TNPSC Thervupettagam

பக்கத்து வீடு: ஒரு மருத்துவர் விண்வெளிக்குச் சென்ற கதை

June 23 , 2024 26 days 68 0
  • மருத்துவர், விண்வெளி வீராங்கனை, ஆராய்ச்சியாளர் எனத் தன் வாழ்நாளை மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் ஜப்பானின் சியாகி முகாய்.
  • 1952ஆம் ஆண்டு சியாகி பிறந்தபோது இரண்டாம் உலகப் போரின் விளைவுகளிலிருந்து ஜப்பான் மெதுவாக மீண்டுகொண்டிருந்தது. அதனால், பெண் குழந்தைகளிடம் மருத்துவராக வேண்டும், விண்வெளி வீரராக வேண்டும் என்கிற கனவோ லட்சியமோ இருக்கவில்லை.
  • முதல் மனிதராக யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றதையும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வாலண்டீனா முதல் பெண்ணாக விண்வெளிக்குச் சென்றதையும் படித்தபோது, ஒன்பது வயது சியாகிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவைப் போல் ஜப்பான் விண்வெளித் திட்டங்களில் ஈடுபடவில்லை என்பதால் அவருக்கு விண்வெளி வீரராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் தோன்றவில்லை.
  • நோயால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு மருத்துவப் பிரிவுகளில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றார். அந்தப் பல்கலைக்கழகத்தில் இதய அறுவைசிகிச்சையில் பட்டம் பெற்ற முதல் பெண் என்கிற சிறப்பைப் பெற்றார் சியாகி. இதய அறுவைசிகிச்சை நிபுணராக மருத்துவமனையிலும் மருத்துவப் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.
  • “கடினமான புதிர்களுக்கு விடை தேடுவது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. சவாலான வேலைகளை விரும்பிச் செய்வேன். அப்போது விண்வெளிக்குச் செல்வதற்கான அறிவிப்பு வந்தது. ஒரு மருத்துவராக விண்வெளியில் மனிதர்களின் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் சிக்கல்களை என்னால் புரிந்துகொள்ளவும் அவற்றைச் சரிசெய்வதற்கான வழி தேடவும் முடியும் என்பதால், விண்ணப்பித்தேன்” என்கிறார் சியாகி.
  • விண்ணப்பம் அனுப்பிவிட்டாலும் தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று அவர் நினைக்கவில்லை. விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் ஆங்கில மொழியிலும் தன் உடல் வலுவையும் மேம்படுத்த வேண்டியிருந்தது. கடினமாக உழைத்தார். உடல் வலுவிலும் மொழியிலும் தேர்ச்சியடைந்தார். அமெரிக்காவில் விண்வெளிக்குச் செல்வதற்கான பயிற்சிகள் ஆரம்பித்தன.
  • “விண்வெளிக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. கடைசி நேரம் வரை திட்டம் நிறுத்தப்படுவதற்கோ தாமதப்படுவதற்கோ வாய்ப்புகள் இருக்கின்றன. 1986இல் சேலஞ்சர் விண்கலம் வெடித்துச் சிதறியதில் நான் சில நண்பர்களை இழந்தேன். என் உடல் நடுங்கியது. தொழில்நுட்பத்தின் மேல் அதீத நம்பிக்கை வைக்கும் மனிதர்களின் ஆணவத்தின் மேல் விழுந்த அடியாக இதைப் பார்த்தேன்.”
  • சேலஞ்சர் விபத்தின் காரணமாக சியாகி செல்லும் விண்வெளித் திட்டம் இடை நிறுத்தப்பட்டது. அவருடைய பயிற்சிக் காலம் நீடித்தது.
  • நீண்ட காத்திருப்புக்குப் பின், 1994ஆம் ஆண்டு கொலம்பியா விண்வெளி ஓடத்தில் விண்வெளி வீராங்கனையாக 42 வயது சியாகி பயணம் மேற்கொண்டார். 15 நாள்கள் கொலம்பியாவில் தங்கியிருந்து, 236 முறை பூமியை வலம்வந்தார். இதில் 82 மைக்ரோ கிராவிட்டி (நுண் ஈர்ப்பு) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக விண்வெளி உயிர் அறிவியல், மைக்ரோ கிராவிட்டி அறிவியலைப் பற்றிய சோதனைகளாக இவை இருந்தன. மனிதர்களின் நரம்பு மண்டலம், எலும்பு, தசை வளர்சிதை மாற்றம், இதய அமைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட சோதனைகளில் சியாகி பங்கேற்றார்.
  • “விண்வெளிக்குச் சென்ற முதல் ஜப்பானியப் பெண், முதல் ஆசியப் பெண் என்றெல்லாம் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் ஒரு பெண்ணாக இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை, நான் ஒரு பெண்ணாக அந்தப் பணிகளை நிறைவேற்றவும் இல்லை. எல்லாரும் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் இருந்தது எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். எனக்கு என்னவோ ஈர்ப்பு விசை இருக்கும் பூமியில் இருப்பதுதான் பிடித்திருக்கிறது. ஆனால், விண்வெளி அனுபவம் மகத்தானது” என்கிறார் சியாகி முகாய்.
  • 1998ஆம் ஆண்டு டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு சியாகிக்கு வந்தது. மகிழ்ச்சியாக இரண்டாவது பயணத்தையும் மேற்கொண்டார். ஒன்பது நாள்களில் 134 முறை பூமியை வலம்வந்தார். பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டுப் பூமிக்குத் திரும்பினார்.
  • இனி என்ன செய்வது? பல ஆண்டுகள் மருத்துவராகத் தன் பணியைச் செய்ய முடியாததால், ஒரு மருத்துவராக நீடிக்க சியாகியால் இயலவில்லை. அமெரிக்காவில் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். பிறகு ஜப்பானுக்கு வந்து, அங்கும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராக, துணைத் தலைவராகப் பல பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்தார்.
  • “விண்வெளிக்குச் சென்றதால் ஒரு பொறுப்பு மிக்க மருத்துவராக உங்களால் பணியாற்ற முடியவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள். இதய அறுவைசிகிச்சை நிபுணராக நான் பணியைத் தொடர முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், விண்வெளியிலும் நான்சார்ந்த மருத்துவத் துறை பரிசோதனைகளைத்தான்மேற்கொண்டேன். அதற்குப் பிறகும் மருத்துவ ஆராய்ச்சிகளில்தான் என் வாழ்நாளைக் கழித்தேன். நிலவுக்குச் செல்வீர்களா என்று கேட்கிறார்கள். தனியாரிடம் அவ்வளவு பணத்தைக் கொடுத்து நிலவுக்குச் செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. நிலவுக்குச் செல்பவர்களுக்கு வழிகாட்டியாகச் செல்ல வேண்டுமானால் என்னை அழைக்கலாம்” என்கிறார் சியாகி முகாய்.
  • “விண்வெளிக்குச் சென்ற முதல் ஜப்பானியப் பெண், முதல் ஆசியப் பெண் என்றெல்லாம் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் ஒரு பெண்ணாக இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை, நான் ஒரு பெண்ணாக அந்தப் பணிகளை நிறைவேற்றவும் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories