- மே மாதம் முதல் நாளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியிருக்கின்றன. அக்கூட்டங்களில் ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளும் அரசின் பல்வேறு துறைசார் அலுவலர்களும் பங்கேற்று, மக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்தும், உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் திட்டப்பணிகள் குறித்தும் கலந்துரையாடினர் என்பதை ஊடகங்களும் அரசு அறிக்கைகளும் விரிவாகப் பதிவுசெய்திருக்கின்றன.
- சில ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடியிருக்கிறார்கள். இது மக்களாட்சியின் வலிமையை உணர்த்துவதாக உள்ளது. அதே நேரத்தில், இப்படியான வாய்ப்பு, தங்களுக்கு இன்னமும் முறையாக வழங்கப்படவில்லை என்ற மனக்குமுறல் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதி மக்களிடையே நிலவிவருவதைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியமிருக்கிறது.
உள்ளாட்சிகளுக்கான சபைகள்:
- உள்ளாட்சிகள்தான் மக்களாட்சியின் ஆணிவேர். வலிமையான உள்ளாட்சிகளே நாட்டு முன்னேற்றத்துக்கான அடிப்படை. ஆதலால் உள்ளாட்சிகளுக்குக் கூடுதல் வலிமை சேர்க்கும் நோக்கில் 1992இல், வரலாற்றுச் சிறப்புமிக்க 73, 74ஆம் திருத்தங்களின்படி இந்திய அரசமைப்பில் பல்வேறு கூறுகள் உள்ளீடு செய்யப்பட்டன.
- அவற்றுள், உள்ளாட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் உள்ளாட்சி, அரசு அலுவலர்களிடம் நேரில் தெரிவித்தல், அரசால் உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் / செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளக்கங்கள் பெற வாய்ப்பளித்தல், நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட சீரிய நோக்கங்களுக்காக, உள்ளாட்சிப் பகுதிகளில் மக்கள் நேரடியாகப் பங்கேற்க வழிவகுக்கும் சபைகளை உருவாக்குதல், அவற்றின் செயல்பாடுகள் குறித்த கூறுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
- அதன்படி, ஊராட்சிகளில் கிராம சபையும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு குழு (Ward Committee), பகுதி சபை (Area Sabha) ஆகியவையும் அமைக்கப்பட வேண்டும். இவற்றுள் ஊராட்சிப் பகுதிகளுக்கான கிராம சபை பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படத் தொடங்கி, தற்போதும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வார்டு குழு, பகுதி சபை ஆகியவை இதுவரை முறையாக நடைமுறைக்கு வரவில்லை. இதனாலேயே கிராம சபைக் கூட்டம் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் நகர்ப்புற மக்களுக்கு மேற்சொன்ன மனக்குமுறல்கள் வந்துசெல்கின்றன.
கடந்து வந்த பாதை:
- இந்திய அரசமைப்பின் 73, 74ஆம் திருத்தங்களின் அடிப்படையிலான தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்கள் 1994ஆம் ஆண்டிலேயே அறிக்கையிடப்பட்டுவிட்டன. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில், வார்டு குழு, பகுதி சபை ஆகியவை அமைக்கப்படுவதற்குரிய பிரிவுகள் நகர்ப்புற உள்ளாட்சிச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
- பின்னர், மிகவும் தாமதமாக, 2010இல் அறிக்கையிடப்பட்ட சட்டத்திருத்தங்களின்படி, மேற்கண்ட குழுக்களும் சபைகளும் அமைக்கப்பட வகைசெய்யும் பிரிவுகள் நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. ஆனாலும் அச்சபைகள் செயல்படுத்தப்படுவதற்கு உரிய விதிமுறைகள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
- 2022 ஜூன் மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு குழு, பகுதி சபை அமைவு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விதிகள் அறிக்கையிடப்பட்டன. 2021இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசு, உள்ளாட்சிகளது நிர்வாக மேம்பாட்டுக்காக எடுத்துவரும் முனைப்பான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
- இவ்வாறு இந்திய அரசமைப்பில் 1992இல் உள்ளீடு செய்யப்பட்ட ஒரு கூறு, செயல்வடிவம் பெறுவதற்கு சுமார் 30 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், இதே அம்சம் ஊரக உள்ளாட்சிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஒரே அம்சம் குறித்த செயல்பாடுகளில் ஒரே அரசாங்கத்தின் இருவேறு துறைகளில் முரண்பட்ட சூழல் நிலவுவது கவலைக்குரியது.
முதல் கூட்டம்:
- மேற்குறித்த சபைகளுக்கான விதிகள் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, உடனடியாக ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சியிலும் வார்டு குழுக்கள், பகுதி சபைகள் அமைக்கப்படவும், உள்ளாட்சி தினக் கொண்டாட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பகுதி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் அரசு ஆணையிட்டது. அதன் தொடர்ச்சியாக 2022 நவம்பர் 1 அன்று பல நகர்ப்புற உள்ளாட்சிகளில் பகுதி சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
- தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் ஆறாவது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டு, முதல் கூட்டத்தைத் தொடங்கிவைத்து மக்களிடையே கலந்துரையாடினார். அதே நாளில், அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் களும் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். ஆனால், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அனைத்து வார்டுகளிலும் பகுதி சபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை என்பதே கள நிலவரம்.
- முதன்முறையாக நடைமுறைக்கு வருவதால், காலதாமதம், முறையான அறிவிப்புகள் இல்லாமை, கூட்டம் நடத்தப்படாமை அல்லது நடத்த இயலாமை உள்ளிட்ட தொடக்கநிலை இடர்ப்பாடுகள் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆதலால், இந்த இடர்ப்பாடுகள் களையப்பட்டு, எந்த விடுபடலும் இல்லாமல் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அனைத்து வார்டுகளிலும் அடுத்த கூட்டம் தவறாது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்துவந்தது. விதிகளின்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் இதுவரை இக்கூட்டம் நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
- இந்த இடைப்பட்ட காலத்தில், குடியரசு நாள் (26.01.2023), உழைப்பாளர் நாள் (01.05.2023) ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தேறியுள்ளன. இந்நிலையில், கடந்த காலங்களைப் போலவே தற்போதும் நகர்ப்புறங்களுக்கான சபைகள் கூட்டப்படாமலேயே போய்விடுமோ என்ற ஐயப்பாடு அல்லது அச்சம் நகர்ப்புற மக்களிடம் எழுவது இயல்பானதே.
- சபை அமைவு, அதன் நடவடிக்கைளுக்கான விதிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டிருந்தும் இக்கூட்டங்கள் உரிய காலத்தில் நடத்தப்படாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், அவற்றிலுள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் பங்கேற்கும் பகுதி சபைக் கூட்டம் நடைபெறும் நாளை எதிர்பார்த்து நகர்ப்புற மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், அவற்றிலுள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் பங்கேற்கும் பகுதி சபைக் கூட்டம் நடைபெறும் நாளை எதிர்பார்த்து நகர்ப்புற மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நன்றி: தி இந்து (11 – 05 – 2023)