக் கொத்துக்கொத்தாகக் காவு வாங்கிக்கொண்டிருந்த பிளேக், காலரா போன்ற தொற்றுநோய்கள் ஒழிந்துபோனது உண்மை. அதேநேரத்தில், அந்த மருந்துகள் இரட்டைமுனைக் கத்தி போன்றவை; பலனும் உண்டு, பக்கவிளைவும் உண்டு.
  • ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுக்கும் ஆன்டிபயாடிக்கைப் பாதியில் நிறுத்தினால், விட்டுவிட்டுச் சாப்பிட்டால், தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளாமல் குறைத்தோ அதிகமாகவோ சாப்பிட்டால், மருந்தின் தரம் குறைவாக இருந்தால், தேவையில்லாத மருந்தாக இருந்தால் உடலில் அந்த நோயை உண்டாக்கிய கிருமிகள் முழுவதும் அழியாமல்போகலாம்.
  • அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க மீதமுள்ள கிருமிகள், அந்த மருந்துகளையே எதிர்க்கும் கிருமிகளாக (Antibiotic resistance) உருமாறிக்கொள்ளும். இவை ‘மிகை உயிரிகள்’ (Superbug) என அழைக்கப்படுகின்றன. இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகள் தேவைப்படும். ஆனால், அவற்றின் பக்கவிளைவுகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
  • அதேசமயம், அந்தப் புதிய மருந்தும் பயன்படாத மருந்துப் பட்டியலுக்கு ஒருநாள் சென்றுவிடக்கூடும். அப்போது அடுத்ததொரு புதிய மருந்து தேவைப்படும். இது ஒரு சுழற்சியாக நிகழும். இது மனித ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதல்ல.

சவால் விடும் கிருமிகள்

  • நிமோனியா, சிறுநீரக நோய், நீரிழிவு, நச்சுக்குருதி நோய் (Septicaemia), மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை தருவதற்கும், அவசர அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்றுச் சிகிச்சை போன்றவற்றுக்கும் ஆன்டிபயாட்டிக்குகளையே எதிர்த்துப் போராடும் மிகை உயிரிகள் உடலில் வளர்ந்து சவால்விடுவது இப்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலைமை உலகம் முழுவதுமே இருக்கிறது என்றாலும், இந்தியாவில் இது மிகவும் மோசம். அமெரிக்காவில் மிகை உயிரிகள் காரணமாக ஒரு லட்சம் பேரில் 200 பேர் இறக்கிறார்கள் என்றால், இந்தியாவில் 461 பேர் இறக்கிறார்கள்.
  • சமீபத்தில், மிகை உயிரிகளின் எதிர்ப்பாற்றலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆன்டிபயாட்டிக்குகளை சாதாரணமாகப் பயன்படுத்தக் கூடியவை (Access), கவனமாகக் கையாள வேண்டியவை (Watch), பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டியவை (Reserve) என மூன்று விதமாகப் பிரித்துப் பயன்படுத்தும்படி மருத்துவர்களை அறிவுறுத்தியு ள்ளது உலக சுகாதார நிறுவனம்.
  • இந்த நெறிமுறைகளை எல்லா மருத்துவர்களும் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுதான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்குச் சுமார் ரூ.52 கோடி வணிகம் ஆண்டிபயாடிக்குகளால் கிடைக்கின்றன. தேவையில்லாமலும் அதிக அளவிலும் ஆன்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
  • ஆயிரம் பேரில் 412 பேருக்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் 0-4 வயதுள்ள 1,000 குழந்தைகளில் 636 பேர் என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது இந்தியப் பொதுச் சுகாதார நிறுவனம்.
  • பிரச்சினை என்னவென்றால், வைரஸ் நோய்களுக்கு ஆன்டிபயாடிக்குகளைக் கொடுப்பது வீண் எனத் தெரிந்தும் சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், சுவாசக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்குக்கூட வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகளை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான். அடுத்து, மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால்கூடப் பொது மக்கள் சுயமாகவே ஆன்டிபயாடிக்குகளை வாங்கிப் பயன்படுத்துவதும் நிகழ்கிறது.
  • இதைப் பயன்படுத்தி, மருந்து நிறுவனங்களும் லாபநோக்கில் சாதாரண நோய்களுக்கும் வீரியமுள்ள ஆன்டிபயாட்டிக்குகளை முனைந்து பரிந்துரைக்கின்றன. இதனால் பலியாவது பொதுமக்களும், பிஞ்சுக் குழந்தைகளின் ஆரோக்கியமும்தான்.
  • முக்கியமாக, உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவிடுகிறது. வழக்கமான ஆன்டிபயாடிக்கு களுக்குக் கிருமிகள் எதிர்ப்பாற்றல் பெற்றுவிடு கின்றன; நோய் நீடிக்கிறது; சாதாரண நோய்களுக்குக் கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அனைத்துக்கும் மேலாக, இவர்களிடமிருந்து அடுத்தவர்களுக்கு இந்தக் கிருமிகள் பரவும்போது அவர்களுக்கும் வீரியம் மிகுந்த மருந்துகளே தேவைப்படுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?

  • மேல்நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஓர் ஆன்டிபயாடிக்கையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் அது முடியும். மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழிசெய்கிறது. மருந்து விற்பனையாளர்களும் சுயமாகவே மக்களுக்கு மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் போக்கும் இருக்கிறது. இதன் விளைவால், இந்தியாவில் 53% பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துகின்றனர். மத்திய - மாநில அரசுகள் தகுந்த கொள்கை முடிவு செயல்திட்டங்களால் இதற்கு உடனடியாகக் கடிவாளம் போட வேண்டும்.
  • மருத்துவர்கள் ஆன்டிபயாடிக்குகளை அறம் சார்ந்து பரிந்துரைப்பதும், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து பயனாளிகளுக்குச் சரியாக வழிகாட்ட வேண்டியதும் முக்கியம். பயனாளிகள் தங்களுக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கப்படும்போது மருத்துவரிடம் அது தேவைதானா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் உரிமை உண்டு. சாதாரண வைரஸ் நோயாக இருந்தால், பயனாளிகள் ஆன்டிபயாடிக்கை எடுக்காமல் பொறுமை காக்கலாம்.
  • அப்படி பொறுமை காப்பவர்களுக்கு மருத்துவர்களும் ஆன்டிபயாடிக்கைக் கொடுப்பதற்கு அவசரப்பட மாட்டார்கள்; அவசரம் காட்டவும் கூடாது. புதியதொரு நோய்க்கு ஏற்கெனவே எடுத்த மருந்துகளையோ, மிச்சமிருக்கும் மருந்துகளையோ தாங்களாகவே பயன்படுத்தக் கூடாது. நோயைச் சரியாகக் கணித்துத் தரப்படும் மருந்துகளை மருத்துவர் கூறும் அளவின்படி சரியான காலத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

மிகை உயிரி பாதிப்பு

  • பொதுச்சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும், சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான உணவுக்கு உத்தரவாதம் கொடுப்பதும் மக்களின் நலன் காக்கும் அரசுகளின் கடமைகள். அதன் மூலம் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்திவிடலாம்.
  • அனைவரும் முறைப்படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதாலும் சுயசுத்தம் பேணுவதாலும் பலதரப்பட்ட தொற்றுநோய்களைத் தடுக்க முடியும். அப்போது ஆன்டிபயாட்டிக்குகளின் தேவை குறைந்துவிடும். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, எந்த ஆன்டிபயாடிக் தேவை என்பதை அறியும் பரிசோதனைக் காலத்தைக் குறைத்தால், தகுந்த மருந்துகளை உடனே கொடுத்துவிடலாம்; தேவையற்ற மருந்துகள் தரப்படுவதைத் தவிர்த்து விடலாம்.
  • நம் பொது ஆரோக்கியத்தில் மிகை உயிரிகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ‘சுனாமி’களைத் தடுப்பதற்கு மக்கள், மருத்துவர், சுகாதாரப் பணி யாளர், மருந்துக்கடைப் பணியாளர், மருந்து நிறுவனம், அரசுகள் என அனைத்துத் தரப்பினரும் சமூக நோக்குடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories